search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் 100 வயதுக்கு மேல் 2.49 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்- தலைமை தேர்தல் ஆணையாளர் தகவல்
    X

    இந்தியாவில் 100 வயதுக்கு மேல் 2.49 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்- தலைமை தேர்தல் ஆணையாளர் தகவல்

    • ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் திருத்தம் நடைபெறுகிறது.
    • நகர்புறங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும்.

    புனே:

    நாடு முழுவதும் துணை மற்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கி கடந்த 7-ந்தேதி வரை நடந்தது.

    ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்த நாளின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் தலைமை தேர்தல் ஆணையம் முறையான வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் பங்கேற்பு என்ற விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

    மராட்டிய மாநிலம் புனேயில் நடந்த வாக்காளர் பதிவு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தலைமை தேர்தல் ஆணையாளர் ராஜீவ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டில் 100 வயதுக்கு மேல் 2.49 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 1.8 கோடி பேர் உள்ளனர். சமீபத்தில் இறந்த இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகிக்கு 106 வயதாகும். அவர் இறப்பதற்கு 3 தினங்களுக்கு முன்பு தபால் மூலம் வாக்கு அளித்தார். இது தான் கடமை உணர்வு.

    ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் திருத்தம் நடைபெறுகிறது. நகர்புறங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும். வாக்களிப்பதன் மூலம் மட்டுமே ஜனநாயக மரபுகள் முற்றிலும் வலுவாக மாறும்.

    இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையாளர் ராஜீவ்குமார் தெரிவித்தார்.

    2019 பாராளுமன்ற தேர்தலில் புனேயில் 49.84 சதவீத வாக்கு தான் பதிவாகி இருந்தது. இதனால் அங்கு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.

    Next Story
    ×