என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மருத்துவம் அறிவோம்- முழுமையான வாழ்வுக்கு முயற்சியே அவசியம்
- பணம் உண்மையான தகுதியான மரியாதையினை பெற்றுத் தருவதில்லை. உழைப்பு, நேர்மை, பண்பு இவையே மரியாதையினை கொண்டு வந்து சேர்க்கும்.
- பணம் உயர்தர மருத்துவம் அளிக்கலாம். ஆனால் வாழ்க்கை அதன் கையில் இல்லை.
* உங்களைப் பற்றி தாழ்வாக அழிவு பூர்வமாக எண்ணாதீர்கள்.
* விளையாட்டுக்காக கூட உங்களைப் பற்றி நீங்களே தாழ்வுபடுத்திக் கொள்ளக் கூடாது. (உம் நான் தண்டம், எதற்கும் பிரயோஜனமில்லை. இப்படிப்பட்ட வார்த்தைகள்) ஏன் எனில் நம் உடலுக்கு இது நிஜம். இது ஜோக் என்று பிரித்துப் பார்க்கத் தெரியாது.
வார்த்தைகள் சக்தி வாய்ந்தது. அவை மந்திரம் போன்றவை.
உங்களைப் பற்றி தாழ்த்திக் கொள்வது அல்லது ஆணவமாய் உயர்த்தி பேசுவது இரண்டினையும் உடனே மாற்றிக் கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையும ஆக்கப்பூர்வமாய் மாறி விடும்.
நீங்கள் அவ்வாறு மாறவில்லை என்றால் நீங்கள் நிம்மதியற்ற அழிவுப் பூர்வமான வாழ்க்கையினை தேர்ந்தெடுத்தவர்கள் ஆவீர்கள்.
பல பெற்றோர்கள் இன்று கூறுவது "3 வயது குழந்தையினைக் கூட சமாளிப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கின்றது. அதுவே அவர்களுக்கு 10 வயது ஆகி விட்டால் எங்களை எதிரிகள் போல பார்க்கின்றனர். தவறுகள் செய்கின்றனர். கடுமையாக பேசுகின்றனர். 'படி' என்று சொல்லக் கூட பயமாக இருக்கின்றது. ஏதேனும் செய்து கொள்வார்களோ என்ற பயம் இருக்கின்றது. பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இவர்களை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்றே தெரியவில்லை. ஏன் பிள்ளைகளை பெற்றோம் என்று வருந்துகின்றோம்" என்கின்றனர்.
இவர்கள் செய்யாத முயற்சிகள் இல்லை. போகாத கோவில்கள் இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை. பல ஆலோசனை வகுப்புகளுக்கும் செல்கின்றனர். மொத்தத்தில் நிம்மதியற்ற வாழ்வு வாழ்கின்றனர்.
இது போல் குடும்ப உறவுகளிடையே பிரச்சினை, வேலையில் பிரச்சினை என மனிதனின் நிம்மதியின்மைக்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.
சில மாற்ற முடியாத விஷயங்களை நாம் உணர வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் வித்தியாசமானவரே. ஒவ்வொருவரை கையாளுவதிலும், பழகுவதிலும், வளர்ப்பதிலும் தனித்தனி பாதை தேவைப்படுகின்றது. இன்றைய குழந்தைகள் பிறக்கும் பொழுதே கையில் செல்போனுடன் தான் பிறக்கின்றன. உலகத்தினையே சிறிய வயதில் சுற்றி வந்து விடுகின்றன. இது உலகத்தில் அனைத்துப் பெற்றோருக்கும் இருக்கும் பிரச்சினைதான். நாம் வாழும் முறையும், நம் குடும்ப சூழலும் சமுதாயமும் ஒரு மனிதனை உருவாக்குவதில் பெரும் பங்கு பெறுகின்றன. ஆக ஒரு குழந்தையை முறையாய் வளர்க்கும் பொறுப்பு இத்தனை இடங்களில் பரவிக் கிடக்கின்றது.
ஆனால் ஒவ்வொரு தனி மனிதனிடமும் ஒரு சில உயர்வான சக்திகள் இருக்கின்றது.
அவை அன்பு, ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், அமைதியான உறுதி ஏனோ இதனை சொல்லும் பொழுது இவ்வளவு தானா? என்று சர்வ சாதாரணமாக அலுத்துக் கொள்கின்றனர். இந்த அன்பு என்பது எவர் மீதும் வெறுப்பினைக் கொட்டாது. அதிக உணர்ச்சி என்பதில் வசப்படாது. நல்ல எண்ண அலைகளோடு இருப்பது ஆகும்.
