என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மருத்துவம் அறிவோம்: கணையத்தை பாதுகாக்கும் உணவு முறை- 238
- நாம் பலவித உண்ணாவிரத முறைகளை பார்த்துள்ளோம்.
- சூரிய உதயத்தில் எழுந்து விடுங்கள். எழுந்த அரை மணி நேரத்திற்குள் சாப்பிடுங்கள்.
சிலர் உட்கார்ந்திருக்கும் பொழுதும் கால்களை அசைத்துக் கொண்டே இருப்பார்கள். டெய்லர் வேகமாக தைப்பது போல் இந்த கால் அசைவுகள் இருக்கும். இது இவர்களை அறியாமலேயே இவ்வாறு செய்வார்கள். இந்த பழக்கமுடைய சிலருக்கு ஒரு வகை கால் பிரச்சினை கூட இருக்கலாம். இரும்பு சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம். மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. காலுக்கு பயிற்சியாளரின் ஆலோசனையின் பேரில் சில பயிற்சிகளையும் அளிக்க வேண்டும்.
* ஒரு ஜப்பானிய விஞ்ஞானி உணவு முறையில் சில விதிகளை பின்பற்றினால் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்கலாம் என கூறுகின்றார். இதற்காக நோபல் பரிசினையும் 2016-ல் பெற்றுள்ளார்.
நாம் கொஞ்ச நேரம் உண்ணா விரதம் இருந்தால் நம் உடலில் உள்ள செல்கள் பழையனவற்றினை கழித்து புதுமை பெற்று விடுகின்றன. இதனை தானியங்கி என்பர் இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். உணவு நேரத்தில் சிறிது மாற்றம் செய்ய வேண்டும். அவ்வளவுதான்.
நாம் பலவித உண்ணாவிரத முறைகளை பார்த்துள்ளோம். அதுபோல் இதுவும் எளிய முறைதான். இந்த முறைக்கு டயட் வின்டோஸ் என்று பெயர். உதாரணமாக ஒருவர் காலை 8 மணிக்கு காலை உணவு உட்கொள்கின்றார். பின் மதியம், நடு நடுவே என்று தொடர்ந்து இரவு உணவினை 8 -10 மணிக்கு முடிக்கின்றார் என்றால் இந்த உணவு ஜன்னல் 12-14 மணி நேரம் வரை உள்ளது.
2017-ல் ஒரு ஆய்வு நடத்தினார்கள். அதன்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை உணவு உட்கொண்டவர்கள் சற்று குறைந்த ஆரோக்கியத்துடன் இருந்தார்கள். யாரைவிட குறைவாக உள்ளது தெரியுமா? காலை 8 மணிக்கு உணவினை உண்டு பின் மதியம் 2 மணிக்குள் உணவினை முடித்துக் கொள்பவர்கள். இதற்கு பின் தேவையான பொழுது நீர் மட்டுமே அருந்துவார்கள். இத்தகையோரின் ஆரோக்கியம் அநேக நோய்களில் இருந்து பாதுகாக்கப்பட்டு இவர்கள் ஆரோக்கியத்துடனும், இளமையுடனும் இருக்கின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன.
உண்ணும் நேரம் என்பதனை சற்று சுறுக்கும்பொழுது ஆரோக்கியம் கூடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனை வளரும் குழந்தைகள் கர்ப்பகாலம், குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் போன்றவற்றில் செய்ய வேண்டாம். குறிப்பிட்ட நோய் பாதிப்பு உடையவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று அதனை பின்பற்றவும். நல்ல ஆரோக்கியத்தில் இருக்கும் நடுத்தர வயதினர் இதனை பின்பற்றுவது ஆரோக்கியத்தினைக் கூட்டும். இதனை முதலில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை, பின்பு காலை 8 மணி வரை என நாமே சரி செய்து கொள்ளலாம்.
இரவு தூங்கும் நேரம் நாம் இயற்கையாகவே உண்ணாமல் தான் இருக்கின்றோம். ஆனால் தூங்க செல்லும் வரை ஓயாமல் உண்கின்றோம். இரவு நேரம் சென்று உண்ணும்பொழுது உடலின் செயல்கள் கடிகாரம் போன்று செயல்படாமல் சற்று தன் கட்டுப்பாட்டினை இழக்கின்றது. இரவு அதிக நேரம் விழிப்பதும், உண்ணுவதும், கார்டிஸால் ஹார்மோனை அதிகப்படுத்தி விடுகின்றது. எனவே தான் காலையில் சோர்வாக கார்டிஸால் அளவு குறைந்து எழுகின்றோம். இதனால் சர்க்கரை நோய், உடல் பருமன், மனச் சோர்வு என பல தாக்குதல்கள் வருகின்றன.
