search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்தியிடம் 5-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை
    X

    ராகுல் காந்தியிடம் 5-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை

    • ராகுல்காந்தியிடம் அமலாக்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டம்.
    • அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள் யங் இந்தியா நிறுவனத்துக்கு கைமாறியதில் முறைகேடு நடந்ததாக 2012-ம் ஆண்டு பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் பவன்குமார் பன்சால், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடந்தப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து கடந்த 13- ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் அமலாக்கத் துறை முன்பு ராகுல்காந்தி ஆஜரானார்.

    சோனியா காந்தியின் உடல்நிலை காரணமாக ராகுல்காந்தி 4-வது நாள் விசாரணையை ஒத்தி வைக்க கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில் கடந்த 17-ந் தேதி நடைபெற இருந்த விசாரணை 20-ந் தேதி அதாவது நேற்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து ராகுல்காந்தி 4-வது நாளாக நேற்று அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு ஆஜரானார். காலை 11.05 மணிக்கு அமலாக்கத்துறை அலவலகத்துக்கு வந்த அவரிடம் மதியம் 3 மணி வரை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    பின்னர் மதியம் 3.15 மணியளவில் மதிய உணவுக்காக புறப்பட்டு சென்ற அவர் 4.45 மணிக்கு விசாரணைக்காக மீண்டும் ஆஜரானார். நள்ளிரவு 12.30 மணி வரை ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணை நீடித்தது. நேற்று சுமார் 12 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    ராகுலிடம் 4 நாட்களில் சுமார் 40 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்றும் (21-ந் தேதி) விசாரணைக்கு ஆஜராகுமாறு அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டுகுகொண்டனர்.

    இதைத்தொடர்ந்து மத்திய டெல்லி அப்துல்கலாம் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு ராகுல்காந்தி இன்று 5-வது நாளாக ஆஜரானார்.

    காலை 11 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகம் வந்த அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். அவரிம் பல கேள்விகள் எழுப்பப்பட்டு பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அதிகாரிகள் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

    ராகுல்காந்தியிடம் அமலாக்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் போலீசாரும், துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி 23-ந் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. உடல் நலக்கோளாறு காரணமாக அவர் நேற்றுதான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். இதனால் அவர் விசாரணைக்கு ஆஜராவாரா? அல்லது விசாரணை தேதியை தள்ளி வைக்க விலக்கு கேட்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×