நம்மில் அநேகர் பணம் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை என ஆணித்தரமாய் கூறுகின்றார்கள். இது உண்மைதான். மூன்று வேளை சாப்பாடு கிடைத்தாலே நம்மை உலகில் சாதனையாளராக நினைத்துக் கொள்ள வேண்டிய காலத்தில் தான் நாம் வாழ்கின்றோம். உடுத்த உடை, இருக்க இடம் இருந்தால் நாம் ஒரு குட்டி அம்பானிதான். ஆனால் வாழ்க்கை அத்தோடு முடிவதில்லை. பிள்ளைகளை வளர்த்து படிக்க வைத்து, வேலை கிடைத்து, கல்யாணம் செய்து வைத்து முதுமையில் நம் தேய்ந்த கால்களில் நிற்கும் நிலையிலும் ஒவ்வொரு நொடியிலும் பணம் இன்றி அணுவும் அசையாது என்றாகி விட்டது. இதனால் உலகளவில் அதிக சதவிகிதம் அளவு மன உளைச்சலுடனும், மனச் சோர்வுடனும் மக்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால் பணத்தினாலும் கிடைக்க முடியாத பல பொக்கிஷங்கள் இருப்பதனையும் ஆய்வுகள் ஏற்றுக் கொள்கின்றன.
மேலே கூறப்பட்டுள்ளதினைப் போல் பணத்தினால் ஈட்ட முடியாத ஒன்று அன்புதான். இதனை உலகமே ஏற்றுக் கொள்கின்றது. ஏதேதோ பிரச்சினைகளை பேசும் நாம், எத்தனை பேரிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான அன்புடன் இருக்கின்றோம்? எத்தனை பேர் நம்மிடம் உண்மையான அன்புடன் இருக்கின்றனர்? இந்த அன்பிற்கு எந்த பணமும் இருக்க வேண்டாம். அனைவரிடமும் உண்மையினை அன்பாய் கூறினாலே போதும். அவர்களின் 'குலதெய்வமே' நீங்கள்தான். இதனை அனைத்து பெற்றோர்களும், குடும்ப உறவுகளும், சமுதாயமும் உணர வேண்டும். இன்னும் சிறிது காலத்தில் மனநிம்மதி என்ற வார்த்தை அகராதியில் கூட இருக்காதோ? என்று தேடும் நிலை உருவாகும். இன்று பணத்தினை கரைத்து மன நிம்மதி தேடுபவர்கள் ஏராளம்.
* பணம் போதும் என்ற மனநிறைவினை திருப்தியினை தருவதில்லை.
* பணம் உண்மையான நண்பர்களை அடையாளம் காட்டுவது இல்லை.
* பணம் உயர்தர மருத்துவம் அளிக்கலாம். ஆனால் வாழ்க்கை அதன் கையில் இல்லை.
* பணம் உண்மையான தகுதியான மரியாதையினை பெற்றுத் தருவதில்லை. உழைப்பு, நேர்மை, பண்பு இவையே மரியாதையினை கொண்டு வந்து சேர்க்கும்.
* பணத்தை வைத்து கலைகளில் பாட்டு, நடனம், விளையாட்டு இவற்றில் தங்க மெடல் பெற முயாது. கடின உழைப்பு தேவை.
* உண்மையான சுற்றம் என்பது பணம் இல்லாத பொழுதுதான் தெரியும்.
* பணம் வைத்து ஐம்புலன்களை கட்டுப்படுத்த முடியாது. மாறாக அதிக பணம் ஐம்புலன்களை தறிகெட்டு ஓட விடும் வாய்ப்பு அதிகம்.
* உழைத்து சேர்த்த பணம் ஒருவரை நிமிர்ந்து வைக்க செய்யும்.
(அடிப்படை வசதிகளுடன் அதற்கு மேலும் சற்று கூடுதல் பணம் மிக மிக அவசியம்தான். அதற்கு மறு பேச்சில்லை. ஆனால் அத்துடன் ஒருவர் வாழும் வாழ்க்கை முறை அவரது சாதனைகள் அனுபவங்கள். இவையே ஒரு மனித வாழ்வினை முழுமையாக்குகின்றது)
உழைப்பாலும், தொழிலாலும் ஏராளமானோர் தொழில் அதிபர்களாக மாறி உயர்நிலையில் இருப்பவர்களாக நம் நாட்டில் அநேகர் உள்ளனர். அவர்கள் ஏதோ ஒரு வகையில் தன் வருமானத்தினை சமுதாயத்திற்கு பங்கிட்டு கொடுக்கின்றனர். அவர்கள் மா மனிதர்கள்.
