என் மலர்tooltip icon

    இந்தியா

    உயரமான கட்டிடத்தில் அந்தரத்தில் தொங்கி ஆபத்தான சாகசம்: இளம்பெண் கைது- வீடியோ
    X

    உயரமான கட்டிடத்தில் அந்தரத்தில் தொங்கி ஆபத்தான சாகசம்: இளம்பெண் கைது- வீடியோ

    • எந்தவித பாதுகாப்பு முன்னெச்சரிக்கையும் இன்றி இளம்பெண் உயரமான கட்டிடத்தில் இருந்து தொங்கிய காட்சி காண்போரை பதைபதைக்க வைத்தது.
    • குற்றத்திற்கு 6 மாதம் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

    புனே:

    சமூக வலைதளத்தில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் தனது உயிரையே பணயம் வைத்து ஆபத்தான வீடியோக்களை எடுத்து வெளியிடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அவ்வாறு எடுக்கப்படும் வீடியோக்கள் சில நேரங்களில் உயிரையே பறித்து விடுகின்றன.

    இதேபோல சமூக வலைதள பிரபலமாக விரும்பிய புனேயை சேர்ந்த மீனாட்சி சலுங்கே (வயது 23) என்ற இளம்பெண்ணும், அவரது ஆண் நண்பரான மிகிர் காந்தி(27) என்பவரும் இதேபோன்ற சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    புனே நகரில் உயரமான பல மாடி கட்டிடத்தின் உச்சிக்கு சென்ற மீனாட்சி சலுங்கே, தனது ஆண் நண்பரின் கைகளை பற்றிக்கொண்டு கட்டிடத்தின் விளிம்பில் அந்தரத்தில் தொங்கி சாகசத்தில் ஈடுபட்டார். எந்தவித பாதுகாப்பு முன்னெச்சரிக்கையும் இன்றி இளம்பெண் உயரமான கட்டிடத்தில் இருந்து தொங்கிய காட்சி காண்போரை பதைபதைக்க வைத்தது.

    இந்த காட்சிகள் இளம்பெண்ணும், அவரது நண்பரும் விரும்பியபடி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. ஆனால், இந்த வீடியோவை பார்த்த பலரும் மடத்தனமான சாகசத்தில் ஈடுபட்ட பெண்ணையும் அவரது நண்பரையும் கைது செய்ய வேண்டும் என போலீசாருக்கு கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து விசாரணை நடத்திய புனே போலீசார் சுயவிளம்பரத்திற்காக உயிரை பணயம் வைத்த இளம்பெண்ணையும், அவரது நண்பரையும் அதிரடியாக கைது செய்தனர். அதேநேரம் இந்த வீடியோவை எடுத்த 3-வது நபர் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இவர்கள் செய்த குற்றத்திற்கு 6 மாதம் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

    Next Story
    ×