search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நிலவை வசப்படுத்த துடிக்கும் மனிதன்
    X

    நிலவை வசப்படுத்த துடிக்கும் மனிதன்

    • 14-ம் நாள் வெற்றிகரமாக இஸ்ரோ தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது.
    • உலக பொருளாதாரமே மாறி விடும். பிளாட்டினம் வைத்திருக்கும் நாடே உலகின் தலைமைப் பீடத்தைப் பிடிக்கும்!

    உலகெங்கும் ஜூலை மாதம் 20-ம் நாள் உலக சந்திர தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கியநாடுகளின் பொதுச்சபை இந்த நாளை உலக சந்திர தினமாகக் கொண்டாடுவதற்கான தீர்மானத்தை 2021-ல் நிறைவேற்றியது.

    சந்திரனால் ஈர்க்கப்படாத மனிதரே இல்லை. காலம் காலமாகக் குழந்தைகளுக்குச் சந்திரனைச் சுட்டிக் காட்டி அம்புலிமாமா வா வா என்று அழைத்து வந்திருக்கிறோம். காதலன் காதலியைப் பார்த்து, 'வதனமே சந்திர பிம்பமோ' என்று சந்திரன் போன்ற முகம் என்று வர்ணித்து மகிழ்கிறான்.

    காலம் காலமாக இருந்து வரும் இந்தக் கவர்ச்சியினால் விண்வெளி யுகத்தில் மனிதன் சந்திரனில் காலடி பதிக்கத் திட்டமிட்டான்; வெற்றியும் பெற்றான். இனி மிகப் பெரும் வெற்றிகளையும் பெறப் போகிறான். ஆகவே தான் இந்தக் கொண்டாட்டம்.

    சந்திர மனிதன்!

    உலக சந்திர தினமாக ஜூலை 20 ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது?

    இந்த நாளில் தான் 1969-ம் ஆண்டு நீல் ஆர்ம்ஸ்ட்ராங் மனித குலத்தின் பிரதிநிதியாக முதன் முதலில் சந்திரனில் தன் காலடித் தடத்தைப் பதித்தார்.

    அமெரிக்காவின் பெருமுயற்சியின் காரணமாக சந்திரனுக்கு விண்கலத்தில் பயணித்து அங்கு இறங்கி தன் காலடியைப் பதித்த அவர், "மனிதனுக்கு அது ஒரு சிறிய தடம். மனிதகுலத்திற்கு பிரம்மாண்டமான தாவல்" என்று குறிப்பிட்டார். மொத்த உலகமும் அவரது இந்தக் கூற்றை ஆமோதித்தது.

    ஓஹையோவில் 1930-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி பிறந்த ஆர்ம்ஸ்ட்ராங் வானில் பறப்பதில் தீரா ஆசை கொண்டார். தன் வீட்டிலேயே ஒரு சிறிய விண்ட் டனலை அமைத்து விமானங்களில் சிறிய மாதிரிகளைச் செய்து பார்ப்பது அவரது பொழுது போக்கு. படிப்பை முடித்த பின்னர் விமான நிறுவனத்தில் சேர்ந்த அவர் இரண்டு லட்சத்தி ஏழாயிரத்து ஐநூறு அடி உயரம் பறந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

    1962-ல் விண்வெளி வீரர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட அவர் 1969-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி சந்திரனை நோக்கிப் பயணம் மேற்கொண்டார். உலக சாதனையை நிகழ்த்தினார்.

    எதற்காக சந்திரனுக்குப் பயணம்?

    எதற்காகப் பெரும் பொருட்செலவில் இப்படி ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும்?

    மனித குலம் நசித்து விடாமல் நீடித்து இருக்க வேண்டும் என்ற அக்கறையினால் தான்!

