search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறுமி பலியான நிலையில் திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை கூண்டில் சிக்கியது
    X

    சிறுமி பலியான நிலையில் திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை கூண்டில் சிக்கியது

    • வனத்துறையினர் நரசிம்ம சுவாமி கோவில் அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர்.
    • குழந்தையை கொன்றது இதைவிட சிறிய சிறுத்தையாகத்தான் இருக்க முடியும்.

    திருப்பதி:

    திருப்பதி அலிபிரி நடைபாதையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நெல்லூரை சேர்ந்த லக்ஷிதா என்ற 6 வயது சிறுமி தனது பெற்றோருடன் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    நரசிம்ம சாமி கோவில் அருகே பெற்றோரை விட்டு சிறுமி முன்னாள் ஓடினார். மகள் படியேறி செல்வதை பெற்றோர் ரசித்தனர். அவர்கள் கண்பார்வையில் இருந்து சிறுமி தனியாக படிக்கட்டுகளில் ஓடினார்.

    அப்போது புதரில் இருந்த சிறுத்தை பாய்ந்து சிறுமியை கவ்வி சென்று விட்டது.

    மறுநாள் காலை நரசிம்ம சாமி கோவில் அருகே சிறுமி முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். அப்பகுதியில் சுற்றி தெரியும் சிறுத்தை சிறுமியை கொன்றது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து நரசிம்ம சாமி கோவில், காளி கோபுரம் உள்ளிட்ட இடங்களில் சிறுத்தை சுற்றி திரிந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் தெரிந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் நரசிம்ம சுவாமி கோவில் அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர். கூண்டின் அருகே கண்காணிப்பு கேமராவை பொருத்தி கண்காணித்து வந்தனர்.

    நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் சுமார் 5 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கியது.

    பிடிபட்ட சிறுத்தை மிகப்பெரியது. இது குழந்தையை கவ்வி சென்றிருந்தால் முழுவதுமாக சாப்பிட்டிருக்கும். குழந்தையை கொன்றது இதைவிட சிறிய சிறுத்தையாகத்தான் இருக்க முடியும்.

    எனவே மேலும் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.

    கூண்டில் சிக்கிய சிறுத்தையை திருப்பதியில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் வைத்து பராமரிப்பதா அல்லது அடர்ந்த வனப்பகுதியில் விடுவதா என வனத்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    மலைப்பாதை அருகே உள்ள வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன.

    நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடை பாதையில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

    பக்தர்கள் கூட்டமாக செல்ல வேண்டும் அடர்ந்த வனப்பகுதியில் செல்லும்போது கோவிந்தா கோஷம் எழுப்பியபடியே நடக்க வேண்டும்.

    இரவு நேரங்களில் பைக்கில் மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நடைபாதையில் கூண்டு வடிவிலான பாலம் அமைக்கவும் முடிவு செய்துள்ளனர். மத்திய மாநில அரசின் வனத்துறையினர் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×