search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விக்ரம் சாராபாயின் கனவு நனவாகிறது
    X

    விக்ரம் சாராபாயின் கனவு நனவாகிறது

    • 1969-ல் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பாக (இஸ்ரோ) மாற்றம் பெற்றது.
    • உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளை விண்ணில் ஏவ வேண்டும் என்பது விக்ரமின் பெருங்கனவு.

    "சந்திர மண்டலத்தினை கண்டு தெளிவோம்'' என்றார் மகாகவி பாரதி. அவரது கனவை நனவாக்கியவர் நம் நாட்டின் விஞ்ஞானி விக்ரம் சாராபாய். அவரது பெயர்தான் சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள லேண்டருக்கு சூட்டப்பட்டு உள்ளது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பை (இஸ்ரோ) நிறுவியவர் விக்ரம் சாராபாய். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு விண்வெளி துறையில் நாடு வளரவேண்டியதன் அவசியத்தை அரசிடம் விக்ரம் சாராபாய் வலியுறுத்தினார். அவருக்கு மூத்த விஞ்ஞானியான ஹோமி ஜஹாங்கீர் பாபாவும் உறுதுணையாக இருந்தார்.

    ரஷிய நாடு ஸ்புட்னிக் விண்கலத்தை விண்ணுக்கு ஏவியபோது உலக நாடுகள் மத்தியில் விண்வெளி ஆய்வு என்பது முக்கிய அம்சமானது. ஆனால் இந்தியா போன்ற ஏழை நாட்டுக்கு இது தேவையில்லை என்று அப்போது பலர் விமர்சித்தனர்.

    அதற்கு விக்ரம் சாராபாய், "நம் தேசம் மதிப்புடன் திகழவும், உலக நாடுகள் இடையே நிமிர்ந்து நிற்கவும், மனித சமுதாயம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காணவும், அதிநவீன தொழில்நுட்பங்களில் வேறு எந்த நாட்டுக்கும் நாம் சளைக்காதவர்களாக இருந்தாக வேண்டும்'' என்றார்.

    இந்தியாவுக்கு என தனி ராக்கெட் ஏவுதளம் வேண்டும் என்று விக்ரம் சாராபாய் கனவு கண்டார். அவரும் ஹோமி பாபாவும் மேற்கொண்ட தீவிர முயற்சிகள் காரணமாக தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழு 1962-ல் நிறுவப்பட்டது. தொடர்ந்து 1963-ம் ஆண்டு திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியான தும்பாவில் ராக்கெட் ஏவுதளத்தை அமைத்தார்.

    இங்குதான் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விக்ரம் சாராபாயிடம் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1963-ம் ஆண்டு நவம்பர் 21-ந்தேதி தும்பாவில் இருந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது.

    1969-ல் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பாக (இஸ்ரோ) மாற்றம் பெற்றது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளை விண்ணில் ஏவ வேண்டும் என்பது விக்ரமின் பெருங்கனவு.

    அவரது வழிகாட்டலில் இயங்கிய விஞ்ஞானிகள் குழு, அவரது மறைவுக்குப் பிறகு 1975-ல் முதல் இந்திய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி சாதனை படைத்தனர். விக்ரம் சாராபாய் 1971-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி தனது 52-வது வயதில் காலமானார். அவர் நினைவாக திருவனந்தபுரம் விண்வெளி ஆய்வு மையத்துக்கு விக்ரம் சாராபாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    மேலும் நிலவின் அமைதிக்கடல் பகுதியில் உள்ள கருங்குழிக்கு 1973-இல் விக்ரமின் பெயரை உலக விஞ்ஞானிகள் சூட்டினர். விக்ரம் சாராபாயின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரிலான சந்திரயான்-3 லேண்டர் இன்று நிலவில் தரை இறங்கி சரித்திரம் படைக்க இருக்கிறது.

    Next Story
    ×