    நாளுக்கு நாள் பெருகி வரும் ஜனத்தொகை, பூமியின் ஆதார வளங்களான நிலம், நீர், காற்று ஆகியவற்றை அசுத்தப்படுத்தி சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தல், ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் ஏற்படும் போரினால் மனித குல நாசம் ஆகியவை போன்ற காரணங்களினால் மனிதன் இன்னொரு கிரகத்தில் சென்று வாழ்வதற்கான முயற்சி தேவை என்று ஆகப் பெரும் விஞ்ஞானிகள் கருத்தைத் தெரிவிக்கின்றனர்.

    பிரபல திரைக்கதை வசனகர்த்தா வான சார்லஸ் பிரோசர், அடுத்த நூற்றாண்டு முடிவதற்குள் மனித குலம் இருக்குமா என்று கவலைப்பட்டு 'கையாசெலின் - சந்திரனுக்குச் சென்று குடியேறி பூமியைக் காப்போம்' என்ற படத்தை எடுத்தார். உலகெங்கும் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    பிரபல விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகிங் விண்வெளிக்குச் சென்று குடியேறினாலொழிய இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கூட மனித குலம் தாக்குப் பிடிக்காது என்றார். ஆனால் இதை மறுத்த சார்லஸ் பிரோசர் ஆயிரம் ஆண்டுகள் என்பது மிக மிக அதிகப்படியான காலம். உடனடியாக நாம் விண்வெளியில் குடியேற வேண்டும்" என்றார்.

    விண்வெளியிலும் சென்று ஆதிக்க மனப்பான்மையைக் கொள்ளக் கூடாது என்று விண்வெளி உடன்பாடு ஒன்று சர்வதேச அளவில் ஒப்பந்தமாகி உள்ளது. இதை ஏராளமான நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

    இதன் படி ஏராளமான பாதுகாப்பு விதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

    நான்கு நாடுகளில் ஒன்று இந்தியா!

    சந்திரன் மீது கண்ணைப் பதித்து ஆக்கபூர்வமான வெற்றிகளைப் பெற்றுவரும் நாடுகள் நான்கு. ரஷியா, அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகியவையே அந்த நாடுகள்.

    முதலில் விண்வெளிப் பயணம் ஒன்றை வெற்றிகரமாகச் செய்து காட்டியது ரஷியா. அதைத் தொடர்ந்து மிகப் பெரும் அளவில் விண்வெளி ஆய்வையும் பயணத்தையும் மேற்கொண்டு வெற்றி கண்டது அமெரிக்கா. சீனா தனது உள்ளார்ந்த ஆசையால் விண்கலங்களைத் தனியே அனுப்பி வெற்றிகளைப் பெற்றது.

    இந்த விண்வெளிக் களத்தில் இறங்கிய இந்தியா சந்திரயான் 1, சந்திரயான் 2 ஆகிய இரு கலங்களை சந்திரனை ஆராய அனுப்பியது.

    2008 அக்டோபர் 22-ந்தேதி செலுத்தப்பட்ட சந்திரயான் 1 மற்ற நாடுகள் கண்டுபிடிக்காத ஒரு மாபெரும் கண்டுபிடிப்பைச் செய்தது. சந்திரனில் நீர் அணுத்துகள்கள் உள்ளன என்பதை முதன் முதலாக இந்திய விஞ்ஞானிகளே கண்டுபிடித்து உறுதிப்படுத்தினர்.

    சந்திரயான் 2 துரதிர்ஷ்டவசமாக எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

    இப்போது 2023-ல் சந்திரயான்-3 ஜூலை

    14-ம் நாள் வெற்றிகரமாக இஸ்ரோ தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது.

    40 நாட்கள் பயணப்பட்டு சந்திரனில் மெதுவாகத் தரை இறங்கும் சந்திரயான் -3 அரிய பல கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துச் சொல்லும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். வெற்றியே பெறுவோம்.

    சந்திர வளம்!

