search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    போட்டோ ஷுட் எடுத்த தம்பதியர் மீது தென்னை மட்டையை வீசிய யானை
    X

    போட்டோ ஷுட் எடுத்த தம்பதியர் மீது தென்னை மட்டையை வீசிய யானை

    • கடந்த 5-ந்தேதி கேரளாவைச் சேர்ந்த ஜெய்சங்கர்-கிரீஷ்மா தம்பதியர், ஒரு கோவிலுக்குச் சென்ற போது அங்கு பல இடங்களிலும் செல்பி எடுத்துள்ளனர்.
    • கோவிலில் உள்ள சரவணன் என்ற பெயர் கொண்ட யானை முன்பு நின்று அவர்கள் செல்பி எடுத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    திருமண விழாக்களில் போட்டோ எடுத்து மகிழ்வது சிறப்பான ஒரு நிகழ்வாக உள்ளது. நாம் காலத்திற்கும் அந்தப் போட்டோக்களை பார்த்து வருவதும் உறவினர்களுக்கு காட்டி மகிழ்வதும் வாடிக்கை.

    ஆனால் இன்றோ 'போட்டோ ஷுட்' என்பது விபரீத விளையாட்டாகி விட்டது. ஆம், இயற்கையை ரசிக்கிறோம் என பல இடங்களுக்கும் சென்று 'செல்பி' எடுப்பது, 'போட்டோ ஷுட்' நடத்துவது வாடிக்கையாகி விட்டது. ஆனால் இது சில நேரங்களில் ஆபத்தில் மட்டுமல்ல... உயிருக்கு உலை வைக்கும் விதத்திலும் அமைந்து விடுகிறது.

    அப்படி ஒரு சம்பவம் தான் கேரளாவில் நடந்து உள்ளது. கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தம்பதியர் மீது தென்னை மட்டையை யானை வீசுவது போன்ற வீடியோ வைரலானது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது பற்றி விசாரித்த போது தான் கேரளாவில் உள்ள கோவிலில் யானை முன்பு போட்டோ ஷுட் நடத்திய தம்பதியர் மீது மட்டை வீசப்பட்ட சம்பவம் தான் இது என தெரியவந்தது.

    கடந்த 5-ந்தேதி கேரளாவைச் சேர்ந்த ஜெய்சங்கர்-கிரீஷ்மா தம்பதியர், ஒரு கோவிலுக்குச் சென்ற போது அங்கு பல இடங்களிலும் செல்பி எடுத்துள்ளனர். அதன் பிறகு கோவிலில் உள்ள சரவணன் என்ற பெயர் கொண்ட யானை முன்பு நின்று அவர்கள் செல்பி எடுத்துள்ளனர்.

    அதனை முடித்துக் கொண்டு அவர்கள் அங்கிருந்து நகர்ந்த போது, திடீரென யானைக்கு கோபம் வந்தது.

    அதே வேகத்தில் தனது முன்புள்ள தென்னை மட்டையை தூக்கி தம்பதி மீது வீசியுள்ளது. அதிர்ஷ்டவசமாக தென்னை மட்டை, ஜெய்சங்கர் மீது விழாமல் அவரை கடந்து சென்று விழுந்துள்ளது. இதனை வீடியோ எடுத்த யாரோ சமூகவலைதளங்களில் வைரலாக்கி உள்ளனர். இதற்கிடையில் சரவணன் யானைக்கு கிரீஷ்மா சிறு வயதில் இருந்தே பழக்கம் என்றும், எப்போதும் யானைக்கு உணவு கொடுக்கும் கிரீஷ்மா, சம்பவத்தன்று தராமல் சென்றதால் ஆத்திரமடைந்த யானை, தென்னை மட்டையை வீசியதாகவும் கூறப்படுகிறது.

    எது எப்படியோ செல்பி மோகத்தில் பலரும் ஆபத்தில் சிக்கி வருவது தொடர்கதையாகவே உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்லம் சாத்தனூரில் சாண்ட்ரா என்ற பெண் தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் வினுவுடன் உயரமான பாறை மீது ஏறி நின்று செல்பி எடுத்தபோது, தவறி கல் குவாரி குட்டையில் விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவரை வினு காப்பாற்றினார்.

    இதேபோல் கடந்த மாதம் 10-ந்தேதி குருவாயூரில் போட்டோ ஷுட் நடத்திய தம்பதியரை யானை தாக்க முயன்றதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×