என் மலர்
இந்தியா

சித்தூர் அருகே நகைக்கடையில் துளையிட்டு ரூ.40 லட்சம் வெள்ளி பொருட்கள் கொள்ளை
- சித்தூர் அடுத்த கெங்காதர நல்லூரை சேர்ந்தவர் பல்ராம்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த கெங்காதர நல்லூரை சேர்ந்தவர் பல்ராம். இவர் கெங்காதர நல்லூர் பஸ் நிலையம் அருகே நகைக்கடை வைத்து உள்ளார். நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை என்பதால் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் நகை வாங்க வருவார்கள் என்பதற்காக அதிக அளவில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கடையில் வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடித்து வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றார். இவரது கடைக்கு அருகே விஜய் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் மளிகை கடையின் சுவற்றில் துளையிட்டு இருப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு கடை உரிமையாளருக்கு போன் செய்தனர்.
விஜய் வந்து கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அவரது கடை சுவற்றில் இருந்து நகைக்கடை சுவற்றில் துளையிட்டு இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து விஜய் நகைக்கடை உரிமையாளர் பலராமுக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து கடையை திறந்து பார்த்தபோது கடையில் வைத்திருந்த வெள்ளி தட்டு, டம்ளர், சாமி சிலைகள்,கால் கொலுசுகள் என 80 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் கல்லாவில் வைத்திருந்த ரூ.12 ஆயிரம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது.திருட்டு சம்பவம் குறித்து கெங்காதர நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் இன்ஸ்பெக்டர் மத்தையாச்சாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, நகைக்கடையின் சுவர்கள் காங்கிரிட்டால் கட்டப்பட்டுள்ளதால் வெளிப்புறத்தில் துளையிட முடியவில்லை.
இதனால் மளிகை கடையின் சுவற்றில் துளையிட்டு பின்னர் நகைக்கடை சுவற்றில் துளையிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரை கொள்ளையர்கள் உடைக்க முயற்சி செய்துள்ளனர். அவர்களின் முயற்சி தோல்வி அடைந்ததால் தங்க நகைகள் கொள்ளை போகாமல் தப்பியது.
கொள்ளைபோன வெள்ளி பொருட்கள் மதிப்பு ரூ.40 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






