search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் பதுங்கி இருந்த பாம்பு- பயணிகள், பெண்கள் அலறல்
    X

    பாம்பு இருந்த ரெயில் பெட்டி - பாம்பு


    நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் பதுங்கி இருந்த பாம்பு- பயணிகள், பெண்கள் அலறல்

    • ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் பாம்பை தேடினர்.
    • பாம்பு இன்னொரு ஓட்டைக்குள் புகுந்து மாயமாகி விட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி செல்லும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் மாலையில் புறப்பட்டது.

    ரெயிலின் எஸ் 5 தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் உள்ள பயணிகள் தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்த பின்பு தூங்குவதற்கு தயாரானார்கள்.

    அப்போது பயணி ஒருவர், தனது இருக்கைக்கு அருகே ஒரு ஓட்டை இருப்பதை கண்டார். அந்த ஓட்டைக்குள் இருந்து லேசான சத்தம் கேட்டது. உடனே அவர் ஒரு குச்சியை எடுத்து அந்த ஓட்டைக்குள் நுழைத்தார். அப்போது ஓட்டையில் இருந்து ஒரு பாம்பு சீறியபடி வெளியே வந்தது.

    அதிர்ச்சி அடைந்த பயணி, அருகில் இருந்த சக பயணிகளிடம் இதனை கூறினார். அதற்குள் அந்த பாம்பு ஓட்டையில் இருந்து வெளியே வந்தது.

    பின்னர் பயணிகள் அமரும் இருக்கையில் சுருண்டு கிடந்தது. இதை கண்டு பயணிகள், பெண்கள் அலறினர். அவர்கள் ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் அங்கு வந்து பாம்பை தேடினர். அதற்குள் அந்த பாம்பு இன்னொரு ஓட்டைக்குள் புகுந்து மாயமாகி விட்டது.

    பல மணி நேரம் தேடியும் பாம்பை காணவில்லை. இதையடுத்து அந்த பாம்பு ஓட்டை வழியாக கீழே விழுந்திருக்கலாம் என பாதுகாப்பு படை வீரர்கள் கூறினர். ஆனாலும் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் பீதியில் தூங்காமல் இருந்தனர்.

    இதற்கிடையே ரெயில் பெட்டிக்குள் பாம்பு இருப்பதை பயணி ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

    தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. பலரும் இதுபற்றி கருத்து பதிவிட்டு வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×