டெல்லி போலீஸ் நோட்டீஸ்... முதல்முறையாக புத்தகம் குறித்து வாய்திறந்த முகுந்த் நரவனே!

டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு பதிப்பகத்திற்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இந்தப் புத்தகத்தில் லடாக் எல்லை விவகாரம் மற்றும் அக்னிவீர் திட்டம் போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லி போலீஸ் நோட்டீஸ்... முதல்முறையாக புத்தகம் குறித்து வாய்திறந்த முகுந்த் நரவனே!
Published on

இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எழுதியப் புத்தகம் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி'. இந்தப் புத்தகம்தான் கடந்தவாரம் முழுவதும் நாடாளுமன்றத்தின் பேச்சுப்பொருள். இப்புத்தகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த இந்தியா - சீனா தாக்குதலில், மத்திய அரசு ராணுவத்திற்கு ஒத்துழைக்காதது குறித்து நரவனே எழுதியுள்ளதாக ராகுல் காந்தி மக்களவையில் தெரிவித்திருந்தார்.

இந்த செய்தி நாடாளுமன்றம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தப் புத்தகம் இந்தியா முழுவதும் கவனத்தைப் பெற்றது. இதனிடையே தன்னை வைத்து ஒரு பெரும் அரசியலே நடக்கும்நிலையில் எதுகுறித்தும் வாய்திறக்காமல் இருந்தார் முன்னாள் ஜெனரல் முகுந்த் நரவனே. இந்நிலையில் முதல்முறையாக இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதாவது இப்புத்தகத்தின் பதிப்பகமான பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா இந்த சர்ச்சைகள் தொடர்பாக ஒரு விளக்கம் அளித்தது. அதில், "நாங்கள் இந்தப் புத்தகத்தை எந்த வகையிலும் வெளியிடவில்லை. இந்தப் புத்தகத்தை வெளியிடும் உரிமையும் எங்களிடம்தான் இருக்கிறது" என்று தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இதனை மறுபதிவிட்டு, "இதுதான் புத்தகத்தின் தற்போதைய நிலை" எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதன்மூலம் தனது புத்தகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதையும், விற்பனைக்கு வரவில்லை என்பதையும் நரவனே உறுதிப்படுத்தியுள்ளார்.  புத்தக வெளியீடு தாமதமாவது குறித்து ஒரு விழாவில் பேசிய அவர், இது "பழைய ஒயின் காலப்போக்கில் அதன் மதிப்புக் கூடுவது போன்றது" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். மேலும் புத்தகம் எழுதுவது மட்டுமே தனது பணி என்றும், அதற்கு பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி பெறுவது பதிப்பகத்தின் பொறுப்பு என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தப் புத்தகத்தில் லடாக் எல்லை விவகாரம் மற்றும் அக்னிவீர் திட்டம் போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தப் புத்தகம் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆய்வில் உள்ளது. இதற்கிடையில், புத்தகத்தின் சில பகுதிகள் கசிந்ததாகக் கூறப்படுவது குறித்து டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளியிடப்படாத புத்தகத்தின் சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவியது குறித்து விளக்கம் கோரி, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு பதிப்பகத்திற்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com