ஆக நம் காலால் உறுதியாய் நிற்ப்போம். நடப்போம். காலம் வரும்போது பார்ப்போம்.
முன்னேற்றத்திற்கான முயற்சி கடைசி மூச்சு வரை இருக்க வேண்டும்.
* பிரச்சினைகளை எதிர்கொள்ள தெரிய வேண்டும். பிரச்சினை என்றதுமே சுணங்கி இழுத்து போர்த்தி முடங்கி விடக்கூடாது.
* சுயமாய் தெளிவாய் சிந்திக்க வேண்டும்.
* விழிப்புணர்வு நமக்கு ஒவ்வொரு நொடியும் அவசியம்.
ஆக எண்ணங்கள், வார்த்தைகள் அணுகுண்டு போல சக்தி வாய்ந்தவை. இவை நல்லபடியாக ஆக்கப்பூர்வமாக ஆக்குங்கள். உங்கள் வெற்றிக்கான பாதை தானே அமைந்து விடும். முயற்சிகள் பலவிதமாகும். இதுதான் இயற்கையின் சக்தி பிரபஞ்சத்தின் சக்தி. இத்தனை ஜீவராசிகளுக்கும் உயிர்வாழ இந்த இயற்கை சக்தி கொடுப்பது போல் உங்களின் உயர்வுக்கும் இயற்கை சக்தி கொடுக்கின்றது. மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும்.
* ஆக்க பூர்வமான எண்ணங்கள். * நல்ல வார்த்தைகள் * முயற்சி * அன்பு இவை அனைத்தும் நம்மிடம் உள்ள சக்தி வாய்ந்த அணுகுண்டுகள். நல்லவை மட்டுமே நிகழும்.
நம் வாழ்க்கை, நம் குடும்பம், நம் சமுதாயம் இவை அனைத்துமே மாறி விடும். ஆனந்த மயமாய் மாறி விடும்.
(அறிவுரைகள், போதனைகள் என்பவை யாருக்குமே பிடிப்பதில்லை. நல்ல புத்தகங்களை படிக்கும் பழக்கம் மிகவும் குறைந்து விட்டது. பலரின் அனுபவ அறிவு என்பது அடுத்த தலைமுறைக்கான பொக்கிஷம். ஆனால் அதனை படித்தோ, கேட்டோ அறிந்து கொள்ள வேண்டுமே).
புத்தரின் பல போதனைகள் மனிதனின் வாழ்விற்கு மிக பயனுள்ளதாக இருக்கின்றன. படித்து பின்பற்றுவோமே.
* உங்கள் மனம்தான் எல்லாம். என்ன நினைக்கின்றீர்களோ அதுவாகவே ஆகி விடுவீர்கள்.
இதனால் தான் நல்லதையே நினையுங்கள். செய்யுங்கள் என்று வலியுறுத்தப்படுகின்றது. தீயவை என்பன இனி அகராதியில் கூட இல்லாது செய்ய வேண்டும்.
* மகிழ்ச்சிக்கு என்று தனி பாதை கிடையாது. மகிழ்ச்சியாக எப்போதும் இருப்பதுதான் பாதை. ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் மகிழ்ச்சியை மட்டுேம தரும்.
* எல்லோரிடமும் கற்றுக் கொள்ள ஏதாவது இருக்கும். கற்றுக் கொள்ளுங்கள். எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என இரண்டினையுமே கற்றுக் கொள்ள வேண்டும். நம் மனம் சொல்வது படி நடங்கள்.
* அழிவுப்பூர்வமான சிந்தனை உள்ளவர்களிடம் இருந்து தள்ளி இருங்கள். வாழ்க்கை மிக அமைதியாகி விடும்.
* தவறான நபர்கள் உடன் வாழ்வில் நடப்பதினை விட தனியாக இருப்பது சிறந்தது.
* ஒவ்வொருவரும் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் அல்லது உடல் நோய்க்கும் அவர்களே பொறுப்பாகின்றனர்.
