search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் 14 ஆண்டுகள் வீட்டு சிறையில் வைக்கப்பட்ட பெண் மீட்பு
    X

    ஆந்திராவில் 14 ஆண்டுகள் வீட்டு சிறையில் வைக்கப்பட்ட பெண் மீட்பு

    • சாய் சுப்ரியாவின் பெற்றோர் மகளை பார்ப்பதற்காக வந்தனர். ஆனால் மது பாபு மகளை சந்திக்க விடாமல் திருப்பி அனுப்பினார்.
    • போலீஸ் சூப்பிரண்டு தீபிகா பட்டீலிடம் சாய் சுப்ரியா பெற்றோர் புகார் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயநகரம், ஒகடோ பகுதியை சேர்ந்தவர் மது பாபு. இவர் வக்கீலாக வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் புட்டபர்த்தி சத்திய சாயி மாவட்டம் ஜனார்த்தன், ஹேமலதா தம்பதியின் மகள் சாய் சுப்ரியா என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2009-ம் ஆண்டு சாய் சுப்ரியாவுக்கு மகள் பிறந்தார்.

    சாய் சுப்ரியாவின் பெற்றோர் மகளை பார்ப்பதற்காக வந்தனர். ஆனால் மது பாபு மகளை சந்திக்க விடாமல் திருப்பி அனுப்பினார்.

    சாய் சுப்ரியாவுக்கு மகள் பிறந்த பிறகு அவரது பெற்றோர் வீட்டில் பழகவும் பேசவும் கூடாது என அவரது மாமியார், கணவர் ஆகியோர் தடை விதித்தனர். மேலும் வீட்டுக்குள்ளேயே சிறை வைத்தனர்.

    மேலும் சாய் சுப்ரியாவுக்கு 2 குழந்தைகள் பிறந்தன. கடந்த 14 ஆண்டுகளாக சாய் சுப்ரியா தனது பெற்றோரை பார்க்காமலும் பேசாமலும் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    இதனால் அவரது பெற்றோர் தனது மகளை பார்க்க முடியாமல் தவித்து வந்த நிலையில் கடந்த மாதம் மகளை பார்ப்பதற்காக மீண்டும் அவரது வீட்டிற்கு வந்தனர். ஆனால் அவர்களை வீட்டில் சேர்க்காமல் துரத்தி அடித்தனர்.

    இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு தீபிகா பட்டீலிடம் அவரது பெற்றோர் புகார் செய்தனர். அவரது உத்தரவின் பேரில் போலீசார் மது பாபு வீட்டிற்கு சென்று சாய் சுப்ரியாவை அவரது பெற்றோர் பார்க்க வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்காமல் சர்ச் வாரண்ட் உள்ளதா எனக்கேட்டு திருப்பி அனுப்பினர்.

    இதையடுத்து சாய் சுப்ரியாவை மீட்பதற்காக போலீசார் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். நீதிபதி ரம்யா சாய் சுப்ரியாவை மீட்க உத்தரவு பிறப்பித்தார்.

    கோர்ட்டு உத்தரவின் பேரில் மகளிர் போலீசார் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் மது பாபு வீட்டிற்கு சென்று பலமுறை கதவை தட்டினர்.

    திறக்காததால் கதவை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்று சாய் சுப்ரியாவை மீட்டனர். பின்னர் சாய் சுப்ரியாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவருடைய பெற்றோருடன் செல்ல நீதிபதி ரம்யா உத்தரவு பிறப்பித்தார்.

    Next Story
    ×