என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    யாருக்கு அன்பான மனைவி?
    X

    யாருக்கு அன்பான மனைவி?

    • மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் திருமண வாழ்க்கை மிக முக்கியமான அத்தியாயம்.
    • வேலைக்கு செல்லாத பெண்ணாக இருந்தால் கல்வித் தகுதிக்கு தகுந்த வேலையை செய்து வருமானம் ஈட்டலாம்.

    மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் திருமண வாழ்க்கை மிக முக்கியமான அத்தியாயம். ஒருவருக்கு திருமண வாழ்க்கை வரமாக அமைவதில் வாழ்க்கைத் துணையின் பங்களிப்பு மிக உன்னதமானது. அதுவும் ஆண் மகனுக்கு இல்லாள் எனப்படும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். ஒரு மனிதனை அன்பாக, பண்பாக வழிநடத்தும் நல்ல மனைவி அமைந்தால் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் பெற்றவன் என்று கூறலாம். ஒரு குடும்பத்திற்கு மருமகளாகச் செல்லும் பெண்ணால் மட்டுமே ஒரு புதிய தலைமுறையை உருவாக்க முடியும். சீரழிந்து கிடக்கும் பல குடும்பங்களை கரை சேர்க்கும் கலங்கரை விளக்காக பல பெண்கள் வாழ்ந்து இருக்கிறார்கள், வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். அதனால் தான் நமது முன்னோர்கள் ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்று கூறி வைத்தார்கள்.

    பெற்றோரால் நல்ல நண்பனாக இருக்க முடியும். ஆனால் வாழ்க்கைத் துணையாக முடியாது.

    நண்பனால் பெற்றோரின் அன்பைக் கொடுக்க முடியும். ஆனால் வாழ்க்கைத் துணையின் அன்பைக் கொடுக்க முடியாது.

    கணவன்-மனைவி உறவு மட்டுமே தாயாக, தந்தையாக, கணவனாக மனைவியாக, குழந்தையாக, நல்ல நண்பனாக அனைவருடைய அன்பையும் சேர்த்தே கொடுக்க முடியும். எல்லாவற்றையும் தன்னகத்தே ஒரு சேர அடக்கியுள்ள கணவன் மனைவியின் உறவே மிகச்சிறந்த உறவு. ஒருவன் பிறப்பிலேயே தாய்-தந்தையை இழந்தவனாக, அநாதையாக உற்றார் உறவினர் இல்லாமல் கூட பிறக்கலாம். ஆனால் அவனால் தேடிக் கொள்ள முடியும் உறவான மனைவியில்லை என்றால் வாழவே முடியாது. ஆக கணவன் மனைவியின் அன்பிற்கு இணையாக உலகில் வேறு எந்த உறவும் வரமுடியாது. வீட்டுக்கு அடங்காது, உறுப்படாது என்று தண்ணீர் தெளித்து விட்டு ஊர் சுற்றித் திரிந்த எத்தனையே ஆண்கள் திருமணத்திற்கு பிறகு மனைவியின் அன்பிற்கு கட்டுப்பட்டு சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறார்கள்.

    திருமண வாழ்க்கை எல்லோருக்கும் சிறப்பை தருவதில்லை. என்றாலும் ஒரு சில தம்பதியர் மட்டும் மிகவும் அந்நியோன்யமாக ஒருவரை ஒருவர் பிரியாமல் மிகவும் நெருக்கமாக விட்டுக் கொடுத்து வாழ்வதை காணலாம். அப்படி இருக்கும் தம்பதியர்களின் ஜாதகத்தில் ஜாதகரை குறிக்கும் கிரகமான குருவும் மனைவியைக் குறிக்கும் கிரகமான ஒரே ராசியில் இருக்கும் அல்லது அடுத்தடுத்த ராசியில் இருக்கும் அல்லது குருவுக்கும் சுக்கிரனுக்கும் திரிகோண சம்பந்தம் இருக்கும். அதே போல் ஒருவரின் செவ்வாய், சுக்கிரன், உள்ள ராசியில் அல்லது, ஏழாம் அதிபதி உள்ள ராசியில் அவரது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன், குரு, இருந்தால் இருவரும் சேர்ந்து பிரியமாக இருப்பார்கள். அத்துடன் சந்திரன் உள்ள ராசியில் அல்லது சந்திரனுக்கு 1, 5, 9-ல் வாழ்க்கைத்துணையின் ஜாதகத்தில் குரு இருந்தாலும், குரு பார்த்தாலும், ஒருவருக்கொருவர் ஆதர்சன தம்பதியராக இருப்பார்கள்.

    கணவன்-மனைவி கருத்து வேறுபாட்டிற்கும் பிரிவினைக்கும், ஜோதிட ரீதியான காரணங்கள் உள்ளன. ஆண்கள் ஜாதகத்தில் சுக்ரன், கேது சேர்க்கை, பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய், கேது சம்பந்தம் இருந்தால் தம்பதிகளிடையே தேவையற்ற வம்பு வழக்கு, மனக்கசப்பு அல்லது பிரிவினை ஏற்படும்.

