search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆன்மிக அமுதம்- சொல்லின் செல்வன்!
    X

    ஆன்மிக அமுதம்- சொல்லின் செல்வன்!

    • நம் கடவுளரில் சொல்லாற்றலுக்காகப் புகழப்படும் கடவுள் என்றால் அது அனுமன்தான்.
    • சீதை அனுமன் சிரசில் வெற்றிலைய தூவியதன் அடையாளமாகத் தான் ஆலயங்களில் அனுமனுக்கு வெற்றிலை மாலை சார்த்தப்படுகிறது.

    பாரத தேசமெங்கும் தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் உள்ள அனுமனுக்கான ஆலயங்கள் எண்ணில் அடங்காதவை. தொண்டனாக இருந்து தெய்வ நிலைக்கு உயர்ந்த அனுமனை மக்கள் கோயில் கட்டிக் கொண்டாடுகிறார்கள்.

    கேரளத்தில் மட்டும் நாலம்பலம் என ராம லட்சுமண பரத சத்துருக்கனர்களுக்குத் தனித்தனிக் கோயில்கள் உண்டு. மற்றபடி லட்சுமண பரத சத்துருக்கனர்களுக்கு வேறெங்கும் தனி ஆலயம் இருப்பதாகத் தெரியவில்லை.

    ராமன் கோயில்களில் அனுமனுக்கு சன்னிதி உண்டு. அனுமனுக்குத் தனியாகவும் கோயில்கள் உண்டு.

    ஒருவகையில் அனுமன் கண்ணனுக்கும் திருமாலுக்கும் இணையானவன் என்று சொல்லலாம்.

    கண்ணன் அர்ச்சுனனுக்கு கீதை சொல்லும்போது தன் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டினான்.

    வாமனாவதாரம் எடுத்த திருமால் மகாபலி முன் மூன்றடி மண் வேண்டி உலகளந்த பெருமாளாய் விஸ்வரூபம் கொண்டு நின்றான்.

    அனுமனும் சுந்தரகாண்டத்தில் அசோக மரத்தடியில் சோகத்தோடு வீற்றிருந்த சீதாப்பிராட்டி முன் தன் விஸ்வரூபத்தைக் காட்டினான் என ராமாயணம் சொல்கிறது.

    அப்போது சூரியனும் சந்திரனும் அனுமனின் செவிகளில் இரு குண்டலங்கள் போல் தென்பட்டன என எழுதுகிறார் கம்பர். அனுமனின் தலைமுடியில் சிக்கிய நட்சத்திரக் கூட்டங்கள் கானக மரங்களில் உலவும் மின்மினிப் பூச்சிகளைப் போல் காணப்பட்டன என்கிறார். பிறகு சீதை கேட்டுக்கொண்டதன் பேரில் மறுபடி தன் உருவத்தைச் சுருக்கிக் கொண்டான் அனுமன்.

    அனுமன் மிகச் சிறிய வடிவமோ மிகப் பெரிய வடிவமோ எந்த வடிவமும் எடுக்கும் ஆற்றல் பெற்றவன். இலங்கை மாநகரில் முதன்முதலில் ரகசியமாக நுழைந்தபோது அவன் யாரும் அறியாத வண்ணம் மிகச் சிறிய வடிவம் எடுத்ததாக ராமாயணம் சொல்கிறது. அனுமனது பெருமைகள் சொல்லில் அடங்காதவை.

    நம் கடவுளரில் சொல்லாற்றலுக்காகப் புகழப்படும் கடவுள் என்றால் அது அனுமன்தான். ராமபிரானே முதன்முதலில் கிஷ்கிந்தா காண்டத்தில் அனுமனைச் சந்தித்து அவன் பேச்சைக்கேட்டதும் தன் தம்பி லட்சுமணனிடம் `யார்கொலாம் இச்சொல்லின் செல்வன்?` என வினவுகிறான்.

    ஆக அனுமனுக்குச் சொல்லின் செல்வன் எனப் பட்டம் கொடுத்து கெளரவித்தவன் ராமபிரான் தான். ஒரு பட்டம் அல்லது விருது அதைப் பெறுபவர் மூலம் மட்டுமல்லாமல் அதைக் கொடுப்பவர் மூலமும் பெருமை அடைகிறது அல்லவா? அனுமனின் சொல்லாற்றலை ராமபிரானே அங்கீகரித்து மெச்சிய பின் இனி யார் மெச்ச வேண்டும்?

    இலங்கையில் சீதையைக் கண்டு திரும்பிய பிறகு, ராமனைச் சந்திக்கும் அனுமன் மனம் உணர்ச்சியில் ததும்புகிறது. ராமனோ சீதையை அனுமன் கண்டானா இல்லையா என்றறியப் பேராவல் கொண்டு உணர்ச்சி மயமாக வீற்றிருக்கிறான்.

    உடனடியாக அனுமன் சீதையைக் கண்ட செய்தியை ராமபிரானிடம் தெரிவிக்க வேண்டும். ஒருசிறிதும் வார்த்தையை விரயம் செய்யக் கூடாது. ராமனது எதிர்பார்ப்பில் ஒரு சிறு கால தாமதமும் நேர்ந்துவிடக் கூடாது. எனவே `கண்டேன் சீதையை!` என அனுமன் சொன்னதாக ராமாயணம் சொல்கிறது.

