என் மலர்
இந்தியா

கார் ஆற்றுக்குள் கவிழ்ந்ததில் 2 டாக்டர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
- டிரைவர் சரியாக சாலையை கவனிக்காததால் அங்குள்ள ஆற்றில் கார் கவிழ்ந்தது.
- நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி நடைபெற்றது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கொடுங்கலூரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றியவர் அத்வைத்.
இவரது பிறந்தநாள் விழாவை நண்பர்கள் நேற்று கொண்டாடினர். இதன் ஒரு பகுதியாக நேற்று இரவு தன்னுடன் பணியாற்றும் 2 டாக்டர்கள், ஒரு எம்.பி.பி.எஸ். மாணவர் மற்றும் ஆண் செவிலியர் ஆகியோரை காரில் வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
நள்ளிரவு வரை பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், அதிகாலையில் புறப்பட்டுள்ளனர். இந்தக் கார் கோதுருத் என்ற இடத்தில் வந்தபோது, டிரைவர் சரியாக சாலையை கவனிக்காததால் அங்குள்ள ஆற்றில் கார் கவிழ்ந்தது.
விபரீதத்தை உணர்ந்த காரில் இருந்தவர்கள் தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். இதனைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
நீச்சல் வீரர்களும் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி நடைபெற்றது. 3 பேர் மீட்கப்பட்ட நிலையில், 2 பேரின் கதி என்ன என்று தெரியாத நிலை இருந்தது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்ற நிலையில், மற்ற 2 பேரின் உடல்களும் ஆற்றில் மிதந்தன. அந்த உடல்களை நீச்சல் வீரர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பலியானது பிறந்தநாள் கொண்டாடிய டாக்டர் அத்வைத் மற்றும் மற்றொரு டாக்டர் ஆஷிஸ் என தெரியவந்தது.
ஆற்றில் மூழ்கிய காரில் இருந்து மீட்கப்பட்ட எம்.பி.பி.எஸ். மாணவர் கூறுகையில், காரை ஓட்டியவர் கூகுள் மேப்பை பயன்படுத்தி ஓட்டியதாகவும், தாங்கள் சென்ற சாலை திடீரென முடிவுக்கு வந்ததால் நிலைதடுமாறி ஆற்றுக்குள் கார் கவிழ்ந்ததாகவும் தெரிவித்தார்.






