search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    2 ஆறுகளை கடந்து பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியை
    X

    2 ஆறுகளை கடந்து பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியை

    • துர்பூர் கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
    • ஆசிரியையின் இந்த உணர்வு பூர்வமான அர்ப்பணிப்புக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகிறது.

    ராய்ப்பூர்:

    கிராமப்புற பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இன்றளவும் சில ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு கல்வி கற்றுக்கொடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் ஆட்டோ டிரைவராக மாறி பஸ் வசதி இல்லாத கிராமங்களில் இருந்து குழந்தைகளை தினமும் பள்ளிக்கு இலவசமாக அழைத்து வருகிறார். இதற்காக அவர் காலையிலேயே பள்ளிக்கு வந்து எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி இந்த சேவையை செய்து வருகிறார். பணம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும் இக்காலத்தில் இப்படி ஒரு ஆசிரியரா?என எல்லோரையும் திரும்பி பார்க்கவைக்கும் இவருக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன.

    இவரை போலவே வடமாநிலத்தில் ஒரு ஆசிரியை தினமும் 2 ஆறுகளை கடந்து சென்று மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கிறார் ,அவரது பெயர் சர்மிளா தோப்போ. சத்தீஸ்கர் மாநிலம் துர்பூர் கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இந்த பள்ளி வனப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் பல ஆசிரியர்கள் இந்த பள்ளிக்கு வராமல் பணி மாறுதல் வாங்கி கொண்டு சென்று விடுவார்கள். ஆனால் இதற்கு நேர்மாறாக சர்மிளா தோப்போ இதை ஒரு சவாலாக ஏற்று பணியில் சேர்ந்தார்.

    பள்ளியில் இருந்து அவரது வீடு சிறிது தூரம் உள்ளது. ஆனால் அவரால் வாகனத்திலோ, சைக்கிளிலோ பள்ளிக்கு செல்ல சாலை வசதிகள் எதுவும் இல்லை.

    இதனால் தினமும் தனது ஊருக்கும், பள்ளிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஓடும் 2 ஆறுகளை கடந்து தான் அவர் பள்ளிக்கு சென்று வருகிறார். அடர்ந்த காட்டுப் பகுதியில் பாறைகளுக்கு இடையே முட்டளவு ஓடும் தண்ணீரில் அவர் கஷ்டப்பட்டு நடந்து செல்கிறார். தோளில் கைப்பையை தொங்க விட்டுக்கொண்டு அவர் இந்த 2 ஆறுகளை கடந்து தான் பள்ளிக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த சிரமங்களை எல்லாம் பொறுத்துக்கொள்வதாக ஆசிரியை சர்மிளா தோப்போ பெருமையுடன் கூறினார். ஆசிரியையின் இந்த உணர்வு பூர்வமான அர்ப்பணிப்புக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகிறது.

    அந்த மாவட்ட கலெக்டர் அவரை வெகுவாக பாராட்டி உள்ளார். நிச்சயமாக சர்மிளா தனது பணியை நேர்மையாக செய்கிறார், இவரை போலவே மற்ற ஆசிரியர்களும் விசுவாசமாக பணியாற்றி சரியான நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும் என கூறி உள்ளார்.

    Next Story
    ×