என் மலர்
இந்தியா

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் புதிதாக நியமிக்கப்படுகிறார்- அதிகாரிகள் ஆலோசனை
- சுப்பா ரெட்டி கடந்த 4 ஆண்டுகளாக அறங்காவலர் குழு தலைவராக இருந்து வருகிறார்.
- அறங்காவலர் குழு தலைவராக ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர்கள் பதவி வகித்து வருவதால் இந்த முறை யாதவ சமுதாயத்தை சேர்ந்தவருக்கு இந்த பதிவு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகத்தை நிர்வகிக்க தேவஸ்தான அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான அறங்காவலர் தலைவராக ஆளும் கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தேர்ந்தெடுக்கபடுவது வழக்கம்.
அறங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுப்பவர்கள் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள். அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பிடித்து ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைத்தார்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்த பிறகு தெலுங்கு தேசம் கட்சியில் நியமிக்கப்பட்டிருந்த அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினரான சுப்பா ரெட்டி அறங்காவலர் குழு தலைவராக பதவி ஏற்றார்.
அவரது பதவி காலம் கடந்த 2021-ம் ஆண்டு நிறைவடைந்தது. இதையடுத்து மீண்டும் சுப்பாரெட்டி அறங்காவலர் குழு தலைவராக பதவி ஏற்றார். சுப்பா ரெட்டி கடந்த 4 ஆண்டுகளாக அறங்காவலர் குழு தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அறங்காவலர் குழு தலைவரை மாற்ற ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்தார். அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கு திருப்பதி எம்.எல்.ஏ கருணாகரரெட்டி அல்லது கங்கா கிருஷ்ணமூர்த்தி யாதவ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஏற்கனவே அறங்காவலர் குழு தலைவராக ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர்கள் பதவி வகித்து வருவதால் இந்த முறை யாதவ சமுதாயத்தை சேர்ந்தவருக்கு இந்த பதிவு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
அறங்காவலர் குழு தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து திருமலையில் உள்ள அன்னமைய்ய பவனில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.






