என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அறிவோம் சிறுநீரகம்: வில்லனாக மாறும் உணவுகள்- டாக்டர் சவுந்தரராஜன்
    X

    அறிவோம் சிறுநீரகம்: வில்லனாக மாறும் உணவுகள்- டாக்டர் சவுந்தரராஜன்

    • பொதுவாக சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.
    • நமது உடலின் எடையில் ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் புரோட்டின் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    நம்முடைய உணவு பழக்க வழக்கங்களும் உடலில் வரும் வியாதிகளோடு தொடர்பு கொண்டவைதான். சிறுநீரக பாதிப்பு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் என்பதை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

    இப்படிப்பட்ட நோயை வராமல் தடுப்பது எப்படி? வந்தபின் கட்டுப்படுத்துவது எப்படி? அதற்கு உணவு முறைகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்ற கேள்வி எல்லோரிடமும் இருக்கிறது.

    அந்த காலத்தில் உணவே மருந்தாக இருந்தது. இன்று பெரும்பாலானவர்களுக்கு மருந்தே உணவாகி விட்டது. சிறுநீரக பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்து விட்டால் அது மேலும் பரவாமல் இருக்க செய்ய முடியும். அதற்கு மருந்துகளும், உணவு முறைகளும் கை கொடுக்கும்.

    டயாலிசிஸ் என்ற நிலையை எட்டிவிட்டால் வாழ்க்கை முழுவதும் டயாலிசிஸ் செய்துதான் ஆக வேண்டும். சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டவர்கள், சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள், சிறுநீரக தொற்றுக்கு ஆளானவர்கள், புரதம் கழிதல் இருப்பவர்கள், நிரந்தரமாக சிறுநீரகம் செயலிழந்து போனவர்கள் என்னென்ன மாதிரி உணவுகளை சாப்பிடலாம்.

    பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகளில் மூன்று விதமான சத்துக்கள் உள்ளன. கார்போஹைடிரேட், புரோட்டின், கொழுப்பு. இதில் புரத உணவுகளில் இருந்து தேவையான சத்துக்களை பிரித்து உடலுக்கு வழங்கி விட்டு எஞ்சி இருக்கும் கழிவுகளை வடிகட்டி வெளியேற்றுவதுதான் சிறுநீரகத்தின் வேலை.

    கழிவு எனப்படும் யூரியா ரத்தத்தில் கலக்காமல் பிரித்து, வடித்து தொடர்ந்து வெளியேற்றி கொண்டிருக்கிறது.

    பொதுவாக சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை சொல்வார்கள். நான் அசைவ பிரியன் ஆயிற்றே என்னால் முற்றிலும் எப்படி தவிர்க்க முடியும் என்று சிலர் கேட்கலாம்.

    அசைவ உணவை தவிர்க்க சொல்வதற்கு காரணம், அதில் புரோட்டின், பாஸ்பேட் அதிக அளவில் இருக்கிறது. அதிக அளவில் புரோட்டின் நிறைந்த அசைவ உணவுகளை மூன்று வேளையும் மூக்கு பிடிக்க சாப்பிட்டால் ஏற்கனவே செயலிழந்து இருக்கும் சிறுநீரகம் தொடர்ந்து செயல்பட்டு பிரித்தெடுக்கும் வேலைகளை செய்ய முடியாமல் சிரமப்படும். எனவே சிறுநீரகத்துக்கு ஏற்படும் சுமையை குறைப்பதற்காகத்தான் இந்த கட்டுப்பாடு.

    அசைவ உணவே சாப்பிடக்கூடாது என்பது அல்ல. வாரத்தில் ஒருநாள் அல்லது இரண்டு நாள் 50 கிராம் அளவுக்கு மீன் அல்லது கோழி போன்ற அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். முட்டையின் வெள்ளைக் கருவை சாப்பிடலாம். புரோட்டின் உடலுக்கு அத்தியா வசியமானது.

