search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அசாம் மாநில போலீசில் லேடி சிங்கம் என்று புகழப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் கார் விபத்தில் பலி
    X

    அசாம் மாநில போலீசில் லேடி சிங்கம் என்று புகழப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் கார் விபத்தில் பலி

    • விபத்து நடப்பதற்கு முந்தின நாள், பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபா மீது லஞ்சம் வாங்கியதாக நகோன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபா சென்ற கார் மீது மோதிய கண்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அசாம் மாநில காவல்துறையில் பெண் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஜூன்மோனி ரபா.

    பணிபுரிந்த அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதில் கெட்டிக்காரர். மேலும் எந்த சவாலையும் சமாளித்து, குற்றவாளிகளை துணிச்சலாக பிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பார்.

    இதனால் அசாம் காவல்துறையில் இவரை லேடி சிங்கம் என்றும் இந்தி படத்தில் வருவது போல தபாங் காப் என்றும் பொதுமக்களால் அழைக்கப்பட்டார்.

    இதனால் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபாவிற்கு கிடைக்கும் பாராட்டு உயர் அதிகாரிகள் சிலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபா நேற்று அதிகாலை ஒரு காரில் அப்பர் அசாம் நோக்கி சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி, கார் மீது மோதியது. இதில் காரில் இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபா, உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபா சென்ற கார் மீது மோதிய கண்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த லாரி உத்தரபிரதேச மாநில பதிவெண் கொண்டது. அதனை ஓட்டி வந்த டிரைவர் விபத்து நடந்ததும், கண்டெய்னரை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டான். அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே விபத்து நடப்பதற்கு முந்தின நாள், பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபா மீது லஞ்சம் வாங்கியதாக நகோன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரது வீட்டுக்கு சோதனைக்கு சென்ற போலீசார், வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் பணத்தை கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

    இதுபற்றி பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபாவின் உறவினர்கள் கூறும்போது, ஜூன்மோனி ரபாவின் சாவில் மர்மம் உள்ளது. அவர் கார் மீது கண்டெய்னரை ஏற்றி கொலை செய்துள்ளனர். மேலும் அவர் மீது வேண்டுமென்றே லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    வீட்டில் இருந்த பணத்துக்கு உரிய கணக்கு உள்ளது. அதனை போலீசார் ஏற்கவில்லை. மாறாக அவர் மீது வேண்டுமென்றே வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே இந்த வழக்கை நேர்மையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரியுள்ளனர்.

    இதுபற்றி அசாம் முதல்-மந்திரி ஹிமாந்த் பிஸ்வசுக்கும் உறவினர்கள் மனு அனுப்பி உள்ளனர்.

    Next Story
    ×