என் மலர்
இந்தியா

கேரளாவில் பா.ஜ.க. முன்னேற்றம் குறித்து கவலை தெரிவித்த காங்கிரஸ் தலைவர்கள்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குழு அமைத்து ஆலோசனை நடத்தியது.
- பா.ஜ.க.வின் முன்னேற்றம் ஒரு தற்காலிக நிகழ்வு மட்டுமே.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் கடந்த 2019 தேர்தலைப்போன்றே காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. அங்குள்ள 20 தொகுதிகளில் 18 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது.
மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி மற்றும் பா.ஜ.க. தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. இந்த படுதோல்வி கம்யூனிஸ்ட்டு கட்சிகளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தாலும், பா.ஜ.க.வுக்கு மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது.
காரணம் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ்கோபி வெற்றி பெற்றதன் மூலம், கேரளாவில் முதன்முதலாக கால் பதித்துவிட்ட பெருமையை பா.ஜ.க. பெற்றுவிட்டது. அது மட்டுமின்றி கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலை விட தற்போதைய தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது.
கேரளாவில் கால் பதித்து விட்டது, வாக்கு சதவீதம் அதிகரித்தது உள்ளிட்ட இரு விஷயங்களே பா.ஜ.க.வுக்கு மகிழ்ச்சியை அளித்தது. பா.ஜ.க.வின் இந்த எழுச்சி கேரள மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள கம்யூனிஸ்டுகள், 18 மக்களவை தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தங்களது கட்சி படுதோல்வி அடைவதற்கான காரணங்களை கண்டறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குழு அமைத்து ஆலோசனை நடத்தியது. அந்த குழு வெளியிட்ட அறிக்கையின் படி வருங்காலங்களில் சிறப்பாக செயல்பட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
இந்தநிலையில் கேரளாவில் பா.ஜ.க.வின் முன்னேற்றத்துக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்களும் கவலை தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு நிர்வாகிகள் கூட்டம் சுல்தான் பத்தேரியில் நடந்து வருகிறது.
அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர்கள் தான், நிர்வாகிகளின் மத்தியில் கவலை தெரிவித்து பேசியிருக்கின்றனர்.
நிர்வாகிகள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பேசும்போது, 'கேரள மாநிலத்தில் பா.ஜ.க.வின் முன்னேற்றம் ஒரு தற்காலிக நிகழ்வு மட்டுமே. காங்கிரஸ் தலை வர்கள் மற்றும் தொண் டர்கள் முறையான அர்ப் பணிப்புடன் செயல்படு வதன் மூலம் இது எளிதில் மாறும்' என்று தெரிவித்தார்.
மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் பேசும் போது, 'கேரள மாநில மக்களவை தேர்தலில் 11 சட்டமன்ற தொகுதிகளில் பா.ஜ.க. முதலிடம் பிடித்ததை குறிப்பிட்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும் அவர் பேசியதாவது:-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வாக்குகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக மாறும் சூழ்நிலை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கூட்டு முயற்சியின் மூலம் அந்த வாக்குகளை மீண்டும் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு கொண்டுவர வேண்டும்.
அடிமட்ட தொழிலாளர்கள், சாமானிய மக்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் வகையில் தொழிலாளர்களின் பூத் அளவிலான செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டும்.
சி.பி.எம்.-ன் பின்னடைவுக்கு காரணம் சாமானியர்களுடன் அவர்களுக்கு தொடர்பு இல்லாதது தான். காங்கிரசுக்கு இது நடக்கக்கூடாது. அவர்களின் தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சதீசன் பேசும் போது, 'எதிர்வரும் நாட்களில் நடைபெற உள்ள தேர்தலை எதிர்கொள்ள கட்சியை நன்கு ஒழுங்கமைக்க வேண்டும். நமது பணி சமூகத்தில் அனைத்து மட்டங்களிலும் சென்றடைய வேண்டும். அவர்களை பிரநிதிதித்துவப் படுத்துவோம் என்று மக்கள் நினைக்கும் போது தான் நமக்கு வாக்களிப்பார்கள் . சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் உள்வாங்க வேண்டும்' என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா பேசியதாவது:-
மாநிலத்தில் பாரதிய ஜனதாவின் முன்னேற்றத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மீது பினராய் விஜயன் எடுத்த மென்மையான நிலைப்பாடு தான் சி.பி.எம்.-ன் வாக்குகள் பா.ஜ.க.வுக்கு செல்வதற்கு காரணமாக அமைந்தது.
மேற்குவங்கம் மற்றும் திரிபுராவில் நடந்தது கேரளாவிலும் மீண்டும் மீண்டும் நடந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் சாமானியர்களின் உண்மையான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் விழிப்புடன் இருக்கவேண்டும். அப்போது தான் மக்கள் நம் கட்சியின் மீது நம்பிக்கை வைப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.






