என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறுத்தையுடன் சண்டைபோட்டு 10 வயது மகனை காப்பாற்றிய இளம்பெண்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சிறுத்தையுடன் சண்டைபோட்டு 10 வயது மகனை காப்பாற்றிய இளம்பெண்

    • பயப்படாமல் சாந்தரேஷ்தேவி அரிவாளால் தாக்கியதால் சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு தப்பி ஓடியது.
    • இருப்பினும் சிறுத்தை தாக்கியதில் திகேந்திரசைனிக்கு தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.

    பிஜ்னூர்:

    உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தில் உள்ள ஜீத்பூர் கிராமத்தை சேர்ந்த சாந்தரேஷ்தேவி (வயது 34). இவரது மகன் திகேந்திரசைனி (10).

    நேற்று முன்தினம் காலை சாந்தரேஷ்தேவி அப்பகுதியில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். தோட்டத்தில் இருந்து சிறிது தூரத்தில் அவரது மகன் திகேந்திரசைனி விளையாடிக் கொண்டிருந்தான்.

    அப்போது திடீரென தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று சிறுவன் திகேந்திரசைனியை தாக்கியது. இதனால் சிறுவன் கதறி அழுதான். மகனின் கதறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிச்சென்றார் சாந்தரேஷ்தேவி. அப்போது சிறுத்தை திகேந்திரசைனியை தாக்கிய வண்ணம் இருந்தது. உடனே சாந்தரேஷ்தேவி கையில் இருந்த அரிவாளால் சிறுத்தையின் தாடையில் தாக்கினார்.

    தொடர்ந்து பயப்படாமல் சாந்தரேஷ்தேவி அரிவாளால் தாக்கியதால் சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு தப்பி ஓடியது. இருப்பினும் சிறுத்தை தாக்கியதில் திகேந்திரசைனிக்கு தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.

    இதில் சிறுவன் மயங்கி விழுந்தான். உடனே அவனை மீட்டு அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பிஜ்னூரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சிறுத்தையிடம் சண்டை போட்டதில் சாந்தரேஷ்தேவிக்கும் காயங்கள் ஏற்பட்டது. அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×