search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத் சட்டசபை தேர்தல்- மனுதாக்கல் நாளை மறுநாள் தொடக்கம்
    X

    குஜராத் சட்டசபை தேர்தல்- மனுதாக்கல் நாளை மறுநாள் தொடக்கம்

    • குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • டிசம்பர் 1 மற்றும் 5-ந் தேதிகளில் ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தில் விஜய் ரூபானி தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.

    அடுத்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 18-ந்தேதி வரை அவரது ஆட்சி காலம் உள்ளது. இந்த நிலையில் குஜராத் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடத்தும் ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வந்தது.

    182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு கடந்த காலங்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. அதேபோன்று மீண்டும் 2 கட்டங்களாக நடத்தலாமா என்று ஆய்வு செய்யப்பட்டது. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு இன்று மதியம் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

    டெல்லியில் இன்று மதியம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இது தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 1 மற்றும் 5-ந் தேதிகளில் ஓட்டுப்பதிவு நடத்தப்படும். 1-ந்தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின் போது 89 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

    இந்த 89 தொகுகளிலும் நாளை மறுநாள் (நவம்பர் 5-ந் தேதி) வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. டிசம்பர் 5-ந் தேதி 2-ம் கட்ட தேர்தலின் போது 99 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடத்தப்படும். இதற்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 10-ந் தேதி தொடங்குகிறது.

    குஜராத்தில் மொத்தம் உள்ள 182 சட்டசபை தொகுதிகளில் 142 தொகுதிகள் பொதுவானவை. 17 தொகுதிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், 23 தொகுதிகள் மலைவாழ் பழங்குடி இன மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் 4 கோடியே 90 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள்.

    இவர்கள் வாக்களிப்பதற்காக 182 தொகுதிகளிலும் 51 ஆயிரத்து 782 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளும் தரை தளத்திலேயே அமைக்கப்படும்.

    வாக்களிப்பதில் பெண்களையும், இளைஞர்களையும் உற்சாகப்படுத்துவதற்காக முழுக்க முழுக்க அவர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படும். 1274 வாக்குச் சாவடிகளில் முழுக்க பெண்களே பணிபுரிவார்கள்.

    அதுபோல 33 வாக்குச்சாவடிகளில் முழுக்க முழுக்க இளைஞர்கள் மட்டுமே பணியாற்றுவார்கள். 217 வாக்காளர்களுக்காக கப்பலிலும் இந்த தடவை வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளது.

    வாக்காளர்களில் 2 கோடியே 53 லட்சத்து 36 ஆயிரத்து 610 பேர் ஆண்கள், 2 கோடியே 37 லட்சத்து 51 ஆயிரத்து 738 பேர் பெண்கள். இவர்களில் 4 லட்சத்து 61 ஆயிரத்து 694 பேர் முதல் முதலாக வாக்களிக்க போகும் இளைஞர்கள் ஆவார்கள்.

    ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் மாதம் 8-ந் தேதி நடத்தப்படும். தேர்தலை சுமூகமாக நடத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது.

    இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறினார்.

    கடந்த 2017-ம் ஆண்டு குஜராத், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் ஒரே காலக்கட்டத்தில் நடத்தப்பட்டது. இந்த தடவை இமாச்சலப் பிரதேச தேர்தல் வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கை டிசம்பர் மாதம் 8-ந் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

    அதே தேதியில் குஜராத் மாநில வாக்குகளும் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை தேர்தல் ஆணையம் இன்று உறுதிப்படுத்தி உள்ளது.

    இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா, ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதே மாதிரியான மும்முனை போட்டிதான் குஜராத் சட்டசபை தேர்தலிலும் காணப்படுகிறது.

    குஜராத் மாநிலத்தில் 1998-ம் ஆண்டு முதல் கடந்த 24 ஆண்டுகளாக பா.ஜனதா கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இதில் மோடி தலைமையில் 12 ஆண்டுகள் பா.ஜ.க. ஆட்சி நடந்துள்ளது. 5 தடவை தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ள பா.ஜனதா 6-வது தடவையும் வெற்றி பெறுமா என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நாடுமுழுவதும் நிலவுகிறது.

    கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பா.ஜனதா கட்சிக்கு 99 இடங்களே கிடைத்தன. 25 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் 100 இடங்களுக்கு கீழ் பா.ஜனதா சரிவை சந்தித்தது கடந்த தேர்தலில்தான்.

    அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களை கைப்பற்றி கடும் சவாலாக மாறியது. 10 தொகுதிகளில் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது. தற்போது காங்கிரசுக்கு குஜராத்தில் செல்வாக்கு சற்று மேம்பட்டு இருப்பதாக கருதப்படுவதால் பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    அதே சமயத்தில் கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் 1 சதவீத வாக்குகளைக்கூட பெறாத ஆம் ஆத்மி கட்சி இந்த தடவை முழு வீச்சில் களம் இறங்கி உள்ளது. டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து குஜராத்திலும் வலுவாக கால் ஊன்ற வேண்டும் என்று கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தை எற்கனவே தொடங்கி விட்டார்.

    அவர் நிறுத்தப்போகும் வேட்பாளர்கள் பிரிக்கும் வாக்குகள்தான் பா.ஜ.க., காங்கிரஸ் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் குஜராத் மாநில தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

    கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. பா.ஜனதா கட்சி 49.9 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது. காங்கிரஸ் கட்சி 41.4 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது. சுமார் 8 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில்தான் காங்கிரஸ் வெற்றியை இழந்தது.

    இந்த தடவை அதை சரி கட்டுவதற்காக காங்கிரஸ் தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் ஆம் ஆத்மி கட்சி அதிக வாக்குகளை பிரிக்கும் பட்சத்தில் அது காங்கிரஸ் வெற்றியை பாதிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

    Next Story
    ×