எனவே தான் சூரிய உதயத்தில் எழுந்து விடுங்கள். எழுந்த அரை மணி நேரத்திற்குள் சாப்பிடுங்கள். எழுந்த 2-3 மணி நேரத்திற்குள் வேலை செய்யலாம். காலை உணவினை விட மதிய உணவு குறைவாக இருக்க வேண்டும். இரவு உணவினை 4 மணிக்குள் முடித்துவிட வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். இதை படித்த உடனேயே பலரும் மயக்கம் போட்டு விழுந்து விடுவர். ஆரம்பத்தில் இப்படி செய்யாமல் மெதுவாக நேரத்தினை சரி செய்து கொள்ளலாம். எடை நன்கு குறையும். ஆரோக்கியம் கூடும். இம்முறையில் எப்பொழுது வேண்டுமானாலும் தண்ணீர் குடிக்கலாம். தண்ணீர் கட்டாயம் குடிக்கவும் வேண்டும்.
இரவில் 7 மணி அளவில் பசி இருந்தால் சிறிதளவு காய்கறி சாலட் எடுத்துக் கொள்ளுங்கள். நாளடைவில் இது சரியாகி விடும். தூக்கம், நல்ல மனநிலை இவை இருக்கும்.
கொஞ்சம் முயற்சி செய்துதான் பார்ப்போமே!
கணையம் என்று சொல்லப்படும் ஜீரண மண்டலத்தின் முக்கிய உறுப்பு ரத்தத்தில் சர்க்கரை உணவினை சீராக வைக்க உதவுகின்றது. செரிமானத்திலும் இதன் பங்கு அதிகம் உண்டு. இதனைப் பற்றி சில முறைகள், பல முறைகள் நாம் படித்து அறிந்து கொண்டுள்ளோம். இப்படிப்பட்ட கணையத்தினைக் காப்பதற்கும் நம் வீட்டிலேயே எளிதான உணவுகள் உள்ளன. அவற்றினையும் அறிந்து கொள்வோம்.
மஞ்சள் வீக்கத்தினைக் குறைக்க வல்லது. கணையத்தில் ஏற்படும் எரிச்சல் உணர்வினை நன்கு குறைக்கக் கூடியது. உணவில் மஞ்சள் சேர்ப்பது நமது பழக்கம்தான் என்றாலும் மஞ்சள் பால், சுடுநீரில் ¼ டீஸ்பூன் மஞ்சள் கலந்து குடிப்பது போன்றவை பழக்கத்தில் உள்ளன. இதனைப் பற்றி அலோபதி அல்லது ஆயுர்வேத மருத்துவர் மூலம் கேட்டு அவரவர் உடலின் தன்மைக் கேற்ப எடுத்துக் கொள்வது நல்லது.
பூண்டு- இதனையும் உணவினில் சேர்த்துக் கொள்கின்றோம். பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியினை ஏற்படுத்தும். மேலும் உடலின் அனைத்து உறுப்புகளின் சிசுக்களையும் சீர்படுத்தும்.
பசலை கீரை- இதில் உள்ள இரும்பு சத்து வீக்கத்தினைக் குறைக்க வல்லது. வைட்டமின்-பி சத்து கிடைக்கின்றது. புற்று நோய் பாதிப்பினை வெகுவாய் குறைக்கும் திறன் கொண்டது.
இதே போன்று புரோகலி, காலிபிளவர் போன்றவை புற்று நோய் பாதிப்பினை குறைக்கும் சக்தி கொண்டவைகள் ஆகும்.
பொதுவில் கொட்டை வகை உணவுகள் மூளையினை காக்கும் என்பர். தக்காளி இருதயத்திற்கு நல்லது அது போன்று சர்க்கரை வள்ளி கிழங்கு கணைய புற்று நோய் பாதிப்பினை 50 சதவீதம் வரை குறைக்க வல்லது.
மது, புகை இல்லாது இருக்க வேண்டும். தேவையான அளவு நீர் குடிக்க வேண்டும். இவற்றினை கடைபிடிப்பது எளிது தானே. செயல்படுத்துவோேம.
கல்லீரல்- என்றாலே பாதுகாப்பிற்காக மஞ்சள், துளசி, இஞ்சி, ஜீரகம், தனியா, புதினா இவைகளின் சில கலவைகளை மாறி மாறி சேர்த்து டீ வைத்துக் குடிக்கலாம். சமைத்து உண்ணலாம். முள்ளங்கி, முள்ளங்கி இலை, முட்டைகோஸ், புரோகலி போன்றவற்றினை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
எண்ணையில் தயாரான உணவுகளை தவிர்த்து விடுங்கள். கல்லீரல் நன்றாக இருக்கும்.
சர்க்கரை உணவினை தவிருங்கள் என்பது மருத்துவ உலகின் மந்திரம் ஆகி விட்டது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க வேண்டும் என்பதனாலேயே அதிகம் வலியுறுத்தப்படுகின்றது. சில அறிகுறிகளும் நாம் கூடுதல் சர்க்கரை எடுத்துக் கொள்கின்றோம் என்பதனைக் காட்டும். அவற்றினைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.
