search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்களூரு ரெயில் நிலையத்தில் கொலை செய்து டிரம்மில் அடைத்து வீசப்பட்டது பீகார் இளம்பெண்
    X

    பெங்களூரு ரெயில் நிலையத்தில் கொலை செய்து டிரம்மில் அடைத்து வீசப்பட்டது பீகார் இளம்பெண்

    • கொலை செய்யப்பட்ட தமன்னா அப்ரோஜ் என்பவரை திருமணம் செய்திருந்தார். அப்ரோஜ் மாற்றுத்திறனாளி ஆவார்.
    • கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக 2 பேரும் பிரிந்து விட்டனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு பையப்பனஹள்ளி சர் எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் முனையத்தின் முக்கிய நுழைவு வாயில் பகுதியில் கடந்த 13-ந் தேதி காலையில் ஒரு டிரம் கிடந்தது.

    அதில், ஒரு பெண்ணை கொலை செய்து அவரது உடலை பாலிதீன் கவரால் மூடி வைத்திருந்தனர். இந்த சம்பவம் பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பதுபற்றி விசாரணை நடத்தப்பட்டது. ஆட்டோவில் வந்த மர்மநபர்கள், ரெயில் நிலையத்தின் முன்பாக டிரம்மை வீசி சென்றது ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலமாக தெரியவந்தது.

    இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் பீகார் மாநிலத்தை சேர்ந்த தமன்னா (வயது 27) என்று அடையாளம் காணப்பட்டது. அவர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய ரெயில்வே போலீசார், தமன்னா கொலை தொடர்பாக பீகாரை சேர்ந்த கமால் (21), தன்வீர் (28), ஷாகீப் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    கொலை செய்யப்பட்ட தமன்னா அப்ரோஜ் என்பவரை திருமணம் செய்திருந்தார். அப்ரோஜ் மாற்றுத்திறனாளி ஆவார். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக 2 பேரும் பிரிந்து விட்டனர்.

    அத்துடன் அப்ரோஜிடம் இருந்து தமன்னா விவாகரத்தும் பெற்றிருந்தார். அதன்பிறகு, அப்ரோஜின் பெரியப்பா மகனான இந்திகாப்பை தமன்னா 2-வது திருமணம் செய்து கொண்டு இருந்தார்.

    தனது 2-வது கணவருடன் தமன்னா ஜிகனியில் வசித்து வந்தார். அப்ரோஜின் சகோதரர் நவாப் பெங்களூரு சிட்டி மார்க்கெட் பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். தனது சகோதரரை விவாகரத்து செய்து விட்டு, இந்திகாப்பை தமன்னா 2-வதாக திருமணம் செய்ததால் நவாப் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு இருந்தது.

    இதனால் தமன்னாவை பழிவாங்க நவாப் திட்டமிட்டார். இதற்காக கடந்த 12-ந் தேதி விருந்து கொடுப்பதாக நவாப் மற்றும் உறவினர்கள் தமன்னாவை அழைத்து சென்று கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்தனர்.

    பின்னர் தமன்னாவின் உடலை பாலிதீன் கவரில் சுற்றி டிரம்மில் பீகாருக்கு கொண்டு செல்ல கொலையாளிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்திற்கு வந்து நுழைவு வாயிலில் வைத்து விட்டு தலைமறைவானது தெரியவந்துள்ளது.

    இந்த கொலையில் நவாப் உள்பட மேலும் 5 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    தமன்னா உடல் வைக்கப்பட்டிருந்த டிரம்மில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த ஸ்டிக்கரில் பெயர் மற்றும் முகவரியும் இடம் பெற்றிருந்தது. அந்த ஸ்டிக்கர் மற்றும் பிற முகவரி மூலமாக போலீசார் துப்பு துலக்கி கொலையாளிகளை கைது செய்துள்ளனர். துரிதமாக துப்பு துலக்கிய போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    Next Story
    ×