என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு - ஆண்டுக்கு ரூ.6 கோடி கூடுதல் செலவு
- 6-வது ஊதியக் குழு சம்பளத்தை பெறும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.
- அகவிலைப்படி 01.07.2025 முதல் 252 சதவீதத்தில் இருந்து 257 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் 01.07.2016-ம் ஆண்டு 7-வது ஊதிய குழு பரிந்துரை அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் சில அரசு ஊழியர்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரை சம்பளம் வேண்டாம் என்று கூறி 6-வது ஊதியக் குழுவின் சம்பளத்தை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக தன்னாட்சி, கூட்டுறவு நிறுவனங்களில் 6-வது ஊதிய குழு சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் அதிக அளவில் உள்ளனர்.
இந்நிலையில் இவர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி நிதித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நிதித்துறை சார்பு செயலர் சிவக்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அண்மையில் மத்திய நிதி அமைச்சகம், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு தன்னாட்சி நிறுனங்களில் 6-வது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் பெற்று வரும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.
அதனடிப்படையில், புதுச்சேரியில் அரசு கூட்டுறவு நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் 6-வது ஊதியக் குழு சம்பளத்தை பெறும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.
இந்த அகவிலைப்படி 01.07.2025 முதல் 252 சதவீதத்தில் இருந்து 257 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
இந்த 5 சதவீத அகவிலைப்படி உயர்வு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கும் பொருந்தும். இந்த அகவிலைப்படி உயர்வினால், அரசுக்கு ஆண்டிற்கு ரூ.6 கோடி கூடுதல் செலவாகும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






