என் மலர்
இந்தியா

பீகார் சட்டசபை தேர்தல்- காலை 11 மணி வரை 27.7 சதவீத வாக்குப்பதிவு
- 18 முதல் 19 வயதுடைய முதல் முறை வாக்காளர் எண்ணிக்கை 7 லட்சத்து 38 ஆயிரம் பேர் ஆகும்.
- மொத்தம் 45,341 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. இதில் முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த 121 தொகுதிகளிலும் 1374 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மொத்தம் 119 கட்சிகள் 851 வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளனர். 463 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் ஆவர். பெண் வேட்பாளர்கள் 122 பேரும் களத்தில் உள்ளனர்.
இவர்களின் வெற்றி-தோல்வியை 3.75 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1.98 கோடி பேர், பெண் வாக்காளர்கள் 1.76 கோடி பேர்.
இவர்களில் 10.72 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள் ஆவர். 18 முதல் 19 வயதுடைய முதல் முறை வாக்காளர் எண்ணிக்கை 7 லட்சத்து 38 ஆயிரம் பேர் ஆகும். இவர்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 45,341 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், 121 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 27.7 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.