    ஜனன கால ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2-ம் இடத்திற்கு அல்லது களத்திர ஸ்தானம் எனும் -7ம் இடத்திற்கு எத்தனை கிரகங்கள் சம்பந்தம் உள்ளதோ அத்தனை நபர்கள் திருமண வாழ்வில் சம்பந்தம் பெறுவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

    அதாவது 7-ம் அதிபதியுடன் எத்தனை கிரகங்கள் சம்பந்தம் பெறுகிறதோ அத்தனை திருமணங்கள் நடக்கும் என்று கூறப்படுகிறது. தம்பதிகளுக்குள் தேவையற்ற நபர்களின் குறுக்கீடு மன பேதத்தை அதிகரிக்கும்.

    7-ம் இடத்திற்கு சூரியன், செவ்வாய் சேர்க்கை இருந்தால் தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஒட்ட மாட்டார்கள் சுக்ரன், சனி சேர்க்கை எந்த இடத்தில் இருந்தாலும் பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டு. ஆனால் பொருத்தமற்ற வாழ்க்கை துணை, வாழ்க்கைத் துணையால் அவமானம், மனக்கசப்பு உண்டாகும்.

    அதே போல் சூரியன், சுக்ரன் சேர்க்கை, சூரியன், செவ்வாய் சேர்க்கை களத்திரகாரக கிரகங்களை பலவீனமடையச் செய்வதால் தம்பதிகளிடையே ஒற்றுமையை குறைக்கும்.

    சுக்ரன், சந்திரன் சேர்க்கை மாமியார், மருமகள் கொடுமையால் பிரியும் குடும்பமாகும். ஏழாம் இடத்தில் பதினொன்றாம் அதிபதி நிற்பது அல்லது பதினொன்றாம் இடத்தில் ஏழாம் அதிபதி அமர்வது. 7, 11-ம் அதிபதிகள் பரிவர்த்தனை தொழில், உத்தியோகம், பொருளாதார ரீதியான பிரச்சினையை தம்பதிகளிடையே அதிகப்படுத்துகிறது.

    7-ம் அதிபதி பலம் குறைந்து 11-ம் அதிபதி வலுப்பெறும் போது வெகு சுலபமாக மறு திருமணத்திற்கு அழைத்துச் சென்று விடுகிறது. பொதுவாக 7-ம் அதிபதி அல்லது 7-ல் நின்ற கிரகம் ராகு, கேதுக்களின் நட்சத்திர சாரங்களைப் பெறக் கூடாது. ராகு, கேதுக்கள் பிரிவினையை ஊக்குவிக்கும் கிரகங்களாகும். திருமணப் பொருத்தம் பார்க்கும் போது ரஜ்ஜு, யோனி பொருத்தம் இல்லாத ஜாதகம் தம்பதியினரை பிரிக்கும்.

    11-ம் பாவகத்திற்கு திரிகோணதிகள் சம்பந்தம் பெறும் போது சட்டப்படியான மறுமணமாகவும், அசுப மற்றும் லக்ன பாவிகள் சம்பந்தம் பெறும் போது சட்டத்திற்கு புறம்பான உறவும் ஏற்படும்.

    11-ல் இரண்டுக்கு மேற்பட்ட கிரகங்கள் அமர்தல், 1, 11-ம் அதிபதிகள் பரிவர்தனை பெறும் போது இரு தாரம் ஏற்படும். ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் 6, 7, 8 பாவகம் சம்பந்தம் பெறும் போது விதிப் பயனால் கணவன்-மனைவியரிடையே பிரிவினை ஏற்படுகிறது.

    இது போன்ற அனைத்திற்கும் கணவன், மனைவியரிடையே விட்டுக் கொடுக்கும் தன்மை, சகிப்பு தன்மை இன்மையே காரணமாகும். பெண்கள் ஆண்களை குறை கூறுகிறார்கள். ஆண்கள் பெண்களை குறை கூறுகிறார்கள். சமீப காலமாக பொருளாதாரக் குற்றம் மற்றும் காதல் திருமணங்களே குடும்பத்தில் மன உளைச்சலை அதிகப்படுத்துகிறது. ஜாதகம் பார்க்க வரும் புதிதாக திருமணமான பல இளம்பெண்கள் ஆண்களின் வருமானக் குறைபாட்டையும் காரணமாக கூறுகிறார்கள். கணவனிடம் இருந்து போதிய வருமானம் இல்லாத பெண்கள் குடும்ப பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு என குடும்ப சுமையை தாங்க முடியாமல் தவறான முடிவு எடுக்கிறார்கள். ஆண்களுக்கு எதிர்பாராத இடர்பாடு காரணமாக தொழில் முடக்கம், வேலை இழப்பு ஏற்பட்டால் குழந்தை வளர்ப்பிற்கு அரசின் நலத்திட்டங்களை, பயன்களை பயன்படுத்தலாம்.

