என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தாமரை பறிக்க சென்று குளத்தில் மூழ்கிய அக்கா, தங்கை.. தேரோட்டத்திற்காக உடல் அடக்கத்தை தள்ளி வைத்த பெற்றோர்
    X

    தாமரை பறிக்க சென்று குளத்தில் மூழ்கிய அக்கா, தங்கை.. தேரோட்டத்திற்காக உடல் அடக்கத்தை தள்ளி வைத்த பெற்றோர்

    • குளம் ஆழமான பகுதி என்பதால் 2 குழந்தைகளும் ஒன்றன் பின் ஒன்றாக மூழ்கி இறந்து போனார்கள்.
    • கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த கீழ் புத்துப்பட்டு சாவடி பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். டிரைவர். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஹர்ஷினி (வயது 11) கயல் (8) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர். காலாப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஹர்ஷினி 6-ம் வகுப்பும், கயல் 3-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    கீழ்புத்துப்பட்டு சாவடி பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் திருவிழா கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று ஜெயந்தி தனது 2 மகள்களையும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வரும்படியும், சாமிக்கு பூஜை செய்ய கூடையில் பூ வைத்து அனுப்பி உள்ளார்.

    தாய் கொடுத்து அனுப்பிய பூவுடன் சேர்த்து தாமரைப்பூவையும் சாமிக்கு கொண்டு செல்வதற்கு ஹர்ஷினி மற்றும் கயல் இருவரும் அதே பகுதியில் உள்ள கங்கை அம்மன் கோவில் குளத்தில் தாமரை பூ பறிக்க சென்றுள்ளனர்.

    அந்தக்குளம் ஆழமான பகுதி என்பதால் 2 குழந்தைகளும் ஒன்றன் பின் ஒன்றாக மூழ்கி இறந்து போனார்கள்.

    பின்னர் குழந்தைகள் 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளம் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    சாமிக்கு பூப்பறிக்கச் சென்ற அக்காள்-தங்கை இருவரும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த ஊர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசுவநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் ஹர்ஷினி மற்றும் கயல் ஆகியோரின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட இருந்த நிலையில் இன்று அங்காளம்மன் கோவில் தேரோட்டம் இருப்பதால் மகள்களின் உடல்களை நாளை (திங்கட்கிழமை) பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.

    ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அங்காளம்மன் கோவில் திருவிழா தேரோட்டம் நடைபெற தங்களின் குழந்தைகள் உடல்களை நாளை அடக்கம் செய்ய பெற்றோர் முடிவு செய்தது சோகத்திலும் கிராம மக்களை வியக்க வைத்தது.

    Next Story
    ×