திடீரென உங்களால் நடைபயிற்சி செய்ய முடியவில்லை. வீட்டில் நடப்பது கூட கடினமாக இருக்கின்றதா? காரணம் வலி என்கின்றீர்களா? உள்ளே வீக்கம் ஏற்பட்டுள்ளதன் அறிகுறியே இந்த வலி.
உங்கள் உணவில் அதிக சர்க்கரை இருந்தால் வீக்கம் ஏற்படுகின்றது. இதன் விளைவாக மூட்டுவலி, கண்ணில் புரை, இருதய நோய், மறதி, சுருங்கிய சருமம் என பாதிப்புகள் ஏற்படுகின்றன.
உணவில் சர்க்கரை உணவுகளை தவிர்ப்பது மட்டும் இல்லாமல் அதிக மாவு சத்து உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். முழு தானியம், புரதம், நல்ல கொழுப்பு, பச்சை காய்கறிகள், பப்பாயா, கொய்யா (முழுமையாய் கனியாதது) எலுமிச்சை, ஆரஞ்சு பழங்களை வெட்டி உண்ண பழங்குகள். (எலுமிச்சை தவிர்த்து) உடனடி வலி வீக்கங்கள் குறையும். பெரிய பாதிப்புகளும் தவிர்க்கப்படும்.
அதிக சர்க்கரை உணவானது மேலும் மேலும் அதனையே உண்ணத் தூண்டும். அப்படி தோன்றும் போது ஓரிரு துண்டு பப்பாயா அல்லது கொய்யா எடுத்துக் கொள்ளுங்கள். இனிப்பு வகை உணவுகள் இருக்கும் இடத்தில் இருந்தே ஓடி விடுங்கள்.
சரும பாதிப்புகள் இருக்கின்றதா? உங்கள் உணவில் சர்க்கரை அளவு கூடுதலாய் உள்ளதா? என்பதனையும் கவனியுங்கள்.
எடை கூடுகின்றதா? பல் சொத்தை ஏற்படுகின்றதா? வயிறு உப்பிசம் ஏற்படுகின்றதா?
சர்க்கரை, மாவு சத்து உணவு, நொறுக்கு தீனி இவற்றினை வெகுவாய் குறைத்து விடுங்கள்.
சர்க்கரை நோய் வந்தால்....
சர்க்கரை நோய் சத்தம் போடாமல் நன்கு பரவிக் கொண்டு வரும் ஒரு பாதிப்பு ஆகும். எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் ஒருவரின் உடலில் புகுந்து திடீரென அதிக பாதிப்பினைக் கூட வெளிப்படுத்தலாம். பெற்றோர் இருவருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு என்றாலும் அல்லது ஒருவருக்கு இருந்தாலும் கூட அவர்களது பிள்ளைகளுக்கு கூடுதல் கவனம் எடுத்து கொள்ள வலியுறுத்தப்படுகின்றது. அனைவருக்குமே வாழ்க்கை முறை மாறுதல்கள் அறிவுறுத்தப்படுகின்றது. இருப்பினும் சர்க்கரை நோய் கை எட்டும் தூரத்தில் என்ற பாதிப்பு ஏற்படும் போது அதன் அறிகுறிகளை அறிந்து கொள்வதும் நல்லதே.
* சர்க்கரை அளவு இயல்பினை கூட சற்று கூடுதலாக இருந்தாலும் உடனடி நல்ல கவனம் கொடுத்தால் பாதிப்பினை நன்கு தள்ளி போட முடியும். பாதிப்பு இன்றியும் வாழ முடியும்.
* காரணமின்றி சோர்வு அதிகம் ஏற்படுகின்றதா? சர்க்கரை அளவினையும் பரிசோதித்துக் கொள்ளலாமே.
* சிறு காயங்கள் கூட ஆறுவதற்கு கூடுதல் காலம் எடுத்து கொள்ளலாம்.
* படபடப்பு, எரிச்சல், கோபம் கூட அறிகுறியாக இருக்கலாம்.
* அடிக்கடி சிறுநீர் செல்லுதல், அடிக்கடி தாகம் எடுத்தல் இருக்கலாம்.
* கை, கால்களில் மதமதப்பு, குறுகுறுத்த உணர்வு இருத்தல்
* உப்பிசம், காற்று, வயிற்று பிரட்டல், அஜீரணம் என அடிக்கடி ஏற்படலாம்.
* மூட்டுகளில் வலி இருக்கலாம்.
* சருமத்தில் மாறுதல், சிறு முடிச்சுகள் இருக்கலாம்.
* பார்வை மங்கலாக, கலங்கலாக இருக்கலாம்.
* சிறுநீரக கோளாறுகள் ஏற்படலாம்.
அறிகுறிகளை கவனித்து சரி செய்து கொண்டாலே அநேக பாதிப்புகள் குறைந்து விடும்.






