என் மலர்tooltip icon

    இந்தியா

    போலீசார் லத்தியால் தாக்கியதால் ஓய்வு பெற்ற விமானப்படை வீரரின் கால் அகற்றம்
    X

    போலீசார் லத்தியால் தாக்கியதால் ஓய்வு பெற்ற விமானப்படை வீரரின் கால் அகற்றம்

    • சுரேசன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • போலீசார் தாக்கியதன் காரணமாக முன்னாள் விமானப்படை வீரரின் கால் செயலிழந்து அகற்றப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர் கோடு மாவட்டம் நீலேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சுரேசன்(வயது49). இவர் இந்திய விமானப்படையில் 21 ஆண்டுகள் தரைப் பயிற்சி பயிற்றுவிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

    சுரேசன் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் பொருட்கள் வாங்குவதற்காக மங்களூரில் உள்ள மிலிட்டரி கேன்டீனுக்கு சென்று வருவார். அதேபோல் கடந்த 1-ந்தேதி நீலேஸ்வரத்தில் இருந்து மலபார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மங்களூருக்கு சென்றார்.

    மங்களூரு ரெயில் நிலையத்துக்கு சென்றடைந்ததும், சுரேசனுக்கு திடீரன உடல்நலம் பாதிக்கப்பட்டது. ரெயிலில் அதிக கூட்டம் இருந்த பொதுப் பெட்டியில் பயணித்து வந்ததன் காரணமாக அவருக்கு குமட்டல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்த இருக்கையில் படுத்தார்.

    அப்போது அங்கு வந்த ஒரு போலீஸ்காரர், ரெயில் நிலையத்தில் படுத்து தூங்க அனுமதியில்லை என்று கூறி சுரேசனை அங்கிருந்து செல்லுமாறு கூறியிருக்கிறார். அப்போது அவர் தான் முன்னாள் விமானப்படை வீரர் என்றும், மிலிட்டரி கேன்டீனுக்கு வந்த இடத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் படுத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

    அதனை ஏற்றுக் கொள்ளாத அந்த போலீஸ்காரர், சுரேசனில் காலில் லத்தியால் பயங்கரமாக தாக்கினார். படுத்திருந்த நிலையில் எழுந்திருக்க முயன்றபோதும், அந்த போலீஸ்காரர் சுரேசனின் காலில் லத்தியால் தொடர்ந்து அடித்திருக்கிறார்.

    இதனால் சுரேசனால் நடக்க முடியவில்லை. காலை முதல் இரவு வரை எழுந்து நடக்க முடியாமல் ரெயில் நிலையத்திலேயே அமர்ந்திருந்த சுரேசன், இரவில் தனது மனைவிக்கு போன் செய்து நடந்ததை கூறினார். மேலும் தான் எழுந்திருக்க முடியாமல் ரெயில் நிலையத்தில் இருப்பதாக கூறியிருக்கிறார்.

    இதையடுத்து சுரேசனின் குடும்பத்தினர் மங்களூரு ரெயில் நிலையத்துக்கு சென்று அவரை நீலேஸ்வரத்துக்கு அழைத்துவந்து, அங்குள்ள தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், உடனடியாக நரம்பியல் மருத்துவரை அணுகுமாறு கூறினர்.

    இதையடுத்து சுரேசன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது இடது கால் முற்றிலும் செயலிழந்து விட்டதாகவும், ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் சேதமடைந்ததால் சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

    இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பல நாட்கள் சிகிச்சை அளித்த போதிலும் அவரது கால் இயல்பு நிலைக்கு வரவில்லை. அதனை அகற்றாவிட்டால் சுரேசனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து அவரது இடது காலை அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் அகற்றினர்.

    ரெயில்வே போலீஸ்காரர் தாக்கியதால் சுரேசனின் கால் செயலிழந்தது குறித்தும், அந்த கால் அகற்றும் நிலை ஏற்பட்டது பற்றியும் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் தாக்கியதன் காரணமாக முன்னாள் விமானப்படை வீரரின் கால் செயலிழந்து அகற்றப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×