    சீதையைக் கண்டேன் எனவும் சொல்லியிருக்கலாம். ஆனால் அந்த முதல் வார்த்தை செய்தியை ராமன் அறிவதில் ஒருசிறிது தாமதத்தை ஏற்படுத்தக் கூடும். அதைக் கூடத் தவிர்க்க விரும்பினான் அனுமன். எனவே `கண்டேன்` என்ற சொல்லை முதலில் சொல்லி அதன் பின்னர் `சீதையை` என அனுமன் சொன்னான் என்று இதற்கு விளக்கம் தரப்படுகிறது.

    எதையும் சுருக்கமாகச் சொல்லும் சொற்சிக்கனம், எதை முதலில் சொல்ல வேண்டும் எதைப் பின்னர் சொல்ல வேண்டும் என்பதில் மிகச் சரியான தேர்வு இவை அனுமனைச் சொல்லின் செல்வனாக்குகின்றன.

    அனுமன் எதிரிகளை வென்று மாபெரும் வெற்றி அடைந்ததற்கு என்ன காரணம் என்பதை ஒரு திருக்குறள் மூலம் நாம் அறிய முடிகிறது.

    `சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

    இகல்வெல்லல் யார்க்கும் அரிது!`

    என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

    சொல்லாற்றலில் வல்லவனாகவும் சோர்வே இல்லாதவனாகவும் அச்சமற்றவனாகவும் யார் இருக்கிறாரோ அவரை இந்த உலகில் யாராலும் வெல்ல முடியாது என அறிவிக்கிறது திருக்குறள்.

    இந்த மூன்று பண்புகளுமே அனுமனிடம் இருந்தன. அவன் ராமனே மெச்சும் வகையில் சொல்லின் செல்வனாக இருந்தான். சோர்வு என்பது அவனிடம் அறவே கிடையாது. ஒரு கடலைக் கூடத் தாண்டும் சோர்வில்லாத முயற்சி அவனிடம் இருந்தது.

    அச்சம் என்பது அனுமனின் அகராதியிலேயே இல்லை. தேவர்கள் அனைவரையும் நடுநடுங்க வைத்த ராவணனையே நேரில் கண்டு பேசி அவன் மனத்தில் அச்சத்தை விதைத்தவன் அனுமன்.

    ஆக வள்ளுவரின் குறளுக்கு வடிவம் கொடுத்தால் அது அனுமனாக அமைவதைக் காண முடியும்.

    அனுமன் அசாத்தியமான உடல் வலிமை பெற்றவன். சஞ்சீவி மலையையே தூக்கி வந்தவன் அனுமன் என்றால் அவன் உடல் வலிமை எத்தகையது என்பதை நாம் ஊகித்துக் கொள்ளலாம்.

    ராம ராவண யுத்தத்தின்போது ராவணன் எய்த ஓர் அஸ்திரத்தால் லட்சுமணன் யுத்த களத்திலேயே மயங்கிக் கிடக்கிறான். மயங்கிய லட்சுமணனை இலங்கைக்குத் தூக்கிச் செல்ல முயல்கிறான் ராவணன்.

    இமய மலையையே தூக்கியவன் அல்லவா ராவணன்? ஆனால் அவனால் லட்சுமணனை ஒருசிறிதும் நகர்த்தக் கூட இயலவில்லை.

    இமய மலை பூமியின் ஒரு பகுதி. ஆனால் லட்சுமணன் ஆதிசேஷனாக இந்த பூமி முழுவதையுமே தாங்குபவன் அல்லவா? எனவே ஆதிசேஷன் அவதாரமான லட்சுமணன் இந்த பூமியை விடவும் வலிமை பெற்றவனாகத் தானே இருக்க முடியும்?

    ராவணன் லட்சுமணனைத் தூக்க முடியாமல் சோர்வோடு இலங்கைக்குச் செல்லும்போது திரும்பி யுத்த களத்தை ஒரு பார்வை பார்க்கிறான். அங்கே ஒரு விந்தையான காட்சியை அவன் காண நேர்கிறது.

    எந்த லட்சுமணனை ஒருசிறிதும் அசைக்க முடியாமல் ராவணன் தவித்தானோ அந்த லட்சுமணனை அநாயாசமாகத் தன் தோளில் தூக்கிக் கொண்டு அனுமன் நடந்து செல்வதைப் பார்த்து ராவணன் ஆச்சரியத்தில் ஆழ்கிறான்.

    அனுமனின் அபாரமான உடல் வலிமையைக் கண்டு ராவணன் மனம் அச்சத்தில் துணுக்குறுகிறது.

    தலைவனுக்கு இல்லாத பெருமை தலைவன்மேல் பக்தி கொண்ட தொண்டனுக்கு இருந்ததையும் ராமாயணம் காட்டுகிறது. தலைவனான ராமனுக்கு கடலைக் கடக்க பாலம் தேவைப்பட்டது.