* கோபத்தால் உங்களுக்கு தண்டனை கிடைக்காது.கோபமே உங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைதான். ஆகவே கோபத்தினை வென்று விடுங்கள்.
* எந்த விடியலையும் ஆகாயத்தில் தேட வேண்டாம். அது நம் மனதிலேயே உள்ளது.
* ரொம்பவும் அதிகமாக 'இப்படி ஆகி விடுமோ', 'அப்படி ஆகுமோ' என யோசிக்கக் கூடாது.
ஒவ்வொருவரும் திருக்குறள் புத்தரின் போதனைகள் இவற்றினை படித்து மனதில் பதிய வைத்துக் கொண்டால் போதும். யாருக்கும் வாழ்வில் எந்த பிரச்சினையுேம இருக்காது. முயன்று செய்வோம். வெற்றி பெறுவோம்.
பலருடைய கேள்வி அன்றாடம் ஓடி ஓடி ஓய்ந்து போகும் வாழ்க்கையில் நமக்கு என்று நேரமே கிடைப்பதில்லை. இதிலேயே மனம் சோர்ந்து விடுகின்றதே என்பதுதான். இந்த பேச்சு எதற்கும் உதவாது. முதலில் இதனை தூக்கி எறியுங்கள்.
உங்களை எல்லோரும் விரும்ப வேண்டும் என்று எதிர்பார்த்து எதனையும் செய்யாதீர்கள். நீங்கள் உங்கள் வாழ்வினை முறைாய் வாழ்ந்து முடிக்கவே பிறந்துள்ளீர்கள்.
அன்றாடம் சிறிது நேரம் உண்ணாவிரதம் இருந்து பாருங்கள். முதலில் உங்கள் உடல் உறுப்புகளுக்கு சற்றாவது ஓய்வு கொடுங்கள். சதா 'ரைஸ்மில்' போல் வாய் அரைத்துக் கொண்டே இருக்கின்றது. இதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து கொண்டே இருக்கின்றது. இரவில் 7 மணிக்குப் பிறகு தண்ணீர் தவிர வேறு எதுவும் காலை வரை சாப்பிடாமல் இருந்து பாருங்கள். உடலும் நன்றாய் இருக்கும். உள்ளமும் தெளிவாய் இருக்கும். இது போன்று அவ்வப்போது 'உபவாசம்' இருந்து பாருங்கள் சிந்தனைகள் தெளிவாய் இருக்கும்.
முடிந்த அளவு பேச்சினை குறையுங்கள். மவுனத்தினை விட பேச்சு அந்த இடத்தில் நன்மை பயக்கும் என்றால் மட்டுமே பேசுங்கள். இங்கு பேச்சு என்பது வாயில் ஒலிக்கும் சொற்கள் மட்டுமல்ல. மனமும் பேசாது இருக்க வேண்டும். மனம் ஊர் சுற்றக் கூடாது.
காலை சூரிய உதயம், மாலை சூரியன் மறைவு இரண்டினையும் சில நிமிடங்கள் பாருங்கள்.
அருவி, பீச் அருகில் இருந்தால் அங்கு சென்று அந்த நீர் ஒடுவதை, அலைகளின் சத்தத்தினை கேளுங்கள். இப்படி இயற்கையோடு சிறிது நேரம் இருங்கள்.
சுற்றுப்புறத்தில் நிகழ்வதைப் பற்றி கவனியுங்கள். கண்டிப்பாய் சிறிது நேரம் தனியாய் இருங்கள். உங்கள் உள் மனம் சொல்வதனைக் கேளுங்கள். உடலும் உங்களோடு பேசும். வயிற்றினை இரண்டாவது மூளை என்றே குறிப்பிடுவர். சில நூறு மில்லியன் நரம்பணுக்கள் (சுமார்) என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஆக அமைதி பல பிரச்சினைகளுக்கு தீர்வினை புலப்பட செய்யும். உங்கள் உள்ளுணர்வு பிரபஞ்ச ரகசியத்தினை உங்களோடு பேசும். உடல் தானே தன்னை குணப்படுத்த முயலும். (இதன் பொருளாக மருத்துவ பரிசோதனையும் அவசியமே என்று புரிந்து கொள்ளுங்கள்). ஆக "சும்மா இரு சொல்லறேன்" என்ற முருக பிரானின் கூற்றுக்கு இத்தனை அர்த்தம் உள்ளதோ.






