என் மலர்
இந்தியா

ஆர்ஜேடியை விட குறைவான வாக்குகள் பெற்ற பாஜக, ஜேடியு - பீகார் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!
- மொத்த வாக்குளில் 6.65 லட்சம் வாக்குகள் நோட்டாவுக்குச் சென்றுள்ளது.
- பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் 3.44 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு -பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
கூட்டணியில் 101 இடங்களில் போட்டியிட்ட பாஜக 89 இடங்களிலும், 101 இடங்களில் போட்டியிட்ட ஜேடியு 85 இடங்களிலும், 29 இடங்களில் போட்டியிட்ட லோக் ஜனசக்தி 19 இடங்களிலும் இதர கூட்டணி கட்சிகள் 9 இடங்களிலும் வென்றன.
மறுபுறம் ஆர்ஜேடி - காங்கிரசின் மகபந்தன் கூட்டணி 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணியில் 143 இடங்களில் போட்டியிட்ட ஆர்ஜேடி 25 இடங்களிலும், 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களிலும் வென்றுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் 3 இடங்களில் வென்றுள்ளன. தனித்துப் போட்டியிட்ட ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் 5 இடங்களில் வென்றுள்ளது.
இந்நிலையில் பீகார் தேர்தலில் கட்சிகள் பெற்ற மொத்த வாக்கு சதவீதம் வெளியாகி உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 20.08 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இது கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அக்கட்சி பெற்றதை விட 0.5 சதவீதம் அதிகம் ஆகும்.
அதே கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 19.25 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் உயர்வாகும்.
மகபந்தன் கூட்டணியில், தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 23 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 0.11 சதவீதம் குறைவாகும்.
அதே கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 8.71 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 0.80 சதவீதம் குறைவு ஆகும். பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் 3.44 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
அதேபோல் 243 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான மொத்த வாக்குளில் 6.65 லட்சம் வாக்குகள் (1.81 சதவீதம்) நோட்டாவுக்குச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 2020-இல் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தோ்தலில் 7.06 லட்சம் வாக்காளா்கள் (1.68 சதவீதம்) நோட்டாவுக்கு வாக்களித்தனா்.
வாக்கு சதவீதம் என்ற முறையில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி அதிக வாக்குகளை பெற்றிருந்தபோதும் அதன் வெற்றி பெற்ற பெற்ற இடங்களின் எண்ணிக்கை கடந்த தேர்தலில் 75 ஆக இருந்த நிலையில் இந்த தேர்தலில் 25 ஆக சுருங்கி உள்ளது.
பாஜக, ஜேடியு தலா 101 இடங்களில் போட்டியிட்ட நிலையில் ஆர்ஜேடி 143 இடங்களில் போட்டியிட்டதால் அதன் வாக்கு சதவீதம் கூடுதலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.






