என் மலர்
இந்தியா

'நான் இந்தியன்' - இனவெறி தாக்குதலால் உயிரிழந்த திரிபுரா மாணவரின் இறுதி வார்த்தைகள்!
- இந்தியர்கள் என்று நிரூபிக்க என்ன சான்றிதழைக் காட்ட வேண்டும்?
- மைக்கேல் உடல்நிலையும் மோசமாக உள்ளது
கடந்த 4ஆம் தேதி திரிபுராவின் உனகோட்டி மாவட்டத்தில் உள்ள நந்தநகரைச் சேர்ந்த ஏஞ்சல் சக்மாவும் (24), அவரது சகோதரர் மைக்கேல் சக்மாவும் ஒரு மதுபானக் கடைக்கு அருகிலுள்ள சாலையோர உணவகத்தில் உணவருந்த சென்றுள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த ஒரு குழு இவர்களை தடுத்து நிறுத்தி சீனர்கள் என்றுகூறி, இனரீதியாக வெறுப்பு வார்த்தைகளை கொட்டி வம்பிழுத்ததாக கூறப்படுகிறது. இதனை சகோதரர்கள் இருவரும் எதிர்த்து கேட்க, இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியுள்ளது.
"நாங்கள் சீனர்கள் அல்ல. நாங்கள் இந்தியர்கள். அதை நிரூபிக்க என்ன சான்றிதழைக் காட்ட வேண்டும்?" என்று மோதல் தீவிரமடைவதற்கு முன்பு ஏஞ்சல் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தக் கும்பல் கத்தி, கடா போன்ற கூர்மையான ஆயுதங்களை வைத்து ஏஞ்சலை கடுமையாக தாக்கியுள்ளது. தலையிலும், முதுகிலும் பலத்த காயமடைந்த ஏஞ்சல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பே சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார்.
தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏஞ்சல் இரண்டு வாரங்களுக்கும் மேலாக தொடர் சிகிச்சையில் இருந்தபோதும் நேற்று முன்தினம் உயிரிழந்தார். மைக்கேல் உடல்நிலையும் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அவரது குடும்பத்தினர் டிசம்பர் 10 ஆம் தேதி செலாகுய் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் இதுவரை ஐந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களில் இருவர் சிறுவர்கள், அவர்கள் சிறார் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அவ்னிஷ் நேகி, சவுர்யா ராஜ்புத், சூரஜ் குவாஸ், சுமித் மற்றும் ஆயுஷ் பரோனி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முக்கிய குற்றவாளி இன்னும் தலைமறைவாக உள்ளார். அவர் நேபாளத்திற்கு தப்பிச் சென்றிருக்கலாம் எனும் சந்தேகம் எழுந்துள்ளது. அவரைக் கைது செய்ய உதவுபவர்களுக்கு ரூ.25,000 பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய நபரைக் கண்டுபிடிக்க உதவுவதற்காக நேபாளத்திற்கு ஒரு போலீஸ் குழுவும் அனுப்பப்பட்டுள்ளது என திரிபுரா போலீசார் தெரிவித்துள்ளனர்.
திரிபுரா மாணவரின் கொலையை "மிகவும் தீவிரமாக" எடுத்துக் கொண்டுள்ளதாக உத்தரகண்ட் அரசு தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மாநிலத்தில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி எச்சரித்துள்ளார்.






