என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

இன்று உலக அஞ்சல் தினம்- 'கடிதங்களை போற்றுவோம்'
- இன்று கண நேரத்தில் நாம் நினைக்கும் தகவலை உலகின் எந்த மூலைக்கும் கொண்டு செல்லும் அளவுக்கு நவீன தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்டன.
- தேசத் தந்தை மகாத்மாவின் கடிதங்கள் பல இந்திய சுதந்திர போராட்டத்தை வீறு கொண்டு எழச் செய்த எழுத்து ஆயுதங்கள் .
கையடக்க கணினிக்குள் சுருங்கியகாலம் மாறி, இன்று உள்ளங்கை அளவிலான செல்போனுக்குள் முடங்கி கிடக்கிறது மொத்த உலகமும்.
அன்பும், பண்பும், பாசமும் நிறைந்த என தொடங்கி, நாங்கள் அனைவரும் நலம், நீங்கள் அனைவரும் நலமா என குசலம் விசாரித்து, என்றும் உங்கள் அன்பு மாறாத என முடிவடையும் கடிதங்களின் வரிகளை இந்த தலைமுறை வாசித்தது உண்டா?
நவீன தொழில் நுட்பங்களின் வளர்ச்சியால் 80-90-ம் வருடத்திய தலைமுறை குழந்தைகள் பெற்ற பல்வேறு நடைமுறை வாழ்க்கை முறைகளை இன்றைய தலைமுறை இழந்தது ஏராளம்.
அதில் முதன்மையானது கடிதங்கள். ஆதி காலம் முதல் அண்மை காலம் வரை மனிதன் மற்றொரு பகுதியில் உள்ள சக மனிதனை தொடர்பு கொள்ள ஏதாவது ஒரு வழியை பின்பற்றி வந்துள்ளான். சங்க காலத்தில் புறாக்கள் மூலம் ஓலை அனுப்பி தகவல் தொடர்பை வளர்த்த மனிதர்கள் அடுத்தடுத்த கட்டத்தை தொடும் போது மாற்றங்களை கண்டான்.
ஒற்றர்கள் மூலம் ஓலை அனுப்பிய அரசர்களின் காலம் முடிவுக்கு வந்தபோது இந்தியாவில் ஆங்கிலேயர் களால் அறிமுகம் ஆனது தான் தபால் சேவை.
1712-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி தான் முதன் முதலில் தபால் சேவையையும், ரெயில்வே சேவையையும் இந்தியாவுக்கு கொண்டு வந்தது.
1766-ம் ஆண்டு ராபர்ட் கிளைவ் முதலில் சென்னையில் தபால் சேவையை அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். அப்போது கம்பெனி தபால்களோடு அதிகாரிகள் தங்களது சொந்த தபால்களையும் அனுப்ப அவர் அனுமதித்தார்.
இதைத் தொடர்ந்து 1786-ம் ஆண்டு சென்னையில் முதன் முதலாக பொது தபால் சேவை மையம் தொடங்கப்பட்டது. இவ்வாறாக 236 ஆண்டுகளை கடந்து இந்தியாவில் தபால் சேவை இன்றளவும் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.
கடிதம் எழுதுவதும், கடிதங்கள் வாசிப்பதும் மிகவும் சுகமான அனுபவம். எல்லையில் இருக்கும் ராணுவ வீரனும், குடும்பத்திற்காக வெளிநாட்டில் உழைக்கும் மக்களும் தங்கள் குடும்பத்தின் நலன் அறிய தபால் எழுதி விட்டு அவர்களின் பதிலுக்காக காத்துக்கிடந்ததெல்லாம் ஒரு கனாக்காலம்.
இன்று கண நேரத்தில் நாம் நினைக்கும் தகவலை உலகின் எந்த மூலைக்கும் கொண்டு செல்லும் அளவுக்கு நவீன தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்டன. இ-மெயில் முதல் எஸ்.எம்.எஸ். வரை வளர்ந்த தகவல் சேவை இப்போது வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் மனதை 'கவர்ந்த'வருக்கு எழுதிய 4 வரி கடிதத்தை கொடுக்க முடியாமல் ஆயுளுக்கும் அலைந்த தலைமுறையும் உண்டு.
என்ன தான் அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்தாலும் கடந்த தலைமுறையின் கடித கனவுகள் மட்டும் இன்னும் மறையவில்லை. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகைகளின்போது தங்கள் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், தபாலில் வாழ்த்து அட்டை அனுப்புவது மிகவும் சுவையான அனுபவம். அதிலும் சிலருக்கு ஸ்டாம்ப் ஒட்டாமல் அனுப்பி வைத்து அபராதம் விதிக்க வைப்பது குறும்பின் உச்சம்.
வரலாற்றிலும் கடிதங்களின் முக்கியத்துவம் மிகவும் இன்றியமையாததாகும். மறைந்த பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்து அவரது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் மிகவும் பிரபலம். தேசத் தந்தை மகாத்மாவின் கடிதங்கள் பல இந்திய சுதந்திர போராட்டத்தை வீறு கொண்டு எழச் செய்த எழுத்து ஆயுதங்கள் .
இப்படி வரலாற்றில் தடம் பதித்த கடிதங்களின் வகைகளை அடுக்கினால் ஏட்டிலும் அடங்காது. பாட்டிலும் அடங்காது. அடுக்கி கொண்டே செல்லலாம். இன்றும் அஞ்சல் சேவை தொடர்ந்தாலும் அவை அரசு அலுவல் சம்பந்தமாக மட்டுமே உள்ளது. அனைவர் கையிலும் செல்போன்கள் பெருகி விட்ட இந்த காலத்தில் கடிதத்தின் தேவை காலாவதியாகி விட்டது என்பதே உண்மை. இருப்பினும் கடிதங்களும், தந்தி சேவையும், மணியார்டரும் முந்தைய இளம் தலைமுறை நெஞ்சில் இன்றும் பசுமையாய் நிலைத்திருக்கும் நினைவலைகள். இன்று (அக்டோபர் 9) உலக அஞ்சல் தினம். வெயிலோ, மழையோ, புயலோ, பூகம்பமோ எது வரினும் கையில் உள்ள தபாலை உரியவரிடம் சேர்க்க சீருடையில் விரைந்து செல்லும் ஒவ்வொரு தபால்காரரின் சேவையும் ராணுவத்திற்கு இணையானதே! வாங்க நாமும் நமக்கு பிடித்த நபருக்கு ஒரு கடிதம் எழுதலாம்!






