என் மலர்
இந்தியா

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வந்த முதலாவது கச்சா எண்ணெய் கப்பல்: தடைகளை கடந்து வந்தது எப்படி?
- போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழி பாதையை ஈரான் மூடியது.
- இந்த வழியாகத்தான் உலக நாடுகளுக்கு 20 சதவீதம் கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறுகிறது.
மும்பை:
ஈரான் போர் பதற்றத்துக்கு பிறகு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவுக்கு முதலாவது கச்சா எண்ணெய் கப்பல் பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளது. தடைகளை கடந்து வந்தது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் போர் தீவிரம் அடைந்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழி பாதையை ஈரான் மூடியது. இந்த வழியாகத்தான் உலக நாடுகளுக்கு 20 சதவீதம் கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறுகிறது. இந்தியாவுக்கு பெருமளவு இந்தப்பாதை வழியாகத்தான் கச்சா எண்ணெய் கொண்டு வரப்படுகிறது.
இதனால் எரிபொருள் தட்டுப்பாடு இந்தியாவில் எதிரொலித்தது. தற்போது நாட்டின் முக்கிய பிரச்சினையாக எரிபொருள் தட்டுப்பாடு மாறி உள்ளது. இது மக்கள் மத்தியில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் போர் எப்போது ஓயும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஓங்கி உள்ளது.
ஆனால் போர் ஓயாமல் நீடிக்கும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெயை கூட கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று ஈரான் எச்சரித்தது.
இருப்பினும் அந்த ஜலசந்தி வழியாக 1 லட்சத்து 35 ஆயிரத்து 335 டன் (சுமார் 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெயுடன் கப்பல் ஒன்று தடைகளை கடந்து இந்தியா வந்துள்ளது. அதாவது போர் பதற்றத்துக்கு பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் கப்பல் வந்து சேர்ந்து இருக்கிறது.
லைபீரியா நாட்டு கொடியுடன் 'ஷென்லாங் சூயல்மாக்ஸ்' என்ற பிரமாண்ட கப்பல், சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான ராஸ் தனுராவிலிருந்து கடந்த 1-ந்தேதி தனது பயணத்தை தொடங்கியது. அனைத்து தடைகளையும் கடந்து நேற்று முன்தினம் இரவு மும்பை துறைமுகத்திற்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தது.
இந்த கப்பல் பயணத்தை ஒரு இந்தியரான கேப்டன் சுக்ஷாந்த் சிங் சந்து தலைமையில் 29 பேர் கொண்ட சர்வதேச குழுவினர் மேற்கொண்டனர்.
ஈரான் படைகளின் தாக்குதல் அல்லது கண்காணிப்பில் இருந்து தப்பிக்க. கடந்த 8-ந்தேதி ஜலசந்தியை கடக்கும்போது கப்பலின் தானியங்கி அடையாள அமைப்பு (ஏ.ஐ.எஸ்.) தற்காலிகமாக அணைக்கப்பட்டது. கப்பல் எங்கே இருக்கிறது என்பதை காட்டும் சிக்னல்களை நிறுத்திவிட்டு, 'டார்க் மோட்' முறையில் மிகவும் ரகசியமாக இப்பகுதியை கடந்து, 9-ந்தேதி மீண்டும் சிக்னல்களை இயக்கியது தெரியவந்தது.
இதற்கிடையே மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஈரான் நாட்டு மந்திரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஹார்முஸ் ஜலசந்தியை இந்தியாவுக்காக திறக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது. கப்பல் பாதுகாப்பாக ஜலசந்தியை கடக்க இதுவும் காரணமாக கருதப்படுகிறது.
தற்போது மும்பை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள இக்கப்பலில் உள்ள கச்சா எண்ணெய், குழாய்கள் மூலம் செம்பூரில் உள்ள மேகுல் பகுதிக்கு மாற்றப்பட உள்ளது. அங்குள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் இந்த எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு விரைவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவாக பிரிக்கப்படும்.
தற்போது நிலவி வரும் எரிபொருள் தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, இந்த எரிபொருட்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு உடனடியாக வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெருக்கடியான சூழ்நிலையில் ஆபத்பாந்தவனாக வந்து சேர்ந்த இந்த கச்சா எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையே ஈராக்கில் இருந்து சுமார் 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெயுடன் புறப்பட்ட இந்திய கொடி ஏந்திய மற்றொரு பிரமாண்ட கப்பல் பாதுகாப்பாக இந்திய கடல் பகுதியை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் தற்போது ஒடிசாவில் உள்ள பாரதீப் துறைமுகத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது.






