search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அறுந்து கிடந்த மின்வயரால் பலியான பெண்ணின் கணவர் உருக்கம்
    X

    அறுந்து கிடந்த மின்வயரால் பலியான பெண்ணின் கணவர் உருக்கம்

    • பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
    • வழக்கு பதிவு செய்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் லைன் மேனை கைது செய்தனர்.

    பெங்களூரு:

    கடலூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (24). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு பர்னிச்சர் ஷோரூமில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சவுந்தர்யா (23). இவர்களுக்கு சுவிஷா என்ற 9 மாத பெண் குழந்தை இருந்தது. இவர்கள் பெங்களூரு காடுகோடி அருகே உள்ள ஏ.கே.கோபால் காலனி என்ற பகுதியில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட சந்தோஷ்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சொந்த ஊரான கடலூருக்கு வந்தார். அங்கு தீபாவளி பண்டிகையை கொண்டாடிய அவர் பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவுக்கு குடும்பத்துடன் சென்றார்.

    நேற்று அதிகாலை 5 மணி அளவில் அவர்கள் பெங்களூருவுக்கு சென்றனர். பின்னர் சந்தோஷ்குமார் தனது குடும்பத்துடன் சவுந்தர்யாவின் தாய் வீட்டிற்கு நடந்து சென்றார். முதலில் சவுந்தர்யா தனது குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றார். அவர்களை தொடர்ந்து சந்தோஷ்குமார் சென்றார்.

    அப்போது அந்த பகுதியில் 11 கே.வி. திறன் கொண்ட மின் வயர் அறுந்து கிடந்தது. இதை கவனிக்காமல் சவுந்தர்யா மிதித்து விட்டார். இதில் அவரையும், அவரது குழந்தையையும் மின்சாரம் தாக்கியது. பின்னர் திடீரென அவர்களது உடலில் தீப்பற்றியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்தோஷ்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையை காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை.

    இதையடுத்து மின்வாரியத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் மீட்பு குழுவினர் வந்து பார்த்தபோது மின்சாரம் தாக்கி தீ பிடித்ததில் சவுந்தர்யா தனது குழந்தையுடன் இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் பற்றி தெரிய வந்ததும் கர்நாடக மாநில எரிசக்தி துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், லைன்மேன் மஞ்சுநாத், உதவி பொறியாளர் சேத்தன், உதவி செயற்பொறியாளர் ராஜண்ணா ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். மேலும் பலியான சவுந்தர்யாவின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும் இதுதொடர்பாக காடுகோடு போலீசார் மின்வாரியத்தினர் மீது அலட்சியத்தால் மரணம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் லைன் மேனை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து சவுந்தர்யாவின் கணவர் சந்தோஷ்குமார் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊரில் இருந்து நேற்று காலை தான் பெங்களூரு வந்தோம். அதிகாலை 5 மணி அளவில் நாங்கள் சவுந்தர்யாவின் தாய் வீட்டிற்கு நடந்து சென்றோம். அப்போது பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. முதலில் எனது மனைவியும், குழந்தையும் சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து நான் சென்றேன். அப்போது அறுந்து கிடந்த மின் கம்பியை பனிப்பொழிவின் காரணமாக கவனிக்காமல் எனது மனைவி மிதித்தார். இதில் தூக்கிவீசப்பட்டதில் என் கண்முன்னே எனது மனைவியும், குழந்தையும் தீப்பிடித்து இறந்து விட்டனர். பெங்களூரு போன்ற சாப்ட்வேர் நிறுவனங்கள் நிறைந்த பெரு நகரங்களில் மின்சார கம்பிகள் அறுந்து கிடக்கும் என்று ஒருபோதும் நான் நினைக்கவில்லை என்று உருக்கமாக கூறினார்.

    மின்வாரியத்தின் அலட்சியத்தை கண்டித்து நேற்று மதியம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது இந்த விவகாரம் குறித்து எரிசக்தி துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறும்போது, 11 கே.வி. திறன் கொண்ட மின் வயர் அதிகாலை 1.30 மணி முதல் அறுந்து கிடந்துள்ளது. இதுகுறித்து எந்த வித முன் எச்சரிக்கையும் செய்யாமல் மின்சார துறையினர் அலட்சியத்துடன் செயல்பட்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டினர்.

    Next Story
    ×