search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜெனிவா மாநாட்டில் பேச்சால் சர்ச்சை- கைலாசா பெண் தூதர் விளக்கம்
    X

    ஜெனிவா மாநாட்டில் பேச்சால் சர்ச்சை- கைலாசா பெண் தூதர் விளக்கம்

    • இந்தியாவை கைலாசா உயர்வாக கருதுகிறது.
    • ஐக்கிய நாடுகள் சபையில் நான் கூறிய கருத்துக்களை தவறாக புரிந்து கொண்டு சிலர் திரித்து வெளியிட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    சாமியார் நித்யானந்தா உருவாக்கியதாக அறிவித்த கைலாசா நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்ததாக கைலாசா நாட்டின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர்.

    இந்நிலையில் கடந்த மாதம் 22-ந்தேதி ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கைலாசா சார்பில் ஐ.நா.வுக்கான தூதர் என அழைக்கப்படும் விஜயபிரியா நித்யானந்தா மற்றும் கைலாசா நாட்டின் பெண் பிரதிநிதிகள் சிலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் விஜயபிரியா நித்யானந்தா பேசும்போது, ஆன்மீக தலைவரான நித்யானந்தாவை கொடுமைப்படுத்துகின்றனர் என கூறியதோடு, அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன.

    இந்நிலையில் ஐ.நா.வின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் தூதர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மனித உரிமை கூட்டத்தில் கைலாசா நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    தொண்டு அமைப்புகள், பொதுமக்கள் என யாராக இருந்தாலும் அந்த 2 நாள் கூட்டத்தில் பங்கேற்று தகவலை பதிவு செய்யலாம். கைலாசா சார்பில் அவர்கள் பேசிய உரை ஏற்று கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் விஜய பிரியா நித்யானந்தா தனது பேச்சு தொடர்பாக ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், பகவான் நித்யானந்தா பரமசிவம் பிறந்த இடத்தில் சிலரால் துன்புறுத்தப்பட்டார் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தியாவை கைலாசா உயர்வாக கருதுகிறது. இந்தியாவை தனது குரு பீடமாக மதிக்கிறது என கூறியுள்ளார்.

    மேலும் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் ஐக்கிய நாடுகள் சபையில் நான் கூறிய கருத்துக்களை தவறாக புரிந்து கொண்டு சிலர் திரித்து வெளியிட்டுள்ளனர். நித்யானந்தா மற்றும் கைலாசாவுக்கு எதிராக தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம் என கூறியுள்ளார்.

    Next Story
    ×