search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    2000 முதல் 2017 வரை... ஜி.எஸ்.டி. வளர்ந்த விதம்: அடித்தளம் போட்ட வாஜ்பாய்
    X

    2000 முதல் 2017 வரை... ஜி.எஸ்.டி. வளர்ந்த விதம்: அடித்தளம் போட்ட வாஜ்பாய்

    • ஜி.எஸ்.டி.க்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான குழு 2000-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
    • 2014-ம் ஆண்டு பா.ஜ.க. வெற்றி பெற்றது.

    இந்தியாவில், பா.ஜ.க.வை சேர்ந்த வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான் ஜி.எஸ்.டி.க்கான விதை தூவப்பட்டது. ஜி.எஸ்.டி.க்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான குழு, அப்போது மேற்கு வங்காள நிதி மந்திரியாக இருந்த அசிம் தாஸ்குப்தா தலைமையில் 2000-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 2003-ம் ஆண்டு விஜய் கேல்கர் கமிட்டி, வரி சீர்திருத்தத்தை பரிந்துரைத்ததோடு, ஜி.எஸ்.டி.யின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக்‌ கூறியது.

    மறைமுக வரிக்கு மாற்றாக ஜி.எஸ்.டி.யை கொண்டு வரவும் பரிந்துரை செய்தது. 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அப்போது மத்திய நிதி மந்திரியாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம் 2006-07 பட்ஜெட்டில், 2010-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, 2008-ம் ஆண்டு ஜி.எஸ்.டி.யை செயல்படுத்த மாநில நிதி மந்திரிகளை உள்ளடக்கிய அதிகாரமளிக்கும் வகையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, அதன் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

    2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்பதற்காக ஜி.எஸ்.டி. விவாத அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஜி.எஸ்.டி. வரியின் அடிப்படை கட்டமைப்புகளை அப்போதைய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி அறிவித்தார். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்தது. ஜி.எஸ்.டி.க்கு அடித்தளம் இடும் வகையில் வணிக வரிகளை கணினி மயமாக்கும் திட்டம் 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.

    எனினும், ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவதற்கான தேதி 2011-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி என மாற்றியமைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் கீழவையில் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவதற்கு 115-வது சட்ட திருத்த மசோதாவை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது. 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நிதி மந்திரி மற்றும் மாநில நிதி மந்திரிகள் கூட்டத்தில், 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் ஜி.எஸ்.டி. தொடர்பான விவகாரங்களை பேசி முடித்துக்கொள்ளவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

    2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பாராளுமன்ற நிலைக்குழு ஜி.எஸ்.டி. மசோதாவில் திருத்தம் செய்ய பரிந்துரைத்தது. 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம், அப்போது குஜராத் முதல்-மந்திரியாக இருந்த, இப்போதைய பிரதமர் நரேந்திர மோடி ஜி.எஸ்.டி. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். 2014-ம் ஆண்டு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார். கீழவையில் இருந்த ஜி.எஸ்.டி. மசோதாவும் காலாவதியானது.

    2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 122-வது சட்ட திருத்த மசோதாவாக பாராளுமன்றத்தின் கீழவையில் ஜி.எஸ்.டி. மசோதாவை மீண்டும் கொண்டு வந்தது. அப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சி, பாராளுமன்ற நிலைக்குழு மீண்டும் அந்த மசோதாவை ஆய்வு செய்ய வலியுறுத்தியது. 2015-ம் ஆண்டு மே மாதம் பாராளுமன்ற கீழவை ஒப்புதல் கொடுத்ததோடு, மேலவைக்கும் அனுப்பப்பட்டது.

    2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், மேலவையில் இந்த மசோதா பெரும்பான்மையை பெறவில்லை. இதையடுத்து கீழவை மற்றும் மேலவையின் உறுப்பினர்கள் அடங்கிய இணைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின்னர் மேலவையில் ஜி.எஸ்.டி. மசோதா பெரும்பான்மையான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் மாதம் ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தது. அதே மாதம் ஜி.எஸ்.டி. கவுன்சிலும் அமைக்கப்பட்டது. அதன் முதல் கூட்டமும் நடந்தது.

    நவம்பர் மாதம் 4 வரி விகிதங்கள் அதாவது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என அமல்படுத்தப்படும் என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் தெரிவித்தது. மேலும் வரி செலுத்துபவர்கள் பதிவு செய்வதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டது. 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம், ஜூலை 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்படும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

    பிப்ரவரி மாதம் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடுகளை ஈடுகட்டுவதற்கான வரைவினை ஜி.எஸ்.டி. கவுன்சில் இறுதி செய்தது. மார்ச் மாதம் மத்திய மந்திரி சபை ஜி.எஸ்.டி. மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. கீழவையில் ஜி.எஸ்.டி. மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. மே மாதம், சுமார் 1,200-க்கும் மேற்பட்ட சரக்கு மற்றும் சேவைகள் 5 முதல் 28 சதவீத வரி விகித வரம்புக்குள் கொண்டு வரப்பட்டன.

    ஜூன் மாதம், ஜம்மு-காஷ்மீரை தவிர்த்து அனைத்து மாநிலங்களும் மாநில ஜி.எஸ்.டி. சட்டத்தை இயற்றின. அதே மாதம் 30-ந்தேதி (ஜூன்) நள்ளிரவு முதல், ஜி.எஸ்.டி. வரி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை தவிர்த்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் ஜூலை 7-ந்தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலமும் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தும் வகையில் சட்டம் இயற்றியது.

    Next Story
    ×