என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மனிதநேயமாக வாழும் எம்.ஜி.ஆர்...!
    X

    மனிதநேயமாக வாழும் எம்.ஜி.ஆர்...!

    • சினிமாவை பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமே நடிகர்கள் பார்த்த நேரத்தில், அதற்குள் சமூக அக்கறையும் அறத்தையும் புகுத்தியவர் புரட்சித்தலைவர்.
    • புரட்சித்தலைவரின் நேர்மை, சமூக அக்கறை, கொடைத்தன்மை போன்ற நற்பண்புகளால் கவரப்பட்டே, என்னைப் போன்று லட்சோபலட்சம் பேர் அவர் பின்னே அணிவகுத்து நின்றார்கள்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்து 35 ஆண்டுகளுக்கு பிறகும், மங்காத புகழுடன் மக்கள் மனதில் வாழ்கிறார் என்றால், அதற்கு காரணம் அவரது மனிதநேயமுள்ள சமூக அக்கறை, கொடைத்தன்மை, அரசியலில் தூய்மை, நேர்மை போன்ற அவரது தனித்தன்மைகள்தான்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

    சினிமாவை பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமே நடிகர்கள் பார்த்த நேரத்தில், அதற்குள் சமூக அக்கறையும் அறத்தையும் புகுத்தியவர் புரட்சித்தலைவர். நடிகருக்காகவே கதை, பாடல், சினிமா தயாரிக்கப்பட்டது என்றால் அது, புரட்சித்தலைவருக்கு மட்டும்தான்.

    நீதி நூல்களிலும், வேதங்களிலும், இதிகாசங்களிலும் மற்றும் பகவத்கீதை, பைபிள், குர்ரான் போன்ற மத நூல்களிலும் உள்ள நல்ல கருத்துகளை எளிமையாக மாற்றி, சினிமா பாடல்கள் மூலம் படிக்காத பாமரர்களிடம் கொண்டுபோய் சேர்த்தவர் புரட்சித்தலைவர். படத்தின் கதை, திரைக்கதை, இசை, பாடல் வரிகள், வசனம், இயக்கம் போன்ற எல்லாவற்றிலும் தன்னுடைய எண்ணத்தை அழுத்தமாகப் பதிப்பதில் புரட்சித்தலைவர் உறுதியாக இருப்பார். அதனால் நிறைய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு, பின்னர் விலகியதாக புரட்சித்தலைவர் மீது விமர்சனம் எழுந்ததுண்டு.

    இதற்கு அவர் சொன்ன பதில்...

    தாய்க்குலத்தை மதிக்க வேண்டும்

    'காத்தவராயன்', 'லலிதாங்கி' ஆகிய இரு படங்களில் இருந்து விலகினேன். 'காத்தவராயன்' படத்தில் மாந்தரீக காட்சிகள் நிறைய இருந்தது. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என் மாமன் ஒருவர் மாந்தரீகனாக இருந்தார். எனவே எனக்கு நன்றாக தெரியும். மாந்தரீகம் ஒரு பித்தலாட்டம். மந்திரத்தில் மாங்காய் விழாது.

    நடிகன் என்ற முறையில் எனக்கு சமூகப்பொறுப்பு இருக்கிறது. மக்கள் என் படத்தில் நான் சொல்வதையும், செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும், பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன். அதனால் ஒப்பந்தம் போடும்போதே அதையெல்லாம் மாற்றினால்தான் நடிப்பேன் என்று சொன்னேன். ஒப்புக்கொண்டார்கள். பிறகு ஏற்க மறுத்தார்கள். நான் விலகாமல் என்ன செய்வது?

    அப்படித்தான் லலிதாங்கியும். அதில் கதாநாயகன் எல்லா பெண்களும் விபசாரிகள் என்கிறான். தாய்க்குலத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லிவரும் நான், எப்படி அதை உச்சரிக்க முடியும்? ஊதியம் வாங்கும் பணியாளன் என்றாலும், நடிகனுக்கும் சமூக கடமைகள் உண்டு. மூடத்தனமான காட்சிகளை அமைத்து மக்களை நம்ப வைப்பது தப்பில்லையா? அதற்கு நடிகன் உடந்தையாக இருக்க முடியுமா?.

    நேர்மை, சமூக அக்கறை, கொடைத்தன்மை

    லட்சக்கணக்கான இளைஞர்கள் என்னை தங்கள் 'ஹீரோ'வாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன், என்றார்.

