என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரி அதிகாரிகளுக்கு லேப்-டாப், ஐபோன், ஐபேட் வாங்க அரசு அனுமதி
- விலை அதிகபட்சம் ரூ.1.20 லட்சம் கொண்டதாக இருக்க வேண்டும்.
- தொகை கட்டண ரசீது சமர்பித்தவுடன் திருப்பி அளிக்கப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் இ கவர்னன்ஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டும் முழுமையாக அமலாகவில்லை.
இதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி அரசு தலைமை செயலாளர் சரத் சவுக்கான் அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை திறம்பட நிர்வகிக்கவும், கோப்புகளுக்கு விரைவாக அனுமதி வழங்க உயர் செயல்திறன் கொண்ட சாதனங்கள் வைத்திருப்பது அவசியம். இந்த சாதனங்களை வாங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. தகுதி வாய்ந்த நிர்வாக அதிகாரியின் அனுமதி பெற்று அரசு அதிகாரிகள் தங்கள் விருப்பப்படி டெஸ்க்டாப், லேப்-டாப், ஐபோன், ஐபேட், ஸ்மார்ட்போன் வாங்கி கொள்ளலாம்.
இவற்றின் விலை அதிகபட்சம் ரூ.1.20 லட்சம் கொண்டதாக இருக்க வேண்டும். அதிகாரிகளே சாதனங்களை வாங்க வேண்டும். இதற்கான தொகை கட்டண ரசீது சமர்பித்தவுடன் திருப்பி அளிக்கப்படும். சாதனம் வாங்கிய முதல் 4 ஆண்டு அரசு சாதனமாக இருக்கும். அதில் உள்ள தகவல்கள் அதிகாரியின் முழு பொறுப்பாகும். சைபர் கிரைம் வழிகாட்டுதல்களை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