    நமது உடலின் எடையில் ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் புரோட்டின் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக ஒருவர் 50 கிலோ எடை உடையவராக இருந்தால், அவர் 50 கிராம் புரோட்டின் சேர்த்துக் கொள்ளலாம்.

    சிறுநீரகத்தின் செயல்பாட்டை பொறுத்து அதன் நிலைகளை பார்த்து 0.6 கிராம்/கிலோ, 0.33 கிராம்/கிலோ என்ற விகிதத்தில் புரோட்டினை சேர்த்துக் கொள்ளும் படி உணவு முறைகளில் கட்டுப்பாடுகளை விதிப்போம்.

    அதேநேரம் ஒரேயடியாக புரோட்டினை சாப்பிடாமல் தவிர்த்து விடவும் முடியாது. அவ்வாறு தவிர்த்தால் உடல் சோர்ந்து போகும். நமது உடலுக்கு அன்றாட தேவைக்கு ஏற்றவாறு புரோட்டின் எடுத்துக் கொள்ள வேண்டும். சைவ உணவுகளை, அதாவது காய்கறிகளை சாப்பிடுபவர்களுக்கு எந்த தடையும் கிடையாது.

    ஆரம்ப காலத்தில் பருப்பு சாப்பிடக்கூடாது என்பார்கள். ஆனால் நவீன மருத்துவத்தில் பருப்புக்கு எந்த தடையும் இல்லை. பருப்பு, மோர், ரசம், சாம்பார் ஆகியவற்றை சாப்பிடலாம். சிறிதளவு நெய்கூட சேர்த்துக்கொள்ளலாம்.

    பொட்டாசியம் உடலில் அதிகமாக இருந்தால் சைவ உணவிலும் கீரையை எடுத்துக்கொள்ள கூடாது. ஏனெனில் பொட்டாசியம் அளவுக்கு மேல் உடலில் சேர்ந்தால் அது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

    சிறுநீரக நோயாளிகளுக்கு வில்லனாக இருப்பதே இந்த பொட்டாசியம்தான். பொட்டாசியம் அதிக அளவில் சேர்ந்தால் இதயத்தை பாதிக்கும். தூக்கத்திலேயே மாரடைப்பு நேரிடலாம். இதய செயலிழப்பு ஏற்படலாம். நிரந்தரமாக செயலிழந்து போனவர்கள் மாதுளை, திராட்சை, பேரீட்சை பழம் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் பொட்டாசியம் அதிக அளவில் இருக்கிறது.

    ஆப்பிள், பப்பாளி, கொய்யா, அன்னாசி ஆகிய பழங்களை சாப்பிடலாம். அதேநேரம் போதுமான அளவு தண்ணீரும் குடிக்க வேண்டும். கால் வீக்கம் வராமல் இருந்தால் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் சிறுநீர் கழிப்பதாக இருந்தால் 2 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். கால் வீக்கம் காணப்பட்டால் 800 மி.லி.தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    நம் உணவு முறைகளில் முக்கியமாக கவனிக்க வேண்டியது உப்பு. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். ஆனால் உப்புதான் தப்பாகி விடுகிறது. பல நேரங்களில் உடலுக்கு ஆபத்தையும் கொடுக்கிறது. பெரும்பாலான நோய்களுக்கு உப்பே காரணமாகவும் இருக்கிறது.

    தென்னிந்திய உணவுகளை பொருத்தவரை தினசரி உணவில் 15 முதல் 20 கிராம் உப்பு சேர்க்கிறோம். இதுவே அதிகமான அளவாகும். உடலில் உப்பு அதிகரித்தால் உயர் ரத்த அழுத்தம் வரும். உயர் ரத்த அழுத்தம் வந்தால் இதயம் பாதிக்கும். இதயம் பாதிக்கும் போது அது சிறுநீரகத்தையும் பாதிக்கும்.