    ஆம், தன்னை நம்பும் மக்களின் மனதில், பணத்துக்காக தவறான எண்ணங்களை விதைக்கக்கூடாது என்ற காரணத்தாலே, பல படங்களை நிராகரித்தார். மேலும், சினிமாவையும் அரசியல் வாழ்க்கையையும் புரட்சித்தலைவர் பிரித்துப் பார்த்ததே இல்லை. நிஜ வாழ்க்கையில் எப்படி இருந்தாரோ, அப்படியே சினிமாவில் நல்ல கதாபாத்திரமாக வாழ்ந்தார்.

    'நானே போடப்போறேன் சட்டம், பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்', என்று சினிமாவில் சொன்னவற்றை, அரசியலில் இறங்கி நிறைவேற்றிக் காட்டினார்.

    புரட்சித்தலைவரின் நேர்மை, சமூக அக்கறை, கொடைத்தன்மை போன்ற நற்பண்புகளால் கவரப்பட்டே, என்னைப் போன்று லட்சோபலட்சம் பேர் அவர் பின்னே அணிவகுத்து நின்றார்கள். இன்று வரை நிற்கிறார்கள். கால்சட்டை வயதிலேயே புரட்சித்தலைவருக்காக 'பேனா நண்பர்கள்' அமைப்பை நடத்தினேன். தாமரைப்பூ கொடியேற்றி புரட்சி செய்து, அ.தி.மு.க. எனும் இயக்கம் உருவாக காரணமாக இருந்தேன்.

    அம்மா உணவகங்கள்

    1974-ம் ஆண்டு ராமாபுரம் தோட்டத்தில் என்னை துணை ஆசிரியராக கொண்டு தொடங்கப்பட்ட 'அறிவுமணி' இதழை புரட்சித்தலைவர் வெளியிட்டபோது, ''சேவையை முன்னிறுத்திய பொது வாழ்க்கையை அமைத்துக்கொள். எம்.ஜி.ஆரின் தொண்டன் எப்படி இருக்க வேண்டும்? என்று கேட்டால், துரைசாமியை போல் இருக்க வேண்டும்'' என்றும், அரசியலில் என்னுடைய கடமை குறித்தும் 2 அறிவுரைகள் கூறினார்.

    புரட்சித்தலைவர் அன்று சொன்னவற்றை அரச கட்டளையாக ஏற்று, மக்கள் சேவையில் முதலில் பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச நோட்டு, புத்தகம், மற்றும் எனது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட தட்டச்சு, ஜெராக்ஸ் எந்திரங்களை வாங்கி, இலவசமாக பிரதிகள் எடுப்பதற்கு வசதி செய்து கொடுத்தேன்.

    ஏழை மாணவர்களுக்கு கல்விக்கட்டணம், இறந்தவர்களுக்கு குளிர்சாதன பெட்டி, இலவச திருமண மண்டபம் போன்ற பல உதவிகளையும் செய்து வருகிறேன்.

    2005-ம் ஆண்டில் மலிவு விலை உணவகம் தொடங்கினேன். இந்த உணவகம்தான், நான் சென்னைக்கு மேயராக பொறுப்பேற்றதும், அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் ஆணைப்படி, மாநகராட்சி சார்பில் மலிவு விலை உணவகமாக தொடங்கப்பட்டு, பிறகு 'அம்மா' உணவகமாக என்னால் பெயர் மாற்றப்பட்டது.

    சொந்த குடும்ப நிதியிலிருந்து...

    அறவழியில் மட்டுமே பொருளீட்டுவேன் என்று மதுக்கடைகளையும், தனியார் என்ஜினீயரிங் கல்லூரியையும் நடத்துவதற்கு கிடைத்த வாய்ப்பை, நான் நிராகரித்ததை புரட்சித்தலைவர் வெகுவாக பாராட்டினார். புரட்சித்தலைவரின் மனிதநேயத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்காகவே, எனது சொந்த குடும்ப நிதியில் இருந்து மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். கல்வியகத்தை நடத்தி, லட்சக்கணக்கான மாணவர்களின் அரசு வேலைக்கான கனவை இன்று வரை நனவாக்கி வருகிறேன்.

    என்னைப் போலவே எம்.ஜி.ஆர். பக்தர்கள், அவரவர் சக்திக்கேற்ப மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள். இந்த சேவைகளின் மூலம், மனிதநேயத்தின் உருவமாக தொண்டர்கள் மனதில் என்றென்றும் வாழ்ந்துகொண்டும், வழிகாட்டிக்கொண்டும் இருக்கிறார் புரட்சித்தலைவர்.

    - சைதை துரைசாமி, பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர்

    Next Story
    ×