search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நாளை உலக முட்டை தினம்: 5 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை தரும் முட்டை
    X

    நாளை உலக முட்டை தினம்: 5 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை தரும் முட்டை

    • தமிழகத்தின் ஒட்டுமொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 ‌விழு‌க்கா‌ட்டை பூ‌ர்‌த்‌தி செய்கிறது.
    • ஓட்டல்கள் மற்றும் வீடுகளில் முட்டைகள் மிக முக்கிய உணவு பொருளாக இடம் பிடித்துள்ளது.

    நாளை அக்டோபர் (13-ந் தேதி) உலக முட்டை தினமாக கொண்டாடப்படுகிறது.

    கடந்த 1996-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் வரும் 2-வது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினமாக கொண்டாடப்படுகிறது.

    முட்டையின் நன்மைகள் குறித்து அதில் உள்ள சத்துக்கள் மற்றும் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரியப்படுத்துவதுதான் இந்த நாளின் நோக்கம். குறைந்த விலையில் அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவாக முட்டை திகழ்கிறது. புரதச்சத்து அதிகம் இருக்கும் கோழி முட்டை ஏற்றுமதியில் இந்தியாவில் நாமக்கல் மண்டலம் முதலிடம் வகிக்கிறது.

    குறைந்த விலையில் கிடைக்கும் அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவு முட்டை மட்டும் தான், வளரும் குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    ஊட்டச்சத்து மட்டுமின்றி உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் முட்டையில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வைட்டமின் ஏ, பி 12, பி 2, பி 5, இ கோலின், சியாந்தீன் போன்ற கனிம சத்துகளும் முட்டையில் நிறைந்துள்ளன.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த முட்டைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதில் இந்தியாவில் நாமக்கல் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில் சிறப்பு வாய்ந்த முட்டை ஏற்றுமதிக்கு சொந்தமான நாமக்கல் மாவட்ட மக்களை பெருமையடைய செய்துள்ளது என்றால் மிகையாகாது.

    நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 1100-த்திற்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த முட்டை கோழிப்பண்ணைகளில் 6 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினசரி 5 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த முட்டைகள் தரமானதாக கிடைப்பதால் தமிழகத்தின் சத்துணவு திட்டம் மற்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகள், கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கும் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. நாமக்கல் முட்டைகளுக்கு தனி சிறப்பு உண்டு என்பதால் உலகம் முழுவதும் இந்த முட்டைகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    தமிழகத்தின் ஒட்டுமொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 விழுக்காட்டை பூர்த்தி செய்கிறது. இதில் உள்ளூர் தேவைக்கு போக மீதம் உள்ள 40 லட்சம் முட்டைகள் தினசரி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    முட்டை ஏற்றுமதி தொழிலில் முதலிடத்தில் உள்ள நாமக்கல் மண்டலத்தில் இருந்து உற்பத்தியாகும் முட்டைகள் மஸ்கட், குவைத், கத்தார், பக்ரைன், லைபீரியா, துபாய், சிரியா, ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கப்பல்களில் கண்டெய்னர்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி முதல், நாமக்கல் பகுதிகளில் இருந்து விமானம் மூலம் மலேசியா நாட்டிற்கு முட்டைகள் ஏற்றுமதி தொடங்கி உள்ளது. இதில் இரண்டு கரு அடங்கிய முட்டைகள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த முட்டைகளில் சத்துகள் அதிக அளவில் நிறைந்துள்ளதாகவும் பண்ணையாளர்கள் கூறுகிறார்கள். இதனால் வெளிநாடுகளில் இந்த முட்டைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    அனைத்து ஓட்டல்களில் மற்றும் வீடுகளில் முட்டைகள் மிக முக்கிய உணவு பொருளாக இடம் பிடித்துள்ளது. குறிப்பாக ஆம்லெட், ஆப்பாயில், முட்டை தோசை, முட்டை குழம்பு, முட்டை புரோட்டா, முட்டை பிரியாணி என பல்வேறு வகையில் அனைவரும் விரும்பும் வகையில் உணவு பொருளாக இந்த முட்டைகள் பயன்படுத்தப்படுகிறது.

    இத்தகைய பெருமை வாய்ந்த முட்டைகளை உற்பத்தி செய்யும் கோழிக்குஞ்சுகள் பிறந்து ஒரு நாள் குஞ்சுகளாக பண்ணையில் விடப்படுகிறது. தொடர்ந்து அதற்கு தீவனம் கொடுத்து வளர்த்து 8 வாரங்களில் முட்டையிடும் கோழிகளாக மாறுகின்றன. இந்த கோழிகள் அதிகபட்சமாக 72 வாரங்கள் முட்டையிடுகிறது. பின்னர் கறிக்காக குறைந்த விலையில் இந்த முட்டை கோழிகள் விற்கப்படுகிறது. முட்டை கோழிகளுக்கு சத்து வாய்ந்த மக்காச்சோளம், ராகி மாவு, தானியங்கள் அரைத்த மாவு உணவாக வழங்கப்படுகிறது.

    கோழிப்பண்ணை

    நாமக்கல் கோழிப்பண்ணைகளில் கோழிகளை வளர்க்க தீவனம் போடுவது, தண்ணீர் கொடுப்பது, கோழிகள் போடும் முட்டைகளை எடுத்து அட்டையில் அடுக்குவது, லாரியில் ஏற்றி வெளியூர்களுக்கு அனுப்புவது, கோழிப்பண்ணைகளை பராமரிப்பது, சுத்தம் செய்வது, முட்டைகளை வாகனங்களில் எடுத்து செல்வது, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்பட வடமாநிலங்களில் இருந்து தீவனங்கள் கொண்டு வருவது, முட்டைகளை உள்நாடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என இந்த தொழிலை நம்பி 5 லட்சத்திற்கும் அதிகமாக தொழிலாளர்கள் உள்ளனர். இதில் நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.

    ஏற்கனவே நாமக்கல்லில் முட்டை உற்பத்தி 6 கோடியாக இருந்த நிலையில் தற்போது தீவன விலை உயர்வால் பல பண்ணைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் முட்டை உற்பத்தி 5 கோடியாக குறைந்துள்ளது. இதனால் பலர் பண்ணைகளை மூடிவிட்டு வேறு வேலைக்கு சென்றதால் இதனை நம்பி இருந்த பலர் வேலை இழந்துள்ளனர்.

    எனவே கோழி தீவனத்தை மானிய விலையில் பண்ணையாளர்களுக்கு வழங்க வேண்டும், வங்கி கடன்களை நிபந்தனையில்லாமல் வழங்கி சிறப்பு வாய்ந்த இந்த தொழிலை காப்பாற்ற வேண்டும் என்பது கோழிப்ப ண்ணையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தியாகும் முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு விலை நிர்ணயம் செய்கிறது. அதன்படி நாமக்கல் மண்டலத்தில் தற்போது முட்டை விலை 510 காசுகளாக உள்ளது. வழக்கமாக முட்டை விலை புரட்டாசி மாதங்களில் குறைவாக இருக்கும், ஆனால் இந்தாண்டு தற்போதும் முட்டை விலை குறையவில்லை. நிர்ணயிக்கும் விலையில் இருந்து மைனஸ் விலை இல்லாமல் விற்பனை செய்ய பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படியே விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    தினசரி 1 கோடி முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால் புரட்டாசி மாதத்திலும் முட்டை விலை அதிகரித்தே காணப்படுகிறது.

    Next Story
    ×