    நான் பார்த்த நோயாளிகளில் ஒருநோயாளி மறக்க முடியாதவர். ஒருநாள் என்னை பார்க்க வந்தவர் சிறு பிள்ளையை போல தேம்பி தேம்பி அழ தொடங்கி விட்டார். அவர் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பது எனக்கு தெரியும். அப்படி இருந்தும் அவர் அழுதது எனக்கே கஷ்டமாக இருந்தது. அவரை ஆசுவாசப்படுத்திய பிறகு அவர் என்னிடம் சொன்னார். டாக்டர் வெறும் 500 ரூபாயோடுதான் சென்னைக்கு வந்தேன். இப்போது எனக்கு 500 கோடி அளவுக்கு சொத்து இருக்கிறது. எல்லா சுகமும் கிடைக்கிறது. ஆனால் என்னென்ன நோய்கள் உண்டோ அத்தனை நோய்களும் வந்திருக்கிறது.

    சர்க்கரை வியாதி இருக்கிறது. அரிசி சோறு சாப்பிடக்கூடாது என்கிறார் சர்க்கரை டாக்டர். இருதய டாக்டர் கொழுப்பு வேண்டாம் என்கிறார். கிட்னி டாக்டர் புரதத்தை குறையுங்கள் என்கிறார். ரத்த அழுத்தம் இருக்கிறது, எனவே உப்பையும் தவிருங்கள் என்கிறார். உணவில் இருப்பது இந்த 3 சத்துதான். உப்பும் இல்லாமல், சத்தும் இல்லாமல் எதை தான் உண்பது.

    இப்படி ஒரு வாழ்க்கை தேவையா என்றுதான் நினைக்கிறேன். அன்று 500 ரூபாய் மட்டும் இருந்த போது எந்த வியாதியும் இல்லாமல் சந்தோஷமாக இருந்தேன். இன்று 500 கோடி இருந்தும் எதையும் சாப்பிட்டு அனுபவிக்க முடியாதவனாக இருக்கிறேன் என்றார்.

    அவர் சொல்வது சரிதான். என்ன செய்வது நோய் வந்துவிட்டது. அதில் இருந்து தற்காத்து கொள்ள இந்த பத்திய முறைகள் அவசியமாகிறது. சிறுநீரகம், இதயம், ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை வியாதி இவை அனைத்தும் அண்ணன், தம்பிகள் போன்றவர்கள். முதலில் சர்க்கரை வியாதி வரும். அதன்பிறகு ரத்த அழுத்தம் வரும். கொலஸ்டி ரால் வரும். பின்னர் சிறுநீரகம், இதய மெல்லாம் பாதிக்கும். எனவேதான் இவைகள் தொடர்பாக சிறப்பு மருத்துவர்களை பார்க்கும் போது ஒவ்வொரு மருத்துவர்களும் அந்தந்த நோய்க்கு தகுந்தவாறு உணவு கட்டுப்பாடுகளை சொல்லுவார்கள். நான் நோயாளிகளிடம் கேட்டுக்கொள்வது உணவு முறையில் குழப்பம் வேண்டாம். மருத்துவர்களை பார்க்கும் போது என்னென்ன சாப்பிடக்கூடாது என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களுடைய உணவு பழக்கத்தில் அவர் சாப்பிடக்கூடாது என்ற உணவுகளை சாப்பிடுவதாக இருந்தால் அதை தவிருங்கள்.

