என் மலர்
இந்தியா

ஆந்திராவில் 100 வீடுகளில் 400 சமாதிகள் வீட்டின் முன்பு சமாதி கட்டி வழிபடும் கிராம மக்கள்
- மரணமடைந்த முன்னோர்களை அடுத்து வரும் வாரிசுகள் மறந்துவிடக்கூடாது.
- சமாதிகள் நிறைந்த அந்த கிராமத்தை கடந்து செல்லும் வெளியூர் மக்கள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர்.
திருப்பதி:
சமாதி இருக்கும் இடத்திற்கு செல்வது பயத்தையும் தயக்கத்தையும் ஏற்படுத்தும்.ஆனால் ஒரு கிராமத்தில் இறந்த முன்னோர்களை வீட்டு முன்பு அடக்கம் செய்து சமாதி கட்டி வழிபட்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் எமிகனூர் மண்டலத்திலுள்ள அய்யகொண்டா கிராமத்தில் சுமார் 100 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டின் முன்பும் சமாதிகள் உள்ளன. மரணம் அடைந்தவர்களை வீட்டு முன்பு அடக்கம் செய்து சமாதி கட்டி வருகின்றனர். இதனால் ஒவ்வொரு வீடுகள் முன்பும் சமாதிகளாக காட்சியளிக்கின்றன.
அந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் தினமும் சமைத்த பின் தங்கள் உணவுகளை வீட்டின் முன் இருக்கும் முன்னோர் சமாதிக்கு எடுத்துச்சென்று படைத்த பிறகு சாப்பிடுகின்றனர்.
இது தவிர கிராமத்தில் இருக்கும் கோவிலுக்கு நைவேத்தியம் சமர்ப்பிக்கும் போது சமாதிகளுக்கும் நைவேத்திய சமர்ப்பணம் நடைபெறுகிறது.
தங்கள் குடும்பத்தில் யாருக்காவது திருமணம் நிச்சயிக்கப்பட்டால் மணமக்களுக்கு உரிய புத்தாடைகளை முன்னோர்களின் சமாதியில் வைத்து பூஜைகள் நடத்தி வருகின்றனர். இந்த சமாதிகளில் சிறுவர்கள் சகஜமாக விளையாடுகின்றனர்.
மரணமடைந்த முன்னோர்களை அடுத்து வரும் வாரிசுகள் மறந்துவிடக்கூடாது. அவர்களுடைய ஆசிர்வாதம் இல்லாமல் எந்த ஒரு வேலையையும் செய்ய கூடாது என்பதற்காக கடந்த பல ஆண்டுகளாக இந்த நடைமுறை வழக்கத்தில் இருந்து வருவதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.
கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பும் குறைந்தபட்சம் 4-க்கும் மேற்பட்ட சமாதிகள் என 400 சமாதிகள் உள்ளன.
சமாதிகள் நிறைந்த அந்த கிராமத்தை கடந்து செல்லும் வெளியூர் மக்கள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர்.
வெளியூர்களை சேர்ந்தவர்கள் உச்சி வெயில் நேரம், இரவ நேரங்களில் அந்த கிராமத்திற்கு செல்வதையும், அந்த கிராமம் வழியாக மற்ற ஊர்களுக்கு செல்வதையும் தவிர்த்து வருகின்றனர்.






