என் மலர்tooltip icon

    இந்தியா

    பிறந்து 15 நாட்களான குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்
    X

    பிறந்து 15 நாட்களான குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்

    • பிரசவத்திற்கு பிறகு பெண்களின் மனநிலை பாதிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
    • குழந்தை பெற்ற பெண்களுக்கு குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் உறவினர்கள் பக்கபலமாக இருந்து கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

    உத்தரபிரதேச மாநிலம், மொரதாபாத்தை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

    கடந்த வெள்ளிக்கிழமை இரவு குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்தது. அப்போது குழந்தையின் தாய் குழந்தையை எடுத்துச் சென்று குளிர்சாதன பெட்டியில் வைத்து கதவை மூடினார். குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்ததை மறந்து விட்டார்.

    சிறிது நேரத்திற்கு பிறகு குளிர் தாங்காமல் குழந்தை அழுதது. குழந்தை அழும் சத்தத்தை கேட்ட வீட்டில் இருந்தவர்கள் குழந்தையை வீடு முழுவதும் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இறுதியாக குளிர்சாதன பெட்டியை திறந்த பார்த்த போது குழந்தை இருந்தது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் தாயிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பிரசவத்திற்கு பிறகு இளம்பெண்ணிற்கு லேசான மனநிலை பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து இளம்பெண்ணை சிகிச்சைக்காக மனநல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், பிரசவத்திற்கு பிறகு பெண்களின் மனநிலை பாதிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    பிரசவத்திற்கு பிறகு பல்வேறு வகையான தொற்றுக்கள் ரத்தப்போக்கு, உடல்நல பிரச்சனைகள் ஆகியவை ஏற்படுகிறது. மேலும் சோகம், கவலை, பயம், பதற்றம், தூக்கமின்மை, எரிச்சல் மற்றும் அமைதி இழப்புகளாலும் இது போன்ற பிரச்சனைகள் வருகின்றன.

    குழந்தை பெற்ற பெண்களுக்கு குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் உறவினர்கள் பக்கபலமாக இருந்து கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×