    சந்திரனில் குடியிருப்பு அமைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு பிரம்மாண்டமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

    முதலில் விண்வெளியில் பறப்பதற்கே பெரும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஜீரோ கிராவிடி எனப்படும் எடையற்ற நிலையில் வாழ்வது என்பதே ஒரு அரிய காரியம். சாப்பிடுவது, உறங்குவது, ஆண்-பெண் ஒருவரை ஒருவர் தொடுவது என்பது கூட எளிதில் முடியாத காரியம். மனித குல சந்ததி பெருக்கத்தை எப்படிச் செய்ய முடியும்? விண்ணில் கர்ப்பமுற்று குழந்தை ஆரோக்கியமாகப் பிறப்பது சாத்தியமா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகளை விஞ்ஞானிகள் காண முயன்று வருகின்றனர்.

    சந்திரனின் மீது சீனா காட்டும் தீவிர அக்கறையைப் பற்றி ஆராயப் புகுந்த உலக விஞ்ஞானிகள் அதற்கான காரணத்தைக் கண்டு பிரமித்தனர்.

    பூரண எரிபொருள் - பெர்பெக்ட் யியூயல் - எனப்படும் ஹீலியம்- 3 சந்திரனில் அபரிமிதமாகக் கிடைக்கிறது.

    எதிர்காலத்தில் எந்த நாடுகளிடம் ஹீலியம் - 3 இருக்கிறதோ அவையே வல்லரசு நாடுகள். ஆகவே தான் சீனா சந்திரனைக் 'கைப்பற்ற' தீவிரம் காட்டுகிறது.

    இந்த ஹீலியத்தைப் பற்றி நன்கு ஆராய்ந்தவர் விஞ்ஞானி ஜெரால்ட் குல்கின்ஸ்கி. இவரை அமெரிக்கா அழைத்தது. நாசா தனது ஆலோசனைக் குழுவில் இவரைச் சேர்த்துக் கொண்டது.

    ஹீலியம் - 3 சந்திரனில் ஒரு மீட்டர் ஆழத்தில் கிடைக்கிறது என்பதைச் சொன்னவர் குல்கின்ஸ்கி தான்.

    பூமியில் கிடைக்காத இந்த அரிய எரிபொருளை யார் முதலில் சந்திரனில் இருந்து கொண்டு வருகிறார்களோ அவர்களே உலகை ஆளப்போகும் மன்னர்கள்!

    ஒரு எடுத்துக்காட்டை மட்டும் இங்கு சொல்லலாம். வெறும் நாற்பதே நாற்பது மெட்ரிக் டன் ஹீலியம் - 3-ன் ஆற்றல் மூலமாக அமெரிக்காவில் ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படும் மின்சக்தியைப் பெறலாம்!

    சந்திரப்பரப்பை 700 டிகிரி சென்டிகிரேட் அளவு உஷ்ணப்படுத்தினால் போதும், ஹீலியம் வாயு தானாகப் பிரியும். அதைப் பிடித்துக் குளிர வைக்க வேண்டியது தான்.

    இது மட்டுமல்ல. மலைக்க வைக்கும் இதர தாது வளங்களில் முக்கியமான பிளாட்டினமும் சந்திரனில் அபரிமிதமாக உள்ளது. லட்சக்கணக்கான விண்கற்கள் சந்திரனின் மீது வெகு காலம் மோதியதால் ஏற்பட்ட பிளாட்டின பரப்பு, சந்திரனை தங்க முலாம் பூசிய சந்திரப் பரப்பு என்று கவிஞர்கள் சொல்லி வரும் வர்ணனையை மாற்றி, பிளாட்டின முலாம் பூசப்பட்ட சந்திரன் என்று சொல்லுமளவு மாற்றி இருக்கிறது.

    இந்த பிளாட்டினத்தைச் சந்திரனில் இருந்து கொண்டு வந்தால் 'ரேர் எர்த் மார்க்கெட்' எனப்படும் அரியவகைச் சந்தைப் பொருள்களில் ஒன்றாக இது இருக்கும்.

    குறைந்தபட்ச மதிப்பீடாக ஆண்டிற்கு சுமார் லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாட்டினத்தை உலகில் விற்க முடியும். உலக பொருளாதாரமே மாறி விடும். பிளாட்டினம் வைத்திருக்கும் நாடே உலகின் தலைமைப் பீடத்தைப் பிடிக்கும்!

