search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குழந்தைகள் விஷயத்தில் அரசு எடுத்த அதிரடி முடிவு- மன உளைச்சலில் உயிரைவிட்ட தாய்
    X

    குழந்தைகள் விஷயத்தில் அரசு எடுத்த அதிரடி முடிவு- மன உளைச்சலில் உயிரைவிட்ட தாய்

    • 6 மாத காலங்கள் சிகிச்சை பெற்றும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை
    • மற்றொரு குழந்தையையும் பாதுகாப்பு அமைப்பினர் அழைத்து சென்றனர்

    ஆஸ்திரேலியாவில், மென்பொருள் துறையில் பணிபுரிந்து வந்தவர் பிரியதர்ஷினி பாட்டீல் எனும் 40-வயது இந்திய பெண்மணி. இவர் தனது கணவர் மற்றும் இரண்டு பதின்பருவ குழந்தைகளுடன் பல ஆண்டுகளாக அங்கு வசித்து வந்தார்.

    சுமார் 3 வருடங்களுக்கு முன் அவரது இரு குழந்தைகளில் அமர்த்யா என்ற குழந்தைக்கு அல்சரேடிவ் கொலைடிஸ் எனப்படும் உணவுப்பாதை அழற்சி நோய் தாக்கியது. இதனால் அவர் அந்நாட்டில் நியூ சவுத் வேல்ஸ் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆறு மாத காலங்கள் சிகிச்சை பெற்றும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை.

    இந்த மருத்துவமனையின் சிகிச்சை மற்றும் கவனிப்பில் அதிருப்தியடைந்த பிரியதர்ஷினியும், அவரது கணவரும் வேறு மருத்துவமனைக்கு தங்கள் குழந்தையை மாற்றி கொள்ள கோரிக்கை வைத்தனர். ஆனால், அவரது கோரிக்கையை மருத்துவமனை ஏற்க மறுத்தது.

    அத்துடன் நிற்காமல் ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகள் நல மற்றும் பாதுகாப்பு சேவை அமைப்பிற்கு தகவல் அளித்தது. அந்த அமைப்பை சேர்ந்த அதிகாரிகளிடம், மருத்துவர்கள், குழந்தையின் உடல்நிலை சீர்கேட்டிற்கு பெற்றோரின் கவனிப்பின்மைதான் காரணம் என குற்றம் சாட்டினர்.

    இதன் தொடர்ச்சியாக, அந்த அமைப்பின் சார்பாக சமூக பணியாளர்கள் பிரியதர்ஷினி தம்பதியினரின் வீட்டை ஆய்வு செய்து சோதனையிட்டனர். அவர்கள் அளித்த 7 அறிக்கைகளின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக அந்நாட்டு சட்டத்தின்படி உடல்நிலை பாதிக்கப்பட்ட குழந்தையையும், இதே தம்பதியினரின் 18 வயது தாண்டிய மற்றொரு குழந்தையையும், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் தங்கள் பொறுப்பில் அழைத்து சென்றனர்.

    இதை எதிர்த்து நீண்ட போராட்டம் நடத்தி வந்த பிரியதர்ஷினி, இம்மாத தொடக்கத்தில் தன் தந்தையை காண இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி நகருக்கு வந்தார்.

    3 ஆண்டுகால போராட்டத்தில் பலன் ஏதும் இல்லாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த பிரியதர்ஷினி, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகர நீதி துறை தனது வாழ்க்கையையும், குடும்பத்தையும் சீரழித்து விட்டதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, தன் தந்தை வீட்டில் ஐந்து தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.

    இச்சம்பவம் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்திய வெளியுறவு துறை இந்த வழக்கில் தலையிட்டு குழந்தைகளை ஆஸ்திரேலிய அரசிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டன. உயிரிழந்த பிரியதர்ஷினி குடும்பத்திற்கு ஆஸ்திரேலிய வெளியுறவு துறை அனுதாபங்களை தெரிவித்தது.

    பிரியதர்ஷினியின் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ள அவரது கணவருடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அரசாங்கம், இந்த வழக்கை மறுபரிசீலனை செய்ய போவதாக தெரிவித்திருக்கிறது.

    Next Story
    ×