என் மலர்
இந்தியா

கின்னஸ் சாதனை நடன நிகழ்ச்சி: மேடையில் இருந்து தவறி விழுந்த காங். பெண் எம்.எல்.ஏ.
- 12 ஆயிரத்து 600 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி.
- தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடிகையும் நடன கலைஞருமான திவ்யா உன்னி தலைமையில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடை பெற்றது.
கின்னஸ் சாதனைக்காக 12 ஆயிரத்து 600 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை காண ஏராளமானோர் மைதானத்தில் திரண்டனர்.
கேரள மந்திரி சஜி செரியன், திருக்காக்கரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. உமா தாமஸ் மற்றும் சிலர் வி.ஐ.பி. காலரியில் இருந்து நிகழ்ச்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக உமா தாமஸ் எம்.எல்.ஏ., மேடையில் இருந்து தவறி விழுந்தார். சுமார் 18 அடி உயரத்தில் இருந்து அவர் விழுந்ததில் தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பாலரிவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.அவரை வென்டிலேட்டரில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கோட்டயம் மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான டாக்டர்கள் குழு விரைந்து வந்து சிகிச்சை முறையை கேட்டறிந்தது.
சுமார் 2 மணி நேரம் அவர்கள், உமா தாமஸ் எம்.எல்.ஏ. உடல்நிலையை ஆய்வு செய்தனர். அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு, நுரையீரலில் ரத்தம் உறைதல், எலும்புகள் முறிவு உள்ளிட்ட பலத்த காயங்கள் இருப்பதாகவும், அதற்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து பாலாரிவட்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்காலிக மேடையின் முன்பக்கத்தில் ஒருவர் நடக்க கூட இடவசதி செய்யப்படவில்லை.
அங்கு கட்டியிருந்த கயிறு வலுவாக இருப்பதாக கருதி பிடித்த போது, உமாதாமஸ் எம்.எல்.ஏ. தவறி விழுந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