    சந்திரன் உலகினர் அனைவருக்கும் பொது!

    இப்படி அரிய வளத்தைக் கொண்டிருக்கும் சந்திரன் அனைவருக்கும் பொது என்ற கருத்தைப் பெரும்பாலான உலக நாடுகள் ஏற்றுக் கொண்டு விட்டன!

    ஆனால் விசித்திரத்தில் விசித்திரம் என்னவெனில் இப்போதே ல்யூனார் எம்பசி என்ற நிறுவனம் சந்திரனில் பிளாட் போட்டு பூமியில் விற்கிறது. இந்த ரியல் எஸ்டேட் விற்பனையை 'அன் - ரியல் எஸ்டேட்' (Unreal Estate) என்று பலரும் கிண்டல் செய்தாலும் வாங்குபவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் - தங்கள் சந்ததியினருக்காக!

    இந்த நிறுவனத்துடன் சண்டை போட்டு ஒரு விவசாயி, சந்திரன் தன்னுடையதே என்று போட்டிக்கு வந்தார். அவர் கூறிய காரணம் அனைவரையும் அசத்திவிட்டது.

    250 ஆண்டுகளுக்கு முன்னர் பிரஷியா நாட்டை பிரடெரிக் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அப்போது அங்கு வாழ்ந்த ஒரு விவசாயிக்கு மற்றவரின் நோய்களைத் தீர்க்க வல்ல அபூர்வ ஆற்றல் இருந்தது. அவர் தனது அபூர்வ ஆற்றலால் மக்களின் நோய்களைக் குணப்படுத்தி வந்தார். இதனால் மனம் மிக மகிழ்ந்த பிரடெரிக் மன்னர் அந்த விவசாயிக்கு சந்திரனையே தானம் செய்து சாசனம் ஒன்றையும் வழங்கினார்.

    அந்த விவசாயின் பரம்பரையில் தான் வந்ததால் தனக்கே சந்திரன் சொந்தம் என்று சந்திர சாசனத்தைக் காட்டினார் அந்த விவசாயி.

    பெண்மணிகள் விரும்பும் சந்திரன்!

    வீராங்கனை கல்பனா சாவ்லாவை அறியாதவர் இருக்க முடியாது. அடுத்து இந்திய வம்சாவளியினரான சுனிதா வில்லியம்சும் விண்வெளி வீராங்கனை தான். இன்னும் விண்வெளிப் பயணம் மேற்கொண்ட ஏராளமான வீராங்கனைகள் உண்டு.

    நமது பெண்மணிகளுக்குச் சந்திரன் என்றால் தனி ஒரு ஈர்ப்பு உண்டு. நிலவில் தேன் நிலவு கொண்டாட வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

    முதன் முதலில் விண்வெளியில் சுற்றுலா சென்ற முதல் பெண்மணியாகத் திகழ்கிறார் அனூஷே அன்சாரி. இவரே இப்படிப் பயணம் மேற்கொண்ட முதல் இஸ்லாமியப் பெண்மணி ஆவார். முதலாவது ஈரானியப் பெண்மணியும் இவரே.

    விண்வெளி சென்ற வீராங்கனைகளில் பலர் விண்வெளியில் கலத்தை விட்டு வெளியே வந்து நடந்தும் காட்டி விட்டனர்.

    நவகிரகங்களில் சந்திரன்

    இந்திய நாகரிகத்தில் முக்கிய இடத்தைப் பிடிப்பவை நவ கிரகங்களும் 27 நட்சத்திரங்களுமே.

    சந்திரன் மனதிற்கு அதிபதி என்று கூறுகின்றன நமது அறநூல்கள்.

    இந்த மனதிற்கு அதிபதியை இந்தியா வெற்றி கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை நினைக்கும் போது நாம் பெருமை கொள்வது தவறா, என்ன?

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    Next Story
    ×