என் மலர்
இந்தியா

திருப்பதி முழுவதும் மாதத்தில் ஒரு நாள் சுத்தப்படுத்த திட்டம்
- ஏழுமலையானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திருப்பதி மலையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக அதிகாரி தர்மா ரெட்டி அறிவித்துள்ளார்.
- ஸ்ரீவாரி மெட்டு மார்க்கத்தில் 500 ஊழியர்களும், அலிபிரி நடைபாதையில் 1,000 ஊழியர்களும் தொடர்ந்து 4 மணி நேரம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள் என்று தர்மா ரெட்டி கூறியுள்ளார்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள மலை முழுவதும் மாதத்தில் ஒரு நாள் சுத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கலெக்டர் வெங்கடரமணா, எஸ்.பி. பரமேஸ்வர் ரெட்டி மற்றும் தேவஸ்தான உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
பின்னர் அடிமட்ட ஊழியர் முதற்கொண்டு உயர் தேவஸ்தான, அரசு அதிகாரிகள், ஸ்ரீவாரி சேவகர்கள், ஊடக நண்பர்கள் அனைவரும் திருமலையை சுத்தமாக வைத்துக் கொள்ள களம் இறங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன் பேரில் கடந்த 2 நாட்களாக கலெக்டர், இணை கலெக்டர் தேவஸ்தான நிர்வாக அதிகாரி, இணை நிர்வாக அதிகாரிகள் மற்றும் அனைத்து தேவஸ்தான துறை அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் திருமலையை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதற்கு 'சுந்தர திருமலை-சுத்தமான திருமலை' என பெயர் சூட்டப்பட்டது.
இதில் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு திருப்பதி மலையின் மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்தனர்.
இதைக் கண்ட பக்தர்களும் தாமாக முன்வந்து சாலைகளை சுத்தம் செய்தனர். ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் அரசு அதிகாரிகள், தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள், ஏழுமலையானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திருப்பதி மலையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக அதிகாரி தர்மா ரெட்டி அறிவித்துள்ளார்.
அதன்படி வருகிற 13-ந் தேதி ஸ்ரீவாரி மெட்டு மார்க்கத்தில் 500 ஊழியர்களும், அலிபிரி நடைபாதையில் 1,000 ஊழியர்களும் தொடர்ந்து 4 மணி நேரம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள் என்று தர்மா ரெட்டி கூறியுள்ளார்.