    அதுவரை வேலைக்கு செல்லாத பெண்ணாக இருந்தால் கல்வித் தகுதிக்கு தகுந்த வேலையை செய்து வருமானம் ஈட்டலாம். வருமானம் இருக்கும் போது நல்லவராக இருந்த கணவர் வருமானம் இல்லாத போதும் நல்லவர்தான். வருமானம் இல்லாத கணவரை குழந்தையாக பாவித்து குடும்ப பொறுப்பு ஏற்று நடத்தும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கர்மாவை அனுபவிக்கும் மனவலிமை இல்லாமல் வேறு வாழ்வை நாடினால் பிரச்சினை தீரும் என்று நம்பி புதிய கர்ம வினையை உருவாக்கும் ஆண்கள், பெண்களே அதிகம். பல குடும்பங்களில் இன்று ஆண் மனைவியாகவும் பெண் கணவராகவும் இருந்து சந்தோஷமாக மன நிறைவுடன் குடும்பத்தை வழி நடத்துகிறார்கள்.

    15 வருடத்திற்கு முன்பு வரை கணவன் மனைவியை விவாகரத்து செய்த நிகழ்வுகள் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வந்தது. பெண்கள் கணவருடன், புகுந்த வீட்டில் கோபித்து கொண்டு வந்தால் பெற்றோர்கள் ஆலோசனை கூறி புகுந்த வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். இப்பொழுது பெற்றோர்கள் கணவர் புகுந்த வீட்டாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் வந்து விடு என்று உற்சாகப்படுத்துகிறார்கள்.

    அதனால் சமீப காலமாக மனைவி, கணவனை வெறுத்து ஒதுக்கும் கலாச்சாரம் அதிகமாக பெருகிக் கொண்டு இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க பிறந்த வீடா? புகுந்த வீடா ? என்ற மனப் போராட்டத்தில் வாழ்வை தொலைக்கும் பெண்களின் நிலையே வேறு.திருமணம் முடிந்த பெண் கணவன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பது நமது மரபு.

    இப்பொழுது கலியுகத்தில் திருமணத்திற்கு பிறகு புகுந்த வீட்டிற்கு செல்ல மறுக்கிறார்கள். பல பெற்றோர்கள் சகிக்க முடியாத பல்வேறு காரணங்களுக்காக பெண் பிள்ளைகளை புகுந்த வீட்டிற்கு அனுப்ப மறுக்கிறார்கள். எந்த காரணமும் இல்லாமல் சில பெண்கள் பெற்றோர் வீட்டிலேயே காலம் தள்ளி புகுந்த வீட்டை கணவரை, குழந்தைகளை சரியாக கவனிப்பது இல்லை. கணவர் மற்றும் அவரது உறவுகளுடனும் வாழவே முடியாத சூழ்நிலையில் பெண்கள் பிரிந்து வாழும் முடிவை எடுக்கலாம். சிறிய பிரச்சினையை கணவன்-மனைவி இருவரும் விட்டு கொடுத்து வாழும் போது குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் கிடைக்கும். பல ஆண்கள் மனைவியை விட்டுக் கொடுக்க முடியாமல் இருக்கிறார்கள். ஆண்களும் பெண்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். மனித வாழ்க்கையில் ஒவ்வொரு உறவின் பிரிவும், எதையாவது ஒன்றை இழக்கத்தான் செய்யும் , ஆனால் தாலி கட்டிய மனைவி ஒருத்தியோட பிரிவு மனித வாழ்க்கையில், எல்லா சுகத்தையும் இழக்கச் செய்யும். வாழ்க்கைத் துணைவி இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்பது இல்வாழ்க்கையின் சுவையை உணர்ந்த அனைவரின் கருத்தாகும்.

    ஒவ்வொரு ஆணும் மனைவியின் அன்பில் தான் அதிக காலம் வாழ்கிறான், வாழ விரும்புகிறான். ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் வலிமை குறைந்தால் மனைவியின் அன்பு பரிபூரணமாக கிடைக்காது. பெண் ஜாதகத்தில் சுக்கிரன், சந்திரன் சம்பந்தம் இருந்தால் புகுந்த வீட்டினரிடம் பிடிப்பு ஏற்படாது. அதற்கு பரிகாரமாக வீட்டில் வெள்ளி விளக்கில் ஒரு சிறு கல்கண்டு சேர்த்து வடக்கு நோக்கி நல்லெண்ணெய் தீபம் ஏற்ற கணவன்-மனைவி ஒற்றுமை பெருகும்.

    பெண் ஜாதகத்தில் செவ்வாய் வலிமை குறைந்தால் கணவரின் அன்பு முழுமையாக கிடைக்காது. இவர்கள் செவ்வாய் கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் விநாயகரை வழிபட கணவருடன் அன்பாக, ஒற்றுமையாக வாழ்வார்கள்.

    குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாமிடம். ஏழாமிடமான களத்திர ஸ்தானம், எட்டாமிடமான மாங்கல்ய ஸ்தானம் பலம் குறைந்தால் கணவரின் நடத்தை சிறப்பாக இருக்காது. கணவரின் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய முடியாது. இவர்கள் குளத்து மீனிற்கு பொரிபோட வேண்டும். அல்லது எறும்பு புற்றிற்கு சர்க்கரையிட்டால் குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும்.

    Next Story
    ×