என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை டெஸ்ட்: இந்தியா பதிலடி; 3-வது நாள் ஆட்ட முடிவில் 391/4
    X

    சென்னை டெஸ்ட்: இந்தியா பதிலடி; 3-வது நாள் ஆட்ட முடிவில் 391/4

    சென்னையில் நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்டின் 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் குவித்துள்ளது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவித்தது. மொயீன் அலி அதிகபட்சமாக 146 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பில் ஜடேஜா அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்திருந்தது. லோகேஷ் ராகுல் 30 ரன்னுடனும், பார்தீவ் பட்டேல் 28 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். லோகேஷ் ராகுல் 96 பந்துகளை சந்தித்த நிலையில் அரைசதம் அடித்தார். இந்தியா 29.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

    மறுமுனையில் விளையாடிய பார்தீவ் பட்டேல் 84 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். 41.3 ஓவரில் இந்தியா 150 ரன்னைத் தொட்டது. மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் இந்தியா 152 ரன்கள் எடுத்திருக்கும் இந்த ஜோடி பிரிந்தது. பார்தீவ் பட்டேல் 71 ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் அலி பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து லோகேஷ் ராகுல் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார்.

    3-வது நாள் மதிய உணவு இடைவேளையின் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்திருந்தது. உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் புஜாரா 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார்.

    லோகேஷ் ராகுல் 171 பந்தில் தனது 4-வது சதத்தை பதிவு செய்தார். இந்திய மண்ணில் இது அவரது முதல் சதமாகும். மறுமுனையில் நின்ற விராட் கோலி 15 ரன்கள் எடுத்த நிலையில் பிராட் பந்தில் பெவிலியன் திரும்பினார்.



    அப்போது இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் கருண் நாயர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆட்டத்தை இந்தியாவிற்கு சாதகமாக அழைத்துச் சென்றது. 150 ரன்களை கடந்த லோகேஷ் ராகுல் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கையில் 199 ரன்கள் எடுத்த நிலையில் துரதிருஷ்டவசமாக அவுட்டாகி இரட்டை சதத்தை தவறவிட்டார். ஆனால், கருண் நாயர் சிறப்பாக விளையாடி அரைசதத்தை கடந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 161 ரன்கள் குவித்தது.



    5-வது விக்கெட்டுக்கு கருண் நாயர் உடன் முரளி விஜய் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இதனால் இந்தியா 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 71 ரன்னுடனும், முரளி விஜய் 17 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    தற்போது வரை இந்தியா 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளைய ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா பேட்டிங் செய்தாலே இந்த 86 ரன்களை எட்ட வாய்ப்புள்ளது. அதன்பிறகு சுமார் 100 ரன்கள் முன்னிலை பெற்றால் போட்டி பரபரப்பாகி விடும்.
    Next Story
    ×