என் மலர்
இந்தியா

மோசமான வானிலையின்போது விமான இயக்கத்துக்கான வழிகாட்டுதல்கள் மாற்றம்
- மோசமான வானிலையின்போது, நேர கட்டுப்பாட்டை விட பாதுகாப்புக்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
- கணிக்க முடியாத சூழ்நிலை நிலவினால், விமானத்தை வேறு நகரங்களுக்கு திருப்பிவிட வேண்டும்.
புதுடெல்லி:
அகமதாபாத் விமான விபத்து மற்றும் மோசமான வானிலையால் கேதார்நாத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து போன்ற சம்பவங்களால், மோசமான வானிலையின்போது விமானங்களை இயக்குவதற்கான வழிகாட்டுதல்களில் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் மாற்றம் செய்துள்ளது.
இதுகுறித்து அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இயக்குனரகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மோசமான வானிலையின்போது, நேர கட்டுப்பாட்டை விட பாதுகாப்புக்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். இடியுடன் கூடிய மழை, கொந்தளிப்பு, பார்ப்பதில் இடையூறு போன்ற கணிக்க முடியாத சூழ்நிலை நிலவினால், விமானத்தை வேறு நகரங்களுக்கு திருப்பிவிட வேண்டும்.
இரவு நேர பயணத்தின்போது, மழை பெய்தாலோ அல்லது ஓடுபாதை ஈரமாக இருந்தாலோ பார்ப்பதில் இடையூறு ஏற்பட்டால், துல்லியமாக தரை இறக்க முடியுமா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மோசமான வானிலையின்போது, பயணிகள், ஊழியர்கள் மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடன் முன்கூட்டியே தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






