என் மலர்
இந்தியா

போர் இன்னும் அதிக வீரியத்துடன் தொடர்கிறது - துணை ஜனாதிபதி தேர்தல் தோல்வி பற்றி சுதர்சன் ரெட்டி
- சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
- இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.
துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நேற்று நடைபெற்று, உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.
இதன்மூலம் 15ஆவது துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்க உள்ளார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுதர்சன் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் எம்.பி.க்கள் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர். நமது மாபெரும் குடியரசின் ஜனநாயக செயல்முறைகளில் நிலையான நம்பிக்கையுடன் இந்த முடிவை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
முடிவு எனக்கு சாதகமாக இல்லாவிட்டாலும், நாம் கூட்டாக முன்னேறும் பெரிய நோக்கம் இன்னும் குறையாமல் உள்ளது. சித்தாந்தப் போர் இன்னும் அதிக வீரியத்துடன் தொடர்கிறது.
என்னை வேட்பாளராக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது ஜனநாயகம் வெற்றியால் மட்டுமல்ல, உரையாடல், கருத்து வேறுபாடு மற்றும் பங்கேற்பு உள்ளிட்டவற்றாலும் பலப்படுத்தப்படுகிறது.
ஒரு குடிமகனாக, நம்மை ஒன்றிணைக்கும் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் இலட்சியங்களை நிலைநிறுத்துவதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
நமது அரசியலமைப்பு நமது தேசிய வாழ்க்கையின் வழிகாட்டும் ஒளியாக தொடர்ந்து இருக்கட்டும்.
துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணன் தனது பதவிக்காலத்தில் சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.






