என் மலர்
இந்தியா

எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாராளுமன்றத்தில் ராஜ்நாத்சிங் விளக்கம்
- இந்திய வீரர்கள் மிகுந்த வீரத்துடன் சீன ராணுவ வீரர்களை தடுத்து நிறுத்தினர்.
- எல்லையில் எந்த அத்து மீறல் முயற்சியையும் தடுக்க நமது படைகள் எப்போதும் தயாராக உள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. 29-ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடை பெறுகிறது.
பாராளுமன்றம் இன்று கூடியதும் அருணாச்சல பிரதேச எல்லையில் இந்தியா-சீனா படைகள் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து பிரதமர் அறிக்கை அளிக்க வேண்டும், பாராளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் முறையிட்டன.
கடந்த 9-ந்தேதி அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதி அருகே உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்றனர். இந்திய வீரர்கள் அதை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 9 இந்திய வீரர்கள் காயம் அடைந்தனர்.
பாராளுமன்றத்தின் இன்றைய அலுவல்களை ஒத்தி வைத்து விட்டு எல்லை பிரச்சினை குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் முறையிட்டனர்.
இது தொடர்பாக இரு அவையிலும் அந்த கட்சி ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்தது. பாராளுமன்ற மக்களவையில் 12 மணிக்கும், மேல் சபையில் பிற்பகல் 2 மணிக்கும் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் விளக்கம் அளிப்பார் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் எதிர் கட்சியினர் சீன ராணுவ ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று இரு அவையிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பாராளுமன்ற இரு அவைகளும் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
12 மணிக்கு பாராளுமன்ற மக்களவை கூடியதும் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் இதுகுறித்து விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது:-
சீன ராணுவத்தினருடன் தவாங் மோதலில் நமது ராணுவ வீரர்களுக்கு உயிரிழப்போ, பலத்த காயமோ ஏற்படவில்லை. சீன ராணுவம் ஊடுருவிய முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்திய வீரர்கள் மிகுந்த வீரத்துடன் சீன ராணுவ வீரர்களை தடுத்து நிறுத்தினர்.
இந்திய ராணுவத்தினருடன் மோதலில் இந்திய வீரர்கள் சிலர் காயம் அடைந்தனர். சீன வீரர்கள் காயம் அடைந்தனர். இந்திய வீரர்கள் காயம் அடைந்த போதிலும் சீன வீரர்களை அவர்களது முகாமுக்கு திருப்பி அனுப்பும் வகையில் பதிலடி கொடுத்தனர்.
எல்லையில் எந்த அத்து மீறல் முயற்சியையும் தடுக்க நமது படைகள் எப்போதும் தயாராக உள்ளது. நமது ராணுவ வீரர்களின் திறமை, வீரம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்த சபை மதிக்கும் என்று நம்புகிறேன்.
இந்த மோதலுக்கு பிறகு இரு நாட்டு ராணுவ அதிகாரிகளின் ஆலோசனை நடைபெற்றது.
இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.
எதிர்கட்சிகளின் முழக்கத்துக்கு இடையே அவர் இந்த அறிக்கையை படித்தார்.