என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உலக ஓசோன் தினம்
    X

    உலக ஓசோன் தினம்

    • பயன் நிறைந்த ஓசோன் படலத்தின் இன்றைய நிலை மிகவும் கவலைக்குரியது.
    • உலக அளவில் பெருகிவரும் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையால் காற்று மாசுபடுகிறது.

    பூமியின் மேற்பரப்பில் இருந்து 20 முதல் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள `ஸ்ட்ராடோஸ்பியர்' என்ற அடுக்கில் அமைந்த பகுதி `ஓசோன் படலம்'. ஓசோன் வாயு மூன்று ஆக்சிஜன் மூலக்கூறுகளால் ஆனது. சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்களை பூமிக்கு அனுப்பாமல் தடுக்கும் பணியை ஓசோன் படலம் செய்கிறது. புற ஊதாக்கதிர்கள் நேரடியாக பூமியில் விழுந்தால், அது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் புற்றுநோய், கண் பார்வை குறைபாடு போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இத்தகைய பயன் நிறைந்த ஓசோன் படலத்தின் இன்றைய நிலை மிகவும் கவலைக்குரியது.

    உலக அளவில் பெருகிவரும் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையால் காற்று மாசுபடுகிறது. மேலும் குளிர் சாதன பெட்டியில் இருந்து வெளி வரும் குளோரோபுளோரோகார்பன் மற்றும் புரோமின், கார்பன், குளோரின், கார்பன்டெட்ராகுளோரைடு போன்ற வேதி பொருட்கள் ஓசோன் படலத்தின் அடர்த்தியை வெகுவாகக் குறைத்து, துளையை ஏற்படுத்துகிறது. இதனால் புற ஊதாக்கதிர்கள் எளிதில் பூமியின்பரப்பில் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

    முதன் முதலில் 1985-ம் ஆண்டு அண்டார்டிகா பகுதியில் ஓசோன் படலத்தில் அடர்த்தி குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிகழ்வு உலகளவில் அனைத்து நாடுகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகளவில் இதற்கு தீர்வு காண ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்தது. 1985-ம் ஆண்டு வியன்னா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, 1987-ம் ஆண்டு மாண்ட்ரியல் நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. ஓசோன் படலத்தை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட இந்த நடைமுறைதான் உலகின் அனைத்து நாடுகளாலும் ஏற்கப்பட்ட ஒரு நெறிமுறை ஆகும். இந்த மாண்ட்ரியல் நெறிமுறையின்படி, ஓசோன் படலத்தை பாதிக்கும் வகையிலான பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடுகளை குறைக்க வேண்டும். அவைகளுக்கான மாற்று பொருட்களை கண்டறிந்து அவற்றை பயன்படுத்துவது என்ற முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

    உலக மக்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை செப்டம்பர் 16-ந் தேதியை சர்வதேச ஓசோன் தினமாக அறிவித்தது. இந்த நெறிமுறைகளை அனைத்து நாடுகளும் பின்பற்றும் பட்சத்தில் அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகளுக்குள் ஓசோன் படலத்தின் அடர்த்தி அதிகமாகி இயல்பு நிலைக்கு திரும்பும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இப்புவியை அதன் தன்மை மாறாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம் அனைவரின் கைகளிலும் உள்ளது.

    Next Story
    ×