என் மலர்
இந்தியா

இந்திய கோடீஸ்வரர்களில் அம்பானி மீண்டும் முதலிடம்: சொத்து மதிப்பு ரூ.8 லட்சம் கோடி
- கடந்த ஆண்டு ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கு 2 புதிய கோடீஸ்வரா்கள் இந்தியாவில் உருவாகி வந்தனா்.
- இந்தியாவில் 51 பணக்காரர்களின் சொத்துக்கள் நடப்பாண்டில் இரட்டிப்பாகி உள்ளது.
மும்பை:
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவா் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளாா். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.8.08 லட்சம் கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த அதானி நிறுவனங்களின் தலைவா் கவுதம் அதானியின் சொத்துக்கள் 57 சதவீதம் சரிந்து ரூ.4.47 லட்சம் கோடியுடன் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளாா். அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த ஜனவரியில் வெளியிட்ட அறிக்கை காரணமாக அதானியின் சொத்து மதிப்பு சரிந்தது.
'ஹுருன் இந்தியா' வெளியிட்டுள்ள இந்திய செல்வந்தா்களின் பட்டியலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
2019-ம் ஆண்டு 6-வது இடத்தில் இருந்த அதானியின் சொத்துக்கள் நடப்பாண்டு 5 மடங்கு அதிகரித்து இரண்டாம் இடத்தில் உள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்துகள் கடந்த 5 ஆண்டுகளில் 2.1 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அவர் இந்திய பணக்காரர்களில் மீண்டும் முதல் இடத்துக்கு வந்துள்ளார்.
மூன்றாம் இடத்தில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் தலைவா் அதாா் பூனாவாலாவின் சொத்து மதிப்பு (ரூ.2.78 லட்சம் கோடி) மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
எச்.சி.எல். நிறுவனத்தின் தலைவா் சிவ நாடாரின் சொத்து மதிப்பு 23 சதவீதம் அதிகரித்துள்ளது. அவரது சொத்து மதிப்பு ரூ.2.28 லட்சம் கோடி ஆகும். இதன் மூலம் இந்திய பணக்காரர்கள் வரிசையில் சிவ நாடார் 4-வது இடத்தில் உள்ளார்.
இந்தியாவில் மொத்தம் 1,319 பணக்காரர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். கடந்த ஆண்டு ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கு 2 புதிய கோடீஸ்வரா்கள் இந்தியாவில் உருவாகி வந்தனா். தற்போது இந்த எண்ணிக்கை 259-ஆக உள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகமாகும்.
இந்தியாவில் 51 பணக்காரர்களின் சொத்துக்கள் நடப்பாண்டில் இரட்டிப்பாகி உள்ளது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 24-ஆக இருந்தது.
மும்பையை சோ்ந்த 328 பேரும், டெல்லியில் 199 பேரும், பெங்களூரில் 100 பேரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.
கோடீஸ்வர பணக்காரர்களை உருவாக்கும் முதல் 20 நகரங்களில் முதல் முறையாக திருப்பூரும் இடம் பெற்றுள்ளது.