    ஆனால் தொண்டனான அனுமன், ராம நாமத்தை உச்சரித்தவாறே எந்தப் பாலத்தின் உதவியும் தேவைப்படாமல் தாவியே கடலைக் கடந்துவிட்டான். ராம நாமத்தின் வலிமை, அந்த நாமத்திற்கு உரிய ராமனை விடவும் கூடுதலானது என்பது இதனால் பெறப்படுகின்றது.

    ராமபிரான் ராவண வதம் செய்து போரில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியான செய்தியை முதன் முதலில் சீதையிடம் தெரிவிக்கச் செல்கிறான் அனுமன். அசோக மரத்தடியில் அமர்ந்திருக்கும் சீதை முன் நிற்கிறான். உணர்ச்சி வசப்பட்டதால் அனுமன் குரல் தழுதழுக்கிறது. சொல்லின் செல்வனான அவனுக்கு அன்று ஆனந்தம் நெஞ்சை அடைப்பதால் பேச்சே வரவில்லை.

    எனவே தரையில் அமர்ந்து, மணலில் தன் விரலால், ராமபிரான் வெற்றிபெற்று விட்டான் என்பதை உணர்த்தும் விதமாக ஸ்ரீராமஜயம் என எழுதிக் காண்பிக்கிறான் ஆஞ்சநேயன். சீதை ராமபிரான் ராவணனை வதம் செய்துவிட்டதைப் புரிந்துகொள்கிறாள்.

    அவ்விதம் ஸ்ரீராமஜயம் என்ற மந்திரம் அனுமனால் முதன்முதலில் எழுதப்பட்டதால் அதை லிகித மந்திரமாகவும் கருதுகிறார்கள். ஸ்ரீராமஜயம் என்ற மந்திரத்தை ஜபிப்பதோடு எழுதுவதன் மூலமாகவும் அதிகப் பயனை அடைய முடியும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. இன்றும் நாள்தோறும் ஸ்ரீராமஜயம் என்ற மந்திரத்தை எழுதி ஆன்மிகப் பயன் அடையும் அன்பர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

    ராவண வதம் பற்றித் தனக்கு அனுமன் எழுதிச் செய்தி தெரிவித்த அந்த சந்தர்ப்பத்தில் அனுமனை வாழ்த்தி ஆசீர்வதிக்க விரும்புகிறாள் சீதாதேவி. அங்கே அனுமன் தலையில் இட்டு ஆசீர்வதிக்க அட்சதையா உண்டு?

    சுற்றுமுற்றும் பார்க்கிறாள். அருகே பச்சைப் பசேல் என்ற வெற்றிலைக் கொடிகள் தென்படுகின்றன. சில வெற்றிலைகளைப் பறித்து அனுமன் சிரசில் இட்டு `நீ சிரஞ்சீவியாக இந்த மண்ணுலகில் இருந்து மக்களைக் காத்து வருவாயாக!` என ஆசீர்வதிக்கிறாள்.

    அப்படி சீதை அனுமன் சிரசில் வெற்றிலையத் தூவியதன் அடையாளமாகத் தான் ஆலயங்களில் அனுமனுக்கு வெற்றிலை மாலை சார்த்தப்படுகிறது.

    ராமனையும் சீதாதேவியையும் இணைத்து வைத்தவன் அவன்தான். ஆகையால் பிரிந்திருக்கும் தம்பதியர் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டுமானால் அனுமனை வழிபட்டுப் பலனடையலாம்.

    பணிநிமித்தம் கணவனும் மனைவியும் வெவ்வேறு இடங்களில் பிரிந்து வாழ நேரும் சூழல் இன்று பல இடங்களில் நிலவுவதைப் பார்க்கிறோம். குழந்தைகள் தாய் தந்தை இருவர் பாசத்தையும் அனுபவிக்க முடியாமல் யாரோ ஒருவருடன் மட்டும் வாழநேரும் சங்கடங்களையும் பார்க்கிறோம்.

    இந்த நிலைமைகள் மாறவும் கணவனும் மனைவியும் ஒரே இடத்தில் சேர்ந்து வாழும் நிலைமை தோன்றவும் அருளக் கூடிய கடவுள் அனுமன்.

    ராமனையும் சீதையையும் அனுமன் சேர்த்து வைத்தது குறித்து தத்துவார்த்தமாகவும் பொருள் உண்டு. ராமன் பரமாத்மாவின் வடிவம். சீதை ஜீவாத்மாவின் வடிவம். அனுமன் ஆசார்யன் என்ற நிலையில் செயல்படுகிறான்.

    ஆசார்யனான அனுமன் ஜீவாத்மாவான சீதையிடம் பரமாத்மாவின் பெருமைகளை எடுத்துச் சொல்லி, பரமாத்மாவை விட்டுப் பிரிந்திருக்கும் ஜீவாத்மாவை அதனுடன் சேர்த்து வைப்பதே ராமாயணம் என்றும் ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது.

    தொண்டின் இலக்கணமாகத் திகழும் அனுமனை வழிபட்டு, என்றும் வற்றாத உற்சாகத்தை அடைந்து எல்லாச் செயல்களிலும் வெற்றி பெறுவோம்.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×