என் மலர்
இந்தியா

போட்டோவை மார்பிங் செய்து அசிங்கப்படுத்தி விடுவதாக மிரட்டல்- பெண் என்ஜினீயர் தற்கொலை
- நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மேலும் பணத்தை கட்ட வேண்டும் என பிரதிக்ஷாவை மிரட்டினர்.
- பிரதிக்ஷாவை செல்போனில் மிரட்டியவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், மசூலிப்பட்டினம், சாரதா நகரை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் ஆந்திர மாநில இண்டஸ்ட்ரியல் ப்ராஜெக்ட் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் பிரதிக்ஷா (வயது 24). சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். தற்போது இவர்கள் குண்டூர் அடுத்த சின்ன காக்காணி பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதிக்ஷா தனியார் நிதி நிறுவன ஆப் மூலம் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கினார். வாங்கிய கடனை திருப்பி செலுத்தி உள்ளார். ஆனால் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மேலும் பணத்தை கட்ட வேண்டும் என பிரதிக்ஷாவை மிரட்டினர். ஆனால் பிரதிக்ஷா வாங்கிய கடனை திருப்பி செலுத்தி விட்டதாக கூறினார். அவர் கூறியதை ஏற்றுக்கொள்ளாத நிதி நிறுவனத்தினர் நேற்று இரவு 7 மணி வரை பணத்தை செலுத்த அவகாசம் அளித்தனர்.
மேலும் பணத்தை செலுத்தவில்லை என்றால் உன்னுடைய போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி அசிங்கப்படுத்தி விடுவதாக மிரட்டினர்.
இதனால் வேதனை அடைந்த பிரதிக்ஷா நேற்று மாலை வீட்டின் மாடிக்கு சென்றார். அப்போது செல்பி வீடியோ எடுத்து தன்னை தனியார் நிறுவனத்தினர் மிரட்டுவதால் தற்கொலை செய்வதாக தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பினார்.
இதனை கண்ட அவர்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டின் மாடிக்கு வந்தனர். அப்போது பிரதிக்ஷா மாடியில் உள்ள விளம்பர பலகையில் தூக்கில் தூங்கினார்.
பிரதிக்ஷாவை மீட்ட அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதிக்ஷாவை செல்போனில் மிரட்டியவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.