    என்னிடம் சிகிச்சை பெற வருபவர்களுக்கு அச்சிடப்பட்ட உணவு குறிப்புகளை கொடுக்க கூடாது என்பது எனது கண்டிப்பான உத்தரவு. ஒவ்வொரு நோயாளிகளுக்கும் ஒவ்வொரு விதமான உணவு பழக்கம் இருக்கும். அதை ஒரேடியாக நாம் மாற்றி விட முடியாது. முதலில் நோயாளியிடம் பொறுமையாக அமர்ந்து அன்றாட உணவு பழக்க, வழக்கங்களை கேட்க வேண்டும். அதன்பிறகு அதில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். எதை குறைப்பது, எதை சேர்த்துக்கொள்வது என்று விளக்கி சொல்ல வேண்டும். அதன் மூலம் நோய்களை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

    மருத்துவர்களுக்கும் தேவை மனநல ஆலோசனை

    நோயாளிகளுக்கு மட்டுமல்ல. சிறுநீரக சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவினருக்கும் இப்படிபட்ட உளவியல் ரீதியான ஆலோசனைகள் தேவை.

    நான் நேரடியாகவே பார்த்திருக்கிறேன். அனுபவம் வாய்ந்த பல நர்சுகள் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். டாக்டர் இந்த வார்டில் பணி புரிய மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. இதய நோயாளிகள்தான் திடீரென்று மரணிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் இங்கு அதைவிட மோசமாக இருக்கிறது. குடும்பம் போல் பழகி விடுகிறார்கள். ஒவ்வொருவராக இறக்கும் போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. எனவே நான் வேறு வார்டுக்கு செல்ல விரும்புகிறேன் என்பார்கள்.

    அவர்களுக்கும் பட்சாதாப உணர்வுகள் உண்டல்லவா! எல்லோரும் மனிதர்கள்தானே. நான்கூட அடிக்கடி சொல்வேன், ஒருநாள் சந்தோஷமாக சிரித்தபடி வருவேன். திடீரென்று பார்த்தால் ஏதோ ஒரு யோசனையில் சென்று கொண்டிருப்பேன். சில நாள் தேவையில்லாமல் எரிந்து விழுவது போல் இருக்கும். இதுவும் என்னில் ஏற்பட்ட தாக்கங்கள்தான்.

    சில ஆண்டுகள் தொடர்ந்து டயாலிசிஸ் செய்து வந்திருப்பேன். திடீரென்று அவர் இறந்த விட்டார் என்ற தகவல் கிடைக்கும். அந்த நேரத்தில் நம்மால் அவரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என்ற ஒருவிதமான மன கஷ்டம் ஏற்படுவதுண்டு. அந்த கஷ்டத்தோடு வேலைக்கு செல்லும் போது சந்தோஷம் இருக்காது. அதேபோல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய செல்லும் போது ஒருவிதமான படபடப்பு இருக்கும். பாவம் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடக்க வேண்டும். அவர் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த எண்ணத்திலேயே சில நாள் இரவில் தூக்கம் வராமல் இருந்ததும் உண்டு. அப்படிப்பட்ட நேரங்களில் எனது மனைவியே எனக்கு ஆறுதல் சொல்வார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடக்கும். நம்பிக்கையோடு செல்லுங்கள். பாபாவை நினைத்து கொள்ளுங்கள் என்று அவர் சொல்வதுண்டு. சிறுநீரக சிகிச்சையும், டாக்டர்களும், நோயாளிகளும் ரெயில் பயணத்தில் வந்து செல்பவர்கள் போல் அல்ல. தொடர்ந்து நம்மோடு இருப்பவர்கள். ஒரே டாக்டரின் கண்காணிப்பில் பல வருடங்கள் இருப்பவர்கள்.

    அவர்கள் திடீரென்று இறந்து போக நேரிட்டால் அது மருத்துவர்களுக்கும், சக பணியாளர்களுக்கும் கூட மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்ததான் செய்யும். எனவேதான் இந்த மருத்துவ குழுவில் உளவியல் சார்ந்த ஆலோசனைகள் வழங்க மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்று நான் சொல்வதுண்டு.

    சிறுநீரக நோயாளிகள் மன ரீதியாக பாதிக்கப்படாத வகையில் பார்த்து கொள்ள வேண்டியதும் அவசியம்.

    (தொடரும்...)

    